ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்களே தவிர, அரசாட்சி செய்வதில்லை. இந்த அரசாங்கம் நாட்டை அதளபாதாளத்துக்குள் தள்ளிக் கொண்டே செல்கின்றது என மவ்பிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிடுகிறார்.
காலி உலுவிடிகேவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றும்போது அவர்,
’13 ஆவது திருத்தச் சட்டம் பிரச்சினை அரசாங்கத்துக்குள் பரந்திருக்கிறது. 13 திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி இந்தியப் பிரதிநிதிகளிடம் ‘தர்டீன் பிளஸ்’ என்று குறிப்பிட்ட கதை இன்று வெற்றுப் பாத்திரமாக மாறியுள்ளது. இந்த வெற்றுப் பாத்திரத்திலிருந்து இந்தியாவுக்கு ஏற்படும் அசௌகரியத்தை காப்பதற்காக விசேட பிரதிநிதியாக பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு சென்றாலும், அந்த ஆலவட்டக் கதைகளால் இந்தியாவை மகிழ்ச்சிப்படுத்த முடியாது. தர்டீன் பிளஸ் என்றுதான் இந்த அரசாங்கம் சர்வதேசத்திற்குச் சொன்னது. அது நடைமுறைப்படுத்தக் கூடிய பேச்சாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அது பற்றிச் சொல்லியிருக்கக் கூடாது.
இன்று எங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்ற அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஏனைய பிரபல நாடுகள் அனைத்தும் எங்களை விட்டும் தூர உள்ளன. ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுக்குப் போய் புதிய நண்பர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. நான் இந்த மந்தபோசணை அரசாங்கத்தைப் பார்த்து கேட்கிறேன்... இந்த ஆபிரிக்க நாடுகளிலிருந்து எந்தப் பொருட்களை இறக்குமதி செய்யப் போகிறீர்கள்...?அந்த நாடுகளில் இலங்கையருக்குள்ள தொழில் வழங்கல்கள் எவை? என்றும் குறிப்பிட்டார்.
(கலைமகன் பைரூஸ்)
No comments:
Post a Comment