வடக்கு வடக்குத்தான், கிழக்கு கிழக்குத் தான் இரண்டும் இணைய முடியாது - அஸ்வர்
மேற்கு மேற்குத்தான் கிழக்கு கிழக்குத் தான்- இரண்டும் ஒன்று சேர முடியாது என ஆங்கிலேயே அறிஞன் மார்க் டுவைன் கூறியது போன்று, இங்கு எமது சூழ்நிலையைப் பொறுத்து வடக்கு வடக்குத்தான், கிழக்கு கிழக்குத் தான் இரண்டும் இணைய முடியாது எனவும், இரு மாகாண சபைகளின் கீழ்தான் இவ்விரு மாகாணங்களும் இயங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே இந்நாட்டில் பெரும்பான்மை மக்கள் கொண்டிருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்திலே பேசுகையில் பாராளுமன்ற உறுப்பினருர் ஏ.எச்.எம். அஸ்வர் இதகைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கு முஸ்லிம்கள் வடக்கோடு இணைவதற்கு ஒருபோதும் ஒத்துப்போகமாட்டார்கள். இந்த நிலைப்பாட்டைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்டிருந்தார் என தெரிவித்ததார்.
அத்துடன் வடக்கில் பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாதிருந்த பொழுதே, ஒரு லட்சம் அளவிலான முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து ஓர் இரவிலேயே அடித்துத் துரத்தப்பட்டனர். பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால், முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் கஷ்டத்துக்குள் உள்ளாவார்கள் என்பதை நாம் இலகுவில் உணர்ந்து கொள்ளலாம் என அஸ்வர் தெரிவித்தார்.
கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்துக்கு தொடர்ந்து விஜயம் செய்கின்ற ஒருவன் என்ற முறையிலும், மட்டக்களப்புத் தமிழர்களின் உணர்வுகளை நன்கு அறிந்தவன் என்ன முறையிலும் யாழ்ப்பாண ஆதிபத்தியத்தