Tuesday, July 9, 2013

தண்ணீரில் குதித்தால் நீந்தலாம் என்பதை குளிரூட்டிய அறையில் இருந்து சிந்திக்க கூடாது நீரில் குதித்து பார்க்க வேண்டும்-ஜனாதிபதி

நாட்டு மக்களின் நன்மை கருதி எத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அவை குளிரூட்டிய அறைகளுக்குள்ளிருந்து எடுக்காமல் மக்கள் மத்திக்குச் சென்று அவர்களின் கருத்துக்களைப் பெற்று எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் எடுக்கப்படும் திட்டங்கள் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தடையில்லாத விதத்தில் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் நேற்று(08.09.2013) திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது மக்கள் சேவையில் ஈடுபடும் போது அரச நிறுவனங்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பே. எனினும் பெருமளவு அரச நிறுவனங்களின் சேவைகள் மிகவும் சிறந்ததென எம்மால் அறிய முடிகிறது.

ஒரு சில அரச நிறுவனங்களே மக்களுக்கான சேவையை வழங்குவதில் காலந்தாழ்த்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.அரச அதிகாரிகள் மத்தியில் சிந்தனை மாற்றம் அவசியம். அத்துடன் தாம் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பயிற்சிகளும் முக்கியமாகும்.

பிரஜைகளுக்கு சேவை செய்யும் பிரகடனங்கள் நடைமுறையில் இருந்தாலும் மக்களை அசெளகரியங்களுக்கு உற்படுத்தும் அரச அதிகாரிகளும் உள்ளனர். அவர்கள் தமக்கான பிரகடனத்தை உணர்ந்து செயற்பட அவர்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டமொன்றை பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.

சாதாரண மக்களின் பிரச்சினைகள் கிராம சேவகர் ஒருவரினால் தீர்க்க முடியாவிட்டால் பிரதேச செயலாளர் மூலமோ அல்லது அதற்கு மேல் சென்று மாவட்டச் செயலாளர்கள் மூலமோ அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தினால் 50, 000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட்டுள்ளன. எனினும் பொருத்தமானவர்கள் பொருத்தமில்லாத பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விஞ்ஞானம், கணிதம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை எங்கோ ஒரு பிரதேச காரியாலயத்தில் பத்திரங்களுக்கு கையொப்பமிடும் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை நாட்டில் விஞ்ஞான கணித பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. பொருத்தமான பதவிகளுக்கு இத்தகையோர் நியமிக்கப்பட்டால் வெற்றிடங்களையும் ஆசிரியர்கள் குறைபாட்டையும் தடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர் இவற்றை நடைமுறைப்படுவதில் ஏதும் சட்ட சிக்கல்கள் இருப்பின் அதுவிடயத்தில் கவனமெடுத்து உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

ஆசிரியர் சேவையும் அரச சேவையே. அரச சேவை தொடர்பான கொள்கைகள் நிறைவேற்றப்படும் போது இணக்கப்பாட்டுடன் செயற்படுவது மிகவும் முக்கியமாகும். இத்தகைய பிரச்சினைகளுக்குக் கல்வியமைச்சரின் அனுமதியுடன் அமைச்சரவை மூலம் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது தொழில் நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறை உள்ளதால் செயற்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய முடியாதுள்ளமை தொடர்பில் சில மாவட்டச் செயலாளர்க ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்த அவர்கள் இத்தகைய பிரச்சினைகளால் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தடைப் படுகின்றன எனக்குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி இதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் எனக்குறிப்பிட்டதுடன் பல்கலைக்கழக அனுமதிகிடைக்காத சிறந்த சித்திபெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சியை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment