Monday, July 29, 2013

இனவாதியாக அன்றி பைத்தியமாக இருப்பது மேல்! பலசேனாக்களுக்கு உபதேசிக்கிறார் டிலான்!

மதத்திற்குள் ஒழிந்துகொண்டு வீரப் பாத்திரத்தை ஏற்றிருப்பதை விட்டு, இனவாதியாக இன்றி பைத்தியக்காரனாக இருப்பது மிகவும் சிறந்தது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலநோம்பு அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுகிறார்.

தான் எந்தவொரு நிலையிலும் இனவாதியாக இருந்திருக்கவில்லை எனவும், யார் எதைச் சொன்னாலும் தான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு மனிதாபிமானம் மிக்க ஒருவனாகவே இருந்துவருகின்றேன் என்று குறிப்பிடுகின்ற அமைச்சர், மதத்துக்குள் ஒழிந்துகொண்டு பலசேனாவை உருவாக்கிக்கொண்டு சிலர் நாட்டைத் தீப்பற்ற வைத்துள்ளார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

ஹாலிஎல ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்துவதற்காக இந்த பலசேனா என்ற அப்பன் பெயர் தெரியாத இயக்கம் முனைகிறது. அவர்கள் அவ்வாறு செய்யும் போது, நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் ஏனையோருக்காக குரல் எழுப்புகின்றோம். இவற்றைப் பொறுக்கவியலாத பலசேனா அமைப்பினர் டிலானுக்குப் பைத்தியம் என்கிறார்கள்.

இனவாதத் தீயை மூட்டி அதில் குளிர்காய்ந்து நாட்டை வந்த வழிக்கே எடுத்துச் செல்வதை விட பைத்தியமாக இருப்பது மேல். இனவாத, மதவாத வீரனாக இருக்க எனக்குத் தேவையில்லை. சென்ற சில மாதங்களுக்கு முன்னர் ஹலால் என்ற பிரச்சினையை வெளிக்கொணர்ந்தார்கள். அதன் விளைவு என்னாயிற்று. முஸ்லிம்கள் மேலும் பலமடைந்தார்கள். முஸ்லிம்கள் என்றும் சிங்களவர்களுடன் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். ஹாலிஎலவை யாராலும் ஒருபோதும் மதவாதத்தினால் அழித்துவிட முடியாது. நான் அதற்கு இடமளிக்கவும் மாட்டேன். அவ்வாறு செய்வதற்கு பொதுபல சேனா வந்தால் அன்றைக்கு ஹாலிஎல மக்கள் பற்றி அறிந்துகொள்ளவியலும்.

ஆயினும், நாங்கள் நாட்டை அபாயத்தின்பால் கொண்டு செல்வதற்கு இடமளிக்க மாட்டோம். கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவதே உறுதி. பரிசுத்தமான பௌத்த சமயத்திற்குக் களங்கம் ஏற்படுத்த முயலும் இந்த அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தான் மீண்டும் நமது தாய்நாட்டை யுத்தத்தின்பால் கொண்டு செல்ல முயல்கிறார்கள். புத்தபிரான் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை. புத்தபிரானின் காலத்தில் வாழ்ந்த எங்கள் மதகுருமார்கள் புத்திசாதுரியமானவர்கள். ஒருபோதும் தங்களது சீடர்களை தங்களின் சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தவில்லை. புத்தபிரான் எல்லா மதங்களுக்கும் மரியாதை செய்தார். அவற்றைப் போற்றினார். யாருக்கும் துன்புறுத்தல் செய்யவில்லை. இன்று பலசேனா எல்லோருக்கும் உபத்திரவம் செய்கிறது. இறைச்சிக் கடைக்குப் பக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்ற வாகனத்தை எரிக்கிறார்கள். அந்தக் கடைகளை உடைக்கிறார்கள். பிறமதத்தவர்களுக்கு மதபோதனை செய்ய இடமளிப்பதில்லை. இவர்கள் இதன்மூலம் பெளத்த சமயத்திற்கு இழுக்கினை ஏற்படுத்துகிறார்கள். அகிம்சை வழியிலான பௌத்த மதத்தை இன்றுள்ள பலசேனா திரிபுபடுத்தியுள்ளது.

கருணாரத்ன அபேசேக்கர எழுதி ஆர்.ஏ. ரொக்சாமி இசையமைத்த புத்தங் ஸரணங் கஜ்ஜாமி பாடலைப் பாடுபவர் யார்? மொஹிதீன் பேக். எங்கள் தேசிய பாடகர். பாருங்கள் பௌத்த – இந்து – முஸ்லிம் ஒருமைப்பாட்டினால் பாடல் எழுந்துள்ள முறைமையை. அவைதான் உண்மையான பொதுபல சேனா. அவர்கள் தேசத்திற்காகச் சேவை செய்தார்கள். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகள் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக எழுந்து நின்றபோது எங்களுக்கு உதவியாக வந்தவர்கள் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளே. எங்களுக்கு அவற்றை மறக்கவியலாது. இலங்கை அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்வதும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற எங்கள் சகோதர சகோதரிகளினாலேயே.

அவ்வாறாயின் ஏன் முஸ்லிம் எதிர்ப்புச் சக்தியை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்குத் துடியாய்த் துடிக்கிறார்கள்? இதனைத்தான் வஞ்சனை என்று சொல்கிறோம். பௌத்த சமயத்தை அடிப்படைவாதமாகப் பயன்படுத்தி தேசிய வீரர்களாகத் துடிக்காமல் நாங்கள் இலங்கையர் என்று நினைத்துத் செயலாற்றுமாறு அந்த இனவாத பலசேனாவைக் கேட்டுக் கொள்கிறேன்.

முஸ்லிம் நாடுகளிலிருந்து எங்களுக்குக் கிடைக்கின்ற எண்ணெய்யிலிருந்தே ஈனியா பீடித்துள்ள பலசேனாவினரும் சொகுசு வாகனங்களில் செல்கிறார்கள். அந்த எண்ணெய் ஹலால்..! அதைப் பார்த்தார்களா? மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றாமல் நடந்து செல்லுங்கள்... அதற்காகத்தான் நாங்கள் சொல்கிறோம்... ஒருநாளும் இந்த சேனாவினால் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். கடைசியில் நடப்பது இந்த பலசேனாக்கள் உல்லாசம் அனுபவிப்பது மட்டுமே ஆகும். அவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களை மூளைச் சலவை செய்கிறார்கள்’ என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment