Friday, July 5, 2013

ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மீது NSA இன் பாரிய ஒற்றாடல்! By Patrick Martin

அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளை ஒற்றுப்பார்த்துள்ளதோடு, அதன் கணினி வலையமைப்புக்களிலும் ஊடுருவி, பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யிலும், நியூ யோர்க் நகரத்திலும் இருக்கும் தூதரக அலுவலகங்களிலும் ஒற்று வேலை பார்த்துள்ளது என ஜேர்மனிய ஏடு Der Spiegel வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

தகவல் தெரிவிப்பவரான எட்வார்ட் ஸ்னோவ்டென் பெற்றிருந்த இரகசிய ஆவணங்களில்இருந்து அது ஒற்றுப்பார்த்துள்ளது தெரிந்துள்ளதாக ஏடு கூறுகிறது, ஸ்னோவ்டென் இப்பொழுது அவர் மீது குற்ற விசாரணை நடத்தப்படலாம் என்னும் அச்சுறுத்தலையும், சட்டவிரோத அமெரிக்க அரசாங்கத்தின் ஒற்றுவேலையே அம்பலப்படுத்தியதற்காக மரண தண்டனையையும் எதிர் நோக்கி உள்ளார்.

செப்டம்பர் 2010 தேதியிட்ட NSA ஆவணம் ஒன்று, குறிப்பாக நியூ யோர்க்கில் இருக்கும், ஐரோப்பிய அதிகாரிகளின் ஐ.நா. தலைமையகம், ஒற்றாடலுக்கு “இலக்கு கொள்ளப்பட்ட இடம்” என்று கூறுகிறது.

இதையும்விட முக்கியமானது, ஐரோப்பிய ஒன்றிய மந்திரிகள் குழு மற்றும் ஐரோப்பிய குழு ஆகியவற்றின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் பிரஸ்ஸல்ஸ் அலுவலகக் கட்ட எலக்ட்ரோனிக் ஒற்றாடல் ஆகும். கட்டிடத்தின் தொலைபேசி முறையில் இருந்து வெளியேறிய அழைப்புக்கள் ஐந்து ஆண்டுகள் முன்பு ஒரு பாதுகாப்பு விசாரணையின்போது கண்காணிக்கப்பட்டிருந்தன.

“பாதுகாப்பு அதிகாரிகள் பிரஸ்ஸல்ஸ் புறநகர் பகுதியான Evere இல் நேட்டோ தலைமையகத்தில் இருந்து அழைப்புக்கள் வந்தன என்று தடம் அறிந்தனர்” என Der Spiegel தகவல் கொடுத்துள்ளது. “தொலைத் தொடர்பு அமைப்பு மீதான தாக்குதல்கள், நேட்டோ தலைமையகத்தில் இருந்து சற்று ஒதுங்கி உள்ள NSA வல்லுனர்கள் பயன்படுத்திய கட்டிட வளாகத்தில் இருந்து வந்துள்ளன என ஒரு துல்லியமான பகுப்பாய்வு காட்டுகின்றது.”

இந்த வெளிப்படுத்தல் அமெரிக்க ஐரோப்பிய உறவுகளில் மிகவும் வெடிக்கும் தன்மையுடைய விளைவுகளை ஏற்படுத்தலாம்; ஏனெனில் அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பெயரளவிற்கு ஒரு இராணுவக் கூட்டாக நேட்டோ இருக்கையில், அமெரிக்கா அதன் நண்பர்கள் எனக் கூறும் நாடுகளில் ஒற்று பார்த்துள்ளதை தெரிவிக்கிறது. ஸ்னோவ்டேன் ஆவணங்கள், NSA கிட்டத்தட்ட அரை பில்லியன் அழைப்புக்கள், மின்னஞ்சல்கள், செய்திக் குறிப்புக்கள் ஆகியவற்றை ஒவ்வொரு மாதமும் ஜேர்மனியில் இருந்து ஒற்றாடல் செய்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என Der Spiegel கூறியுள்ளது. இந்த ஏடு, ஒரு NSA ஆவணத்தை மேற்கோளிட்டு கூறுகிறது, “நாம் பெரும்பாலும் மூன்றாம் தர வெளிநாட்டுப் பங்காளிகளின் சமிக்ஞைகளை தாக்கலாம், நாம் அதைத்தான் செய்கிறோம்.”

NSA பேச்சுவழக்கில், அமெரிக்காதான் ஒரே முதல்தர நாடு, பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை இரண்டாம் தர பங்காளி நாடுகள், மற்றும் அதிக விருப்பமற்ற பிரான்ஸ், ஜேர்மனி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் மூன்றாந்தரப் பங்காளிகள் ஆகும். அமெரிக்கத் தலைமையில் உலகம் முழுவதும் நடத்தப்படும் ஒற்று வேலைகளில் பங்கு பெறுகின்ற, வசதியளிக்கின்ற, இரண்டாம் தர பங்காளி நாடுகள் நான்கும் NSA கண்காணிப்பில் இருந்து மேம்போக்காக விலக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றன.

