Friday, July 5, 2013

சோகத்தில் கரைந்தது காதல்! இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா?

தர்மபுரியை சேர்ந்த நாகராஜனின் மகள் திவ்யாவும் (21வயது ) நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் (19) என்பவரும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பல பிரச்னைகளை கடந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும், பாதுகாப்பு கேட்டு சேலத்தில் உள்ள உதவிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். உடனே உரிய பாதுகாப்பை அளித்து நாயக்கன் கொட்டாய் நத்தம்காலனிக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் திவ்யாவின் தந்தை நாகராஜன், நவம்பர் 7ம் திகதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜனின் உறவினர்கள், அவரது சடலத்தை சேலம், திருப்பத்தூர் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பதற்றம் ஏற்பட்டது.

அன்றையதினம் இரவு, நத்தம்காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களுக்குள் நூற்றுக்கணக்கானோர் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கினர். குடிசைகளுக்கு தீயும் வைத்தனர். இதில், 150க்கும் மேற்பட்ட குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. அப்போது இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் கலவரம் வெடித்தது. குடிசைகளுக்கு தீ வைத்ததாக 500 பேர் மீது கிருஷ்ணாபுரம் பொலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி, சட்டவிரோதமாக கூடுதல், ஆயுதங்களால் தாக்கி சேதபடுத்துதல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் இருதரப்பை சேர்ந்த 142 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது திட்டமிட்டு வீடுகளுக்கு தீ வைத்ததாக தொடர்ந்து புகார் கூறப்பட்டது. அதனால் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த நவம்பர் 15ம் தேதி, சேலம் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார், 2ம் கட்டமாக பல்வேறு சமூகத்தை சேர்ந்த 150 பேரை கலவர வழக்கில் கைது செய்தனர்.

இதற்கிடையே கலவரத்தால் பாதிக்கப்பட்ட நத்தம்காலனி, அண்ணாநகர், கொண்டம்பட்டி பகுதிகளை பல்வேறு அரசியல் கட்சியினர் உண்மை அறிவதற்காக நேரில் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டது. டெல்லியில் இருந்து வந்த தேசிய மனித உரிமைய ஆணையத்தினர் கலவரம் நடந்த கிராமங்களுக்கு நேரில் வந்து விசாரணை நடத்திச் சென்றனர்.

மேலும் தமிழக அரசால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள், உதவித்தொகை வழங்கப்பட்டது. அதில், கலவரத் தால் சேதம் அடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தலா இந்திய ரூபா50 ஆயிரம் வீதம் ரூபா1.34 கோடியை தமிழக அரசு முதல்கட்டமாக வழங்கியது. குடிசைகள் தீயில் எரிந்ததில், பள்ளி, கல்லூரி மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரை ஆனதால் அவை புதிதாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் தாய் தேன்மொழி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் படி மார்ச் மாதத்தில் இளவரசனும், திவ்யாவும் நீதிபதிகள் முன்பு ஆஜராகினர். அப்போது திவ்யா, ''நான் கணவனுடன் செல்ல விரும்புகிறேன் எனக்கூறினார். அதன்படி அவரை கணவருடன் நீதிமன்றம் அனுப்பி வைத்தனர். அப்போது இந்த வழக்கு வரும் ஜூன் 6ம் திகதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

இதற்கிடையே ஜூன் 5ம் திகதி திவ்யா திடீரென மாயமானார். மனைவி மாயாமானது குறித்து கிருஷ்ணாபுரம் பொலீசில் இளவரசன் புகார் செய்தார். பொலீசார் திவ்யாவை தேடி வந்தனர். அந்த நேரத்தில், ஜூன் 6ம் தேதி திவ்யா, தனது தாய் தேன்மொழியுடன் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது இளவரசனும் வந்தார். அன்றைய தினம் திவ்யா, ''தனது தந்தை இறந்ததால், தாய் தனியாக இருக்கிறார். அவருடன் செல்ல விரும்புகிறேன். அதனால் கணவனுடன் செல்ல விரும்ப வில்லை' என நீதிபதியிடம் கூறினார்.

இதையடுத்து திவ்யா, தாய் தேன்மொழியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அடுத்த விசாரணை ஜூலை 1ம் திகதி நடக்கும் என கூறப்பட்டது. அதன்படி விசாரணை நடத்தது. அன்றைய தினமும் தாயுடன் செல்வதாக திவ்யா கூறினார். இதனால் வழக்கு 3ம் திகதி (நேற்று முன்தினம்) ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்படி நேற்று முதன்தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யா, தனது தாயுடன் வந்து ஆஜரானார். இளவரசனும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது திவ்யா சார்பில் வக்கீல் பாலு ஆஜராகி, ''தாயுடன் மகள் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால், அவரது தாய் தேன்மொழி சார்பில் மகளை ஒப்படைக்க கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுகிறோம் என்றார். இதற்கு இளவரசனின் வக்கீல் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் 4ம் தேதி (நேற்று) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ரயில் பாதையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தர்மபுரி ரயில்வே பொலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தர்மபுரி ரயில்வே பொலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ரயில் பாதை ஓரத்தில் வெள்ளை சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்த நிலையில் ஒரு வாலிபர் தலை சிதறி பிணமாக கிடந்தார். அவர் காதல் திருமண சர்ச்சையில் சிக்கிய இளவரசன் என தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த இளவரசனின் தந்தை இளங்கோ சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்தது தனது மகன் தான் என்பதை உறுதி செய்தார். சாவில் மர்மம் இருப்பதாகவும், திவ்யாவின் உறவினர்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டதாகவும் கூறி, பொலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

சேலம் சரக டிஐஜி சஞ்சய்குமார், தர்மபுரி எஸ்.பி. அஸ்ரா கார்க் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளவரசனின் உறவினர்களை சமாதானம் செய்தனர். மாலை 5 மணிக்கு இளவரசனின் உடலை ரயில்வே பொலிசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இளவரசன் திடீர் மரணத்தையடுத்து தர்மபுரி பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இளைஞர் இளவரசன் தண்டவாளம் அருகே மரணம் அடைந்திருப்பது குறித்து ரயில் ஓட்டுநரிடம் விசாரிக்க ரயில்வே காவல்துறை முடிவு செய்துள்ளது. நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த இளவரசனின் உடல் இன்று காலை 7 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மருத்துவக் குழுவினரும் வந்தனர். ஆனால், வழக்குரைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கே பரபரப்பு எழுந்தது. பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஆகியுள்ளது. பாதுகாப்பு கருதி பொலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன

இளவரசன் உயிரிழந்திருந்த நேரத்தில் அவ்வழி யாக சென்ற கோவை - மும்பை குர்லா விரைவு ரயிலின் ஓட்டுநரிடம், விசாரணை நடத்துவது, இளவரசன் மரணம் அடைந்திருப்பதில் உள்ள மர்மத்தை விலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இளவரசனின் கைபேசியை வைத்து, இறப்பதற்கு முன்பு, அவரது கைபேசி எங்கெல்லாம் இருந்துள்ளது என்பதை டவர் மூலம் கண்டுபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இளவரசனின் மரணம் செயற்கை மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களின் சந்தேகத்தை, இது போன்ற விசாரணையின் மூலம் தெளிவுபடுத்தலாம்.

அதேவேளை இளவரசனின் மரணத்தை தொடர்ந்து, இளவரசனின் பெற்றோரு க்கும், திவ்யாவிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்துயுள்ளார். இது குறித்து திருமாவளவன் புதுவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, தர்மபுரி இளவரசன் சாவில் மர்மம் உள்ளது. எனக்கு கிடைத்த தகவல்படி அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் போட்டுள்ளனர். தமிழக அரசு இது தொடர்பாக பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.3 மாதத்தில் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடும் என்பதற்காக இதை திசை திருப்ப முயற்சிக்ககூடாது. தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை எதையும் கேட்க விரும்பவில்லை. இளவரசனை காதல் திருமணம் செய்துகொண்ட திவ்யா கடைசி வரை அவருடன் சேர்ந்து வாழவே விரும்பி இருக்கிறார். கடந்த 3 ஆம் தேதி அவரை ஒரு கும்பல் கட்டாயப்படுத்தி இளவரசனுடன் இனி சேர்ந்து வாழ மாட்டேன் என்று பத்திரிகையாளர்களிடம் சொல்ல வைத்துள்ளனர்.

