ஜேர்மனியில் NSA உளவு அமைப்பு தடையற்றமுறையில் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. By Peter Schwarz
Süddeutsche Zeitung பத்திரிகையின் இணையத்தள பதிப்பில் வரலாற்றாளர் ஜோசப் போஸபோத் உடனான பேட்டி தெளிவாக்கியிருப்பது, அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்கள் தாம் விரும்புவதை செய்ய முழு உரிமையை ஜேர்மனியில் கொண்டுள்ளன என்பதாகும். இதை ஜேர்மன் மத்திய அரசாங்கம் நன்கு அறிந்திருப்பதுடன், அதற்கு ஆசியும் வழங்கியுள்ளது.
Freiburg பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியரான போஸபோத் ஜேர்மனியில் போருக்குப் பிந்தைய காலத்தில் கூட்டு உளவுத்துறை பங்கு பற்றிய ஒரு வல்லுனர் ஆவார். 2012ல் அவர் “ஜேர்மனி கண்காணிக்கப்பட்டுள்ளது” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டிருந்தார்.
எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளியிட்டுள்ள அமெரிக்க, பிரித்தானிய உளவுத்துறைகளின் வேவு நடவடிக்கைகள் குறித்த ஜேர்மனிய அரசாங்கத்தின் கோபத்துடனான பிரதிபலிப்பை வரலாற்றாளர் இழிந்த முழுப் பாசாங்குத்தனமாக கருதுகிறார். தேசிய உளவுத்துறை அமைப்பு (NSA) போன்ற ஒரு மேற்கத்தைய உளவுத்துறை அமைப்பிற்கு கொள்கையளவில் ஜேர்மனியில் வரம்புகள் ஏதும் இல்லை.
“சட்ட நிலைமையையொட்டி மட்டும் அல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக உளவுத்துறைகளுக்கு இடையேயுள்ள ஆழமான ஒத்துழைப்பினால் “ஜேர்மனியில் NSA எதையும் செய்யலாம்” என விளக்குகிறார் போஸபோத். இது எப்பொழுதும் விரும்பப்பட்டதுடன், எப்பொழுதும் அரசியல்ரீதியாக ஏற்கப்பட்டதுமாகும்.”
போஸபோத்தின் கருத்துப்படி, ஜேர்மனியில் மேற்கத்தைய உளவுத்துறை அமைப்புக்களின் சட்டரீதியான அடிப்படையிலான செயற்பாடு 1963லிருந்து உள்ளன. அப்பொழுது ஜேர்மனியும், கூட்டணி நாடுகளும் நேட்டோ படைகளுக்கான அந்தஸ்து உடன்பாட்டின் ஒரு துணை ஒப்பந்தத்தில் உளவுத்துறையில் சேகரிப்பு, பறிமாற்றம், பாதுகாப்பு ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்புக்கு ஒப்புக்கொண்டன. இந்த உடன்பாடு இரகசிய பேச்சுக்கள் மூலம் உருவாக்கப்பட்டு மிக இரகசியமாக இருந்தது.
ஒரு சர்வதேச, சட்டபூர்வமாக கட்டுப்பட்ட இரகசிய துணை ஒப்பந்தத்தின் அடிப்படையில், தங்கள் படைகளை பாதுகாக்க தங்கள் சொந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடரும் என்ற அடிப்படையில், 1968ம் ஆண்டு மேற்கத்தைய கூட்டணி நாடுகள், கண்காணிப்பிற்கான பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஜேர்மனிக்கு திருப்பியளித்தன. அதே நேரத்தில் ஜேர்மனிய அரசியலமைப்பின் விதி 10 ஆழமான முறையில் வரம்பிடப்படுள்ளதால், “அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு இரகசியம் மீறப்படக்கூடாது என்பது இனி அடிப்படை உரிமையாக இருக்கப்போவதில்லை.”
“இது 1968 இன் மிகப் பெரிய ஏமாற்றுத்தனம் ஆகும்” என்றார் போஸபோத். “படைகளுக்கான அந்தஸ்து உடன்பாடு, நிர்வாக உடன்பாடுகள் மற்றும் இரகசிய ஒப்பந்தங்கள் [ஜேர்மனிய] மறு இணைப்பிற்கு பின்னும் தொடர்ந்தன, இன்றும்கூட நடைமுறையில் உள்ளன.”
சான்ஸ்லர் கொன்ராட் அடினோவர் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் - CDU), வில்லி பிராண்ட் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD) இருவரும் மேற்கத்தைய உளவுத்துறை அமைப்புக்களின் சிறப்பு உரிமைகளை ஏற்றனர், ஏனெனில் அவர்கள் ஜேர்மனியின் இறைமையை தக்க வைக்க விரும்பினர். அதேபோல் ஹெல்முட் ஹோல் (CDU) ஜேர்மனிய மறு இணைப்பிற்கு ஆபத்து வரக்கூடாது என ஒப்புக்கொண்டார். ஷ்ரோடர்-பிஷ்ஷர் (SPD-Green) மற்றும் மேர்க்கெல் (CDU) அரசாங்கங்களும் இருக்கும் ஒழுங்குமுறைகளை தொட்டும்கூட பார்க்கவில்லை. “இவர்கள் அனைவரும் ஒரே படகில் அமர்ந்துள்ளனர், ஏனெனில் அமெரிக்கத் தகவல் மூலம் அவர்கள் பயனடைகின்றனர்.”
