Thursday, July 25, 2013

ஒபாமா, இனம் மற்றும் வர்க்கம். Patrick Martin

வெள்ளியன்று ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகையின் செய்தியாளர் அறையில் கவனமாக திட்டமிட்டு நடத்திய “எதிர்பாராத” சந்திப்பின் போது அளித்த அறிக்கையானது, சென்ற வாரத்தில் டிரேவோன் மார்டினை கொலை செய்தவர் விடுவிக்கப்பட்டது தொடர்பாய் எழுந்திருக்கும் வெகுஜன கோபத்தைச் சுரண்டிக் கொள்ளும் திட்டவட்டமான அரசியல் இலாபத்திற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியே ஆகும். 17 வயது ஆபிரிக்க அமெரிக்க இளைஞரான மார்ட்டின் 2012 பிப்ரவரியில் குடியிருப்பு பகுதி தன்னார்வ கண்காணிப்பாளரான ஜோர்ஜ் சிம்மர்மானால் சுடப்பட்டு மரணமடைந்தார்.

ஒபாமா நிறைய நோக்கங்களை சாதிக்க முனைந்தார். தீர்ப்பு குறித்து தேசம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் எழுந்த வேளையில், பலியானவரின் குடும்பத்தின் பக்கம் தன்னை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் அவரது குறிப்புகள் அமைந்திருந்தன. அதே சமயத்தில், ஏறக்குறைய ’குற்றமேயில்லை’ என்று கூறுகின்ற ஒரு தீர்ப்புக்கு உறுதியளித்த ஒரு குற்றவியல் நீதியமைப்பு முறை மீது தேய்ந்து செல்லும் மக்களின் நம்பிக்கைக்கு முட்டுக் கொடுப்பதற்கும் அவர் முனைந்தார். விசாரணை மற்றும் தீர்ப்புக்கு நற்சான்றிதழ் வழங்கிய அவர் இந்த வழக்கில் கூட்டரசின் மேலதிக நடவடிக்கை ஏதும் இருக்காது என்பதையும் சூசகம் செய்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இத்துயர சம்பவத்தின் இனவாத அம்சங்கள் மீது பிரத்தியேக கவனம் அளித்து அதன் மூலம் கீழமைந்த சமூக மற்றும் வர்க்கப் பிரச்சினைகளான வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வின் அதிகரிப்பு, தனிநபர் வன்முறை மற்றும் வலது-சாரி கண்காணிப்புமுறை ஆகியவை திட்டமிட்டு ஊக்குவிப்படுவது ஆகியவற்றின் மீது சிந்தனை சென்று விடாமல் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு ஒபாமா முனைந்தார்.

உலகின் மிகவும் சக்திவாய்ந்ததும் மூர்க்கமானதுமான இராணுவத்தின் தளபதிகளுக்கான தலைவர் பலியானவரின் வேடத்தை அணிந்து கொண்டு தொடங்குகிறார். “டிராய்வோன் மார்ட்டின் 35 வருடங்களுக்கு முன்பாக இருந்த நானாகவும் கூட இருக்கலாம்” என்றார் அவர்.

அவரது 18 நிமிட உரையாடலின் போது “ஆபிரிக்க அமெரிக்க சமுதாயம்” என்று திரும்பத் திரும்ப பலமுறை அவர் கூறுகிறார். அமெரிக்காவை இன அடிப்படையிலான “சமுதாயங்களின்” ஒரு கலவையாக சித்தரிப்பது அடிப்படையாய் பிற்போக்குத்தனம் வாய்ந்ததாகும். அவ்வாறு செய்வதற்கு பிரதான காரணம் அமெரிக்காவின் அத்தனை இன மற்றும் நிறப் பிரிவுகளூடாகவும் குறுக்கே ஓடுகின்ற ஆழமான வர்க்கப் பிளவுகளை மறைப்பதற்கே ஆகும்.

இப்பேச்சு அல் ஷார்ப்டன், ஜெசி ஜாக்சன் மற்றும் ஒபாமா போன்ற சிறப்பதிகாரம் பெற்ற பெரும்செல்வந்தர்களை, அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியாலும் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆபிரிக்க அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது பாரிய எண்ணிக்கையுடன் ஒன்றாக நிறுத்துகிறது.

ஒபாமா, டிரேவோன் மார்ட்டினுக்காக பேசவில்லை. மார்ட்டின் குடும்பத்திற்கும் அத்தனை நிறங்கள் மற்றும் இனங்களையும் சேர்ந்த பரந்த உழைக்கும் மக்களின் தொகுதிக்கும் ஆழமான குரோதம் படைத்த நலன்களை கொண்ட வேறு ஒரு சமூக வர்க்கத்துக்காக அவர் பேசுகிறார்.

ஒபாமா இக்கருத்துகளை தெரிவித்த அதேதினத்தில் தான், சென்ற வாரத்தில் திவால்நிலைக்குள் தள்ளப்பட்ட டெட்ராயிட் நகருக்கு கூட்டரசாங்கம் உதவிக்கு வர வேண்டும் என்பதான கருத்துகள் எதனையும் வெள்ளை மாளிகை பரிசீலனையின்றி நிராகரித்தது. நகரின் நூறாயிரக்கணக்கிலான உழைக்கும் மக்கள், இவர்களில் அநேகமானோர் ஆபிரிக்க அமெரிக்கர்கள், பொதுச் சேவைகளிலும், வேலைகளிலும், மற்றும் வாழ்க்கைத் தரங்களிலும் மேலதிக துயரகரமான வெட்டுகளை முகம் கொடுத்து நிற்கின்றனர். வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு டிரில்லியன் கணக்கிலும், வாகன உற்பத்தித்துறை நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு பத்து பில்லியன் கணக்கிலும் வாரியிறைத்த ஒபாமா நிர்வாகம் டெட்ராயிட் மக்களுக்கு எதையுமே வழங்கவில்லை.

ஒபாமா இனரீதியில் மட்டும் பற்றிப்பிடித்துக் கொள்வதற்கு இன்னுமொரு பிற்போக்குத்தன பரிணாமமும் இருக்கிறது. சிமர்மேன் விடுவிக்கப்பட்டதில் “ஆபிரிக்க அமெரிக்க சமுதாயத்தின்” வருத்தம் என்று அவர் குறிப்பிடுகையில், ஒரு கறுப்பு இளைஞர் எந்தவொரு குற்றமும் செய்யாத நிலையில், பின் தொடரப்பட்டு கொல்லப்பட்டு, அவரை கொன்றவரும் தண்டனையேதுமின்றி விடுவிக்கப்படும் நிலையில், ஏதோ ஆபிரிக்க அமெரிக்க சமுதாயத்தினர் மட்டும் தான் கொந்தளிப்பார்கள் என்பது போன்ற தொனி இருக்கிறது. உண்மையில் இந்த விசாரணையின் முடிவு மக்களின் பரந்த அடுக்குகளுக்கு உளைச்சல் தருவதாக இருந்திருக்கிறது.

டிரேவோன் மார்ட்டின் விவகாரத்தில் ஒபாமாவின் தலையீடு எல்லை கடந்த அரசியல் முக்கியத்துவத்தை கொண்ட ஒரு நிகழ்வு என்று பெருநிறுவனக் கட்டுப்பாட்டு ஊடகங்களால் பாராட்டப் பெற்றது. ஜனாதிபதி தனது உள்மனதின் ஆழமான உணர்வுகளை கோடிட்டுக் காட்டியதாகவும், அவரது அரசியல் “தைரிய”த்தையும் “தார்மீக தலைமைப் பண்பை”யும் எடுத்துக் காட்டியிருப்பதாகவும் ஞாயிறு காலை தொலைக்காட்சி விவாதங்களின் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

என்னவொரு சிடுமூஞ்சித்தனம்! இந்த அரசாங்கம் தான் தனது அரசியல் விரோதிகள் கடல் கடந்து இருந்தாலும், அவர்கள் அமெரிக்க குடிமக்களாகவே இருந்தாலும், அவர்களை ஆளில்லா விமானங்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளைக் கொண்டு கொல்வதற்கான தனது “உரிமை”யை திட்டவட்டமாக உறுதிப்படுத்தி வந்திருக்கிறது. இந்த அரசாங்கம் தான் ஒட்டுமொத்த உலக மக்களது தகவல் தொடர்புகளை திட்டமிட்டு வேவு பார்ப்பதில் ஈடுபட்டிருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒருமுறை குறிப்பிட்டதைப் போல அமெரிக்க அரசாங்கம் தான் இப்பூகோளத்தில் வன்முறையின் மிகப் பெரும் மூலவளமாக இருக்கிறது.