மூன்றாந்தர பங்காளி நாடுகளில் பல அமெரிக்காவுடன் தொடர்புகள் தவகலைப் பங்கு கொள்ளும் உடன்பாடுகளைக் கொண்டுள்ளன—இதில் டென்மார்க், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி போன்றவை அடங்கும் என பிரித்தானிய Observer செய்தித்தாளில் வந்துள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. எனினும் இந்நாடுகளில், NSA மிக அதிக அளவு கண்காணிப்பு நடத்துவதை நிறுத்திவிடவில்லை.

ஜேர்மனி மீது கண்காணிப்பு என்பது, பிரான்சை விட மிகவும் தீவிரமாக உள்ளது —ஏனெனில் அன்றாடம் 30 மில்லியன் இணைப்புக்கள் கண்காணிக்கப்படுகிறது 2 மில்லியனுடன் ஒப்பிடுகையில் — ஒற்றாடல் தரம், ஈராக், சௌதி அரேபியா மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் அதே தரத்தில்தான் உள்ளது.

உயர்மட்ட ஐரோப்பிய அதிகாரிகள் பலர் சீற்ற மற்றும் கண்டன அறிக்கைகளை வெளியிடுள்ளனர். ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் இப்பிரதிநிதிகள் அவர்கள் கூறும் அளவிற்கு வியந்தனரா என்பதை சந்தேகத்திற்கு உரியது; அவர்களது அமெரிக்க சகாக்களைப் போலவே, தமது சொந்த மக்கள் மீதும் அமெரிக்க மக்கள் மீதும் இதே போன்ற கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் விடையிறுப்பில் இருக்கும் ஒருமித்த உணர்வு, ஐரோப்பிய அரசாங்கங்கள், அமெரிக்க தொலைத்தொடர்பு மற்றும் இணைய தள வலை குறித்து வரும் பின்விளைவுகள் பற்றி கண்டத்தில் இருக்கும் மக்கள் கவலை கொண்டுள்ளனர்; அதேபோல் அமெரிக்க முயற்சிகளான ஒற்றாடலை பகிரங்கத்திற்குக் கொண்டுவந்தவர் மீது குற்ற விசாரணை என்பது குறித்தும் கவலை கொண்டுள்ளன.

ஜேர்மனியின் நீதித்துறை மந்திரி Sabine Leutheusser-Schnarrenberger, ஞாயிறன்று அமெரிக்காவிடம் இருந்து உடனடி விளக்கம் கேட்டார். “செய்தி ஊடகத் தகவல்கள் துல்லியமானவை என்றால், இது பனிபோர்க் காலத்தில் விரோதிகளுக்கு இடையே இருந்த நடவடிக்கைகளைத்தான் ஞாபகப்படுத்துகிறது.

லுக்சம்பேர்க்கின் வெளியுறவு மந்திரி Jean Asselborn, “இந்த அறிக்கைகள் உண்மையென்றால், பின்னர் இது வெறுப்பூட்டுவதாகும். இரகசியப் பணிகள் கட்டுப்பாட்டை விட்டு மீறியதைப் போல் தோன்றுகிறது. அமெரிக்கா அதன் நட்பு நாடுகளைவிட தன் சொந்த இரகசிய பணிகளை கண்காணிக்க வேண்டும்”. எனக் கூறினார்.

NSA ஒற்றாடல் செய்வதற்காக நடத்தும் செயற்பாடுகளுக்கும் சமீபத்திய வெளிப்பாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு பற்றிக் குறிப்பிடுகையில் தூதர், “அமெரிக்கா பயங்கரவாத த்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதி என்று அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் தூதர்களும் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்லர்” என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தலைவரும், ஜேர்மனிய ஆளும் வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றிய கட்சியை சேர்ந்தவருமான எல்மார் புறூக், Der Spiegel இடம் “ஒற்றாடல், ஒரு ஜனநாயக நாட்டில் முடியும் என நினைக்க முடியாத பரிமாணங்களை அடைந்துள்ளது. இத்தகைய நடத்தை நட்பு நாடுகளுக்கு இடையே பொறுத்துக் கொள்ள முடியாதது ஆகும். இவை முற்றிலும் சமச்சீர்த்தன்மையை இழந்துவிட்டன. ஜோர்ஜ் ஓர்வெல் இத்தோடு சற்றும் ஒப்பிடமுடியாதவர்.” எனக் கூறினார்.

இதே போன்ற அறிக்கைகள்தான், கன்சர்வேட்டிவ் வலதில் இருந்து பசுமைவாதிகள் வரை ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசியல் வண்ணம் முழுவதில் இருந்தும் வெளியிடப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதித்துறை, அடிப்படை உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கான ஆணையர் விவியான் ரெடிங், லுக்சம்பேர்க்கில் ஒரு கூட்டத்தில் ஒற்றாடல் பற்றிய வெளியீடுகள் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வணிக உடன்பாடு குறித்த பேச்சுக்களை பாதிக்கலாம் என்றார்.

“பங்காளிகள் ஒருவர் மீது ஒருவர் ஒற்றாடல் வேண்டாம்”. “எமது பேர அலுவலக நடவடிக்கைகள், நம் பங்காளிகளால் ஒற்றுக்கேட்கப்படுகிறது என சிறிது சந்தேகம் இருந்தாலும், ஒரு பெரிய அட்லான்டிக் கடந்த சந்தையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது” என்று அந்த அம்மையார் கூறினார்.

No comments:

Post a Comment