Süddeutsche Zeitung நடத்திய ஆய்வின்படி, NSA அமைப்பு தற்பொழுது குறைந்தபட்சம் ஜேர்மனியில் Darmstadt, Wiesbaden, Stuttgart ஆகிய இடங்களில் மூன்று அலுவலகங்களை கொண்டுள்ளது. அங்கு NSA அமைப்பு என்ன செய்கிறது என்பது உயர்மட்ட இரகசியம் ஆகும். ஆனால் “ஜேர்மனியில் வேலை செய்யும் NSA அமைப்பு அதிகாரிகள் Prisam போன்ற உளவுத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற முன்கருத்து உள்ளது.”
“அமெரிக்க உளவுத்துறை முகவர்கள் Berlin, Cologne மற்றும் Pullach ஆகிய நகரங்களுக்குள் செல்கிறார்கள், வெளியே வருகிறார்கள். அங்குதான் ஜேர்மனிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத்துறைகள் உள்ளன” என்று Süddeutsche எழுதியுள்ளது. செய்தித்தாள் இதேபோல் ஜேர்மன் உளவுத்துறையினரின் நடமாட்டம் அமெரிக்காவிலும் உள்ளது என கருதுகிறது. அதாவது நாட்டின் உளவுத்துறை நிறுவங்களுக்கு இடையே நேரடியான பரிமாற்றம் உள்ளது என்று கருதுகின்றது.
முக்கியமாக Sabine Leutheusser-Schnarreneberger தான் சுதந்திர ஜனநாயகக் கட்சியின்(FDP) வலதுசாரிக்கொள்கைக்கு ஒரு தாராளவாத மூடிமறைப்பாக நீண்டகாலம் அரசாங்கத்திற்குள் பணிபுரிந்துள்ளார்; அவர் NSA அமைப்புடைய உளவு குறித்து பகிரங்கமாக சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் நீதித்துறை மந்திரி என்னும் முறையில் அவருக்கு NSA அமைப்பு தடையின்றி ஜேர்மனியில் வேவு பார்க்க அனுமதித்த பகிரங்க மற்றும் இரகசிய உடன்பாடுகள் இருப்பது தெரிந்திருக்க வேண்டும்.
Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையில் விருந்தினர் பங்களிப்பு கட்டுரையில் SPD தலைவர் சிக்மார் காப்ரியேல் “நம்முடைய அடிப்படை மதிப்புக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது” குறித்து சீற்றத்தை வெளிப்படுத்தி, இந்த “தகவல் முதலாளித்துவத்திற்கு” எதிரான போராட்டம் வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். உண்மையில் அவருடைய கட்சியின் சக நண்பரும், ஷ்ரோடர் அரசாங்கத்தின் உள்துறை மந்திரியுமான ஒட்டோ ஷில்லி உளவுத்துறை மற்றும் பாதுகாப்புக் அமைப்புகளை மிகப்பெரியளவில் வலுப்படுத்தி “பாதுகாப்பிற்கான அடிப்படை உரிமை” என்பது அரசியலமைப்பில் இல்லை என்று அறிவித்தார்.
Leutheusser-Schnarrenberger எதுவும் தெரியாது என்று பாசாங்கு செய்கையில், காப்ரியேல் தீவிர சொற்றொடர்களைக் கையாள்கையில், மற்றவர்கள் தேசியவாத வழிகளில் NSA அமைப்புடைய உளவு பற்றிய கோபத்தை தேசியவாத திசையில் திருப்ப முயல்கின்றனர். இதில் மிக வெளிப்படையாக இருப்பது Jakob Augstein உடைய Spigel Online இன் வாடிக்கையான கட்டுரை ஆகும்; இது “சந்தேகப்படும்போது இடது புறம் (திரும்பவும்)” என்ற தலைப்பில் உள்ளது.
“ஜேர்மனியர்கள் இந்த அதிகார நுகத்தை அமைதியான களிப்பு போல், Heinrich Mann உடைய “அடிமை மனிதன்” போல் ஏற்க விரும்புகின்றனரா? அல்லது இந்த சக்தியை எதிர் சக்தியால் எதிர்க்க விரும்புகின்றனரா?” எனக்கேட்டு, “இந்த நாடு ஏன் அதனுடைய பாத்திரத்தில் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்று என்பதை ஏற்க வேண்டும்” என்ற தலைப்பில் Spiegel இல் வந்துள்ள கட்டுரையை சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த மிக அதிகமான புலனாய்வு நுகர்வுக்கு பதில் ஜேர்மன் அரசின் சக்தியை அதிகரிக்க! எனக்கூறப்படுகின்றது. பிரஷ்ய எதேச்சதிகார அரசு, நாஜி சர்வாதிகாரம் மற்றும் பின்னர் அதன் ஊழியர்கள் மேற்கு ஜேர்மனிய நீதித்துறை மற்றும் உளவுத்துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மரபு உள்ளபோது ஒரு குறும் பார்வையான செய்தியாளராகவும், வரலாற்றை மறந்த Augstein போன்றவர்கள்தான் இத்தகைய கருத்தை முன்வைக்க முடியும்.
உண்மையில் NSA அமைப்பினுடைய ஒட்டுக்கேட்டலின் இலக்கும் அவர்களுடன் மிக நெருக்கமாக ஒத்துழைக்கும் ஜேர்மனியின் இரகசிய அமைப்புக்களின் இலக்கும் அவர்களுடைய சொந்த மக்கள்தான். அவர்களை எதிர்க்கக்கூடிய ஒரே “எதிர் சக்தி” அட்லான்டிக்கின் இரு புறமும் உள்ள தொழிலாள வர்க்கம்தான்.
0 comments :
Post a Comment