ஒபாமா நிர்வாகம் தனது உள்நாட்டுக் கொள்கைகள் அனைத்திலும், அத்தனை இன மற்றும் நிறத்தைச் சேர்ந்த உழைக்கும் வர்க்க மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு எதிராக பெரும் செல்வந்தர்களது நலன்களை திட்டமிட்டு பாதுகாத்து வந்திருக்கிறது. 2008 நிதி நெருக்கடியை தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடியால் கறுப்பு இனத்தவர், வெள்ளை இனத்தவர், ஹிஸ்பானிக், ஆசியர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவினருமே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வோல் ஸ்ட்ரீட் இலாபங்களும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊக்கத் தொகைகளும் முழுமையாக மீட்சி செய்யப்பட்டு விட்ட அதேசமயத்தில் உழைக்கும் மக்களின் வேலைகளும் வாழ்க்கைத் தரங்களும் இதுவரை மீட்சியடைந்திருக்கவில்லை.

ஒபாமா நிர்வாகமும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் அமைந்திருக்கும் ஊடகங்களும் “நிறப் பாகுபாடு குறித்து தேசிய அளவிலான ஒரு விவாத”த்திற்கு நெருக்குகின்றன. சமூகபொருளாதார பிளவுகள் நூற்றாண்டின் வேறெந்தவொரு சமயத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் கூர்மையாக இருக்கும் ஒரு நாட்டில் வர்க்கப் பிரச்சினைகள் மீதான எந்தவொரு விவாதத்தையும் தடுப்பதற்கான முயற்சியாக இது இருக்கிறதே அன்றி வேறெதுவும் இல்லை.

ஒபாமா தனது பேச்சில் அமெரிக்காவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை அல்லது சமூக நெருக்கடி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அதேபோல் கொள்கைகள் எதனையும் அவர் வழங்கவில்லை. வறுமை மற்றும் சமூகத் துன்பங்களை குறைப்பதற்கோ, வேலைவாய்ப்பற்றோருக்கு வேலைகளை வழங்குவதற்கோ, அல்லது பொருளாதார நெருக்கடி ஆபிரிக்க அமெரிக்க தொழிலாளர்கள் உள்ளிட தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகள் மீது அளவுக்கதிகமாய் சுமைகரமான தாக்கத்தை செலுத்துவதில் இருந்து நிவர்த்தி காண்பதற்கோ எந்த ஆலோசனைகளும் இல்லை.

டிரேவோன் மார்ட்டின் கொலைக்கான உத்தியோகபூர்வ எதிர்வினையில் - இதில் வார இறுதியில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைத்த ஷார்ப்டன் நடத்தும் ஜனநாயகக் கட்சி ஆதரவு அமைப்பான தேசிய நடவடிக்கை வலைப்பின்னல் (National Action Network) போன்ற குழுக்களிடம் இருந்து வந்த எதிர்வினையும் அடங்கும்- ஏராளமான சிடுமூஞ்சித்தனமும், சுய-நலனும் மற்றும் இரட்டை வேடமும் தான் நிரம்பியிருக்கிறது. வசதியான ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் உள்ளிட அடையாள அரசியலை தங்களது பிழைப்பு ஆதாரமாகக் கொண்ட போலி “முற்போக்குவாதிகளின்” ஒரு ஒட்டுமொத்த அடுக்கும் மார்ட்டினின் துயரகரமான கொலையை இனவாத அரசியலை ஊக்குவிப்பதற்கு - அதில் தான் அவர்களது ஊதியங்களும் சலுகைகளும் தங்கியிருக்கின்றன - பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

உயர் நடுத்தர வர்க்கத்தின் மிகவும் சலுகை படைத்த அடுக்குகளின் நலன்களை முன்னெடுப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. நடப்பு பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புமுறையில் ஏதோ ஆழமாய் இற்றுப் போய் செயலிழந்து விட்டிருக்கிறது என்ற புரிதலுக்கு மில்லியன் கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கிற வேளையில், அத்துடன் நிதி எதேச்சாதிகாரத்தை வெகுஜன மக்களிடம் இருந்து பிரித்துக் காட்டும் வர்க்கப் பிளவு முன்னெப்போதையும் விட மிகத் தெளிவாகிக் கொண்டிருக்கிற நிலைமைகளின் கீழ், இந்த சக்திகளோ தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக பிளவுகளை விதைக்கின்ற பொருட்டும் சமூக எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திசைதிருப்பும் பொருட்டும் இனப் பிரச்சினையாகவே அதை விடாது பேசுகின்றன.

இந்த முதலாளித்துவ ஆதரவுக் கூறுகளின் அரசியல் செல்வாக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதும், அத்தனை நிற மற்றும் இனப் பின்புலத்தை சேர்ந்த உழைக்கும் மக்களையும் இலாப அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துகின்ற ஒரு சுயாதீனமான வெகுஜன அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதுமே தொழிலாள வர்க்கத்தின் மையமான கடமை ஆகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com