இதற்குப் பிறகும் கூட இளவரசன் மனம் தளரவில்லை. தனது தந்தையிடம் இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றே கூறி இருக்கிறார். இந்த நிலையில் அவர் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் திவ்யா, அவரது தாயார், அவருடைய தம்பி ஆகியோருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. மேலும் இளவரசனின் பெற்றோருக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். இளவரசன் சாவுக்கு பின்னணியில் ஒரு கும்பல் இருந்துள்ளது. அந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மபுரி பகுதியில் இளவரசன் மற்றும் திவ்யாவின் காதல் திருமணத்தால் தலித் மக்கள் மீது வன்னியர்கள் செய்த கொலைவெறித் தாக்குதல்கள் பற்றி அனைவரும் அறிந்ததே. இவர்களின் திருமணத்தால் ஒரு கிராமமே எரிந்து சாம்பலானதை யாரும் மறக்க முடியாது.

நேற்று பிற்பகலில் இளவரசன் ரயில்பாதை அருகில் இறந்து கிடந்தது தற்கொலை என்று பெரும்பாலான ஊடகங்களும், காவல்துறை யினரும் கூறி வருவது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்கொலை என்பதற்கு எந்த ஒரு தடையமும் இல்லை என்பதே உண்மை. இப்படியிருக்க தற்கொலைதான் என்று ஊடகங்களும், காவல்துறையினரும் கூறுவது உண்மைக்குப் புறப்பானதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

இளவரசன் திவ்யா திருமணத்தின் போது வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் இளவரசனின் கிராமத்தையே தீக்கிரையாக்கினர், அப்படியிருக்கையில் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது எப்படி தற்கொலை தான் என்று ஆணித்தரமாக கூற முடியும் என்று அனைவரின் மனதிலும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கில் உண்மையை கண்டறிய அரசும், நீதித் துறையும், காவல்துறையும் தீவிரமாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் வேண்டுகோலாக உள்ளது.

தர்மபுரி காதல் ஜோடியான திவ்யா-இளவரசன் திருமணத்தை அடுத்து பெரிய ஜாதிக் கலவரம் மூண்டு அது பெரிய பிரச்சனையான நிலையில் காதல் திருமண ஜோடிகள் பிரிந்து நேற்று இளவரசன் மர்மமான முறையில் இறந்தும் போயுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளரும், வழக்குரைஞருமான எஸ். இம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு பொது நலன் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், தருமபுரியில் காதல் திருமணம் செய்த கொண்ட இளவரசன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது மனைவி திவ்யாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம். ஜெயச்சந்திரன், எம்எம். சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழைக்குரைஞர் வைகை ஆஜராகி வாதாடினார். அப்போது, நடந்த சம்பவங்கள் துரதிருஷ்ட வசமானது. இந்த நிலையில், திவ்யாவுக்கு இரண்டு ஆபத்து உள்ளது. ஒன்று நடந்த சம்பவங்களுக்கு எல்லாம் தான் தான் காரணம் என்று சுய குற்ற உணர்வினால் தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது அவரை சுற்றி உள்ளவர்கள் தற்கொலைக்குத் தூண்டலாம்.

எனவே இந்த ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும். திவ்யா மற்றும் அவரது தாய், தம்பி ஆகிய மூன்று பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து பாதுகாப்பான காப்பகத்தில் தங்க வைத்து, மிக விரைவில் அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டாக வேண்டும். அவர்களை உடனடியாக சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

3 comments :

Anonymous ,  July 5, 2013 at 4:33 PM  

Tamil Nadu has a lots of internal problems and conflicts. They should resolve that first.

Anonymous ,  July 7, 2013 at 7:58 AM  

The religions which they follow never changed their minds.The lessons what they learn,learnt haven´t changed their minds.Great Maha Kavi Bharathiyar peoms never changed their minds.Practically not
and it will never change their minds.
They are mostly demonized,their activities are demonized.Brutality and violent behaviour are their born character-The tamil cinema,songs,drama serials just like adding fuel to the fire.It is funny they are shedding crocodile fears for Srilankan tamil.The people those live in glass houses
must be cautious ,before they make comments about others.

Anonymous ,  July 8, 2013 at 3:53 AM  

" Brutality and violent behaviour are their born character-The tamil cinema,songs,drama serials just like adding fuel to the fire.It is funny they are shedding crocodile fears for others."

தமிழ் நாட்டு சுயநல அரசியல் கோமாளிகளுக்கும், அவர்களின் எடுபிடி மந்தை கூட்டதிக்கும் இது சமர்ப்பணம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com