நம்மிடம் உள்ள ஒதுக்க முடியாத இரகசிய ஒற்றன்!
சமீபத்தில் தனியார் வங்கி ஒன்றிலிருந்து நண்பரின் கைத்தொலைபேசிக்கு அழைத்தார்கள். நண்பருடைய வேலை, மனைவியின் வேலை, பிள்ளைகளின் எண்ணிக்கை போன்ற பல விபரங்களையும் குறிப்பிட்டு, சேமிப்புக்குப் பல புதிய திட்டங்களை வைத்திருக்கிறோம், நேரில் பேசவரலாமா என்று கேட்டிருக்கிறார்கள். நண்பர் ஆச்சரியப்பட்டு, தொலைபேசி இலக்கம் எப்படிக் கிடைத்தது என்று கேட்க, மழுப்பினார்கள்.
கைத்தொலைபேசியூடாகவும், மின்னஞ்சலூடாகவும் நண்பர் தனது வங்கி நடவடிக்கைகளைக் கையாள்கிறவர் என்பதால், பிறகு யோசித்துப்பார்த்து ஆச்சரியத்தைக் கைவிட்டார். நவீன கருவிகளும் வசதிகளும் அதிகரித்த பிறகு, இரகசியம் என்று எதுவுமில்லை நம்மைப் பற்றியதகவல்கள் எல்லாமே பொதுவெளிக்கு வந்துவிட்டன. எல்லா இடங்களிலும் நம் ஒவ்வொருவரைப் பற்றிய சிறுசிறு தகவலும் பதியப்பட்டு வருகின்றன. ஜிபிஎஸ் மூலம் புவிப்பரப்பில் துல்லியமாக இடம் அறியும் தொழில்நுட்பமும் கைத்தொலைபேசிகளின் பரிணாம வளர்ச்சியும் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன.
ஸ்மார்ட் ஃபோன் போன்ற அதிநவீனமான கருவிகள் பற்பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. அவற்றை ஒருவர் பயன்படுத்தும்போதெல்லாம் அவரைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த எந்தக் கடைகளில் என்ன என்ன பொருட்களை எப்போதெல்லாம் வாங்குகிறார்கள் அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று, எப்போது எவ்வளவு பணத்தை வங்கியிலிருந்து எடுக்கிறார் அல்லது வங்கியில் செலுத்துகிறார்ளூ மின்னஞ்சல் மூலம் யார் யாருடன் எப்போதெல்லாம் தொடர்பு கொள்கிறார் எந்த இணையத் தளங்களைப் பார்வையிடுகிறார்கள் எந்தவிடத்துக்கு, எந்த நேரத்தில், உறங்கப்போய் எப்போது கண் விழிக்கிறார்; போன்ற எல்லா நடவடிக்கைகளையும் அவர் தன்னையும் அறியாமலே தொலைத் தொடர்பிடங்களில் உள்ள கருவிகளில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்.
கடந்த ஆண்டில் அமெரிக்கக் காவல் துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் செல்போன் நிறுவனங்களிடமிருந்து 13 லட்சம் தொலைபேசி உரையாடல்களைப் பற்றிய பதிவுகளைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். பல சமயங்களில் உளவுத்துறையினர் தன்னிச்சையாகச் சென்று செல்போன் நிறுவன ஆவணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
தொலைபேசிகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மட்டுமே பயன்படுத்திய காலம் நேற்றுவரைக்கும்தான். அதிநவீனக் கைத்தொலைபேசிகள் 20 சதவிகிதம்தான் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுவதாக ஓர் இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. மீதி நேரமெல்லாம் இணையத் தளத்தில் மேய்வது, விளையாட்டு, இசை, சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது எனச் செலவழிக்கப்படுகிறது.
அதிநவீன செல்போனை வைத்திருப்பவருக்கு கைக்கடிகாரம், கமெரா, கல்குலேட்டர், சிடி பிளேயர், பண்பலை ரேடியோ போன்ற சாதனங்களே தேவையில்லை. அவற்றின் பணிகளையெல்லாம் ஓர் அதிநவீனக் கைத்தொலைபேசியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். கடன் அட்டைகள், வங்கிக் கணக்கு வரவு செலவுகள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவது எல்லாமே கைவிரல் முனைகளில் சாத்தியமாகிவிட்டன.
ஐஃபோன், ஸ்மார்ட்ஃபோன் என்று பற்பல பயன்பாடுகளுடன் அதிநவீனக் கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றைக் கைப்பேசி என்று அழைப்பதுகூட இன்று பொருத்தமில்லை. அவற்றின் மூலம் செல்போன் நிறுவனங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்து நம்முடைய ஒவ்வோர் அசைவையும் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.
செல்போன் இல்லாமல் வாழ்வது அசாத்தியமாகிவிட்டது. அது ஓர் இன்றியமையாத இன்னல், கூடவே இருக்கும் ஒற்றன்தான் என்றாலும் அது இல்லாமல் நாமிருப்பதை இனி கற்பனையும் செய்ய முடியாது.
0 comments :
Post a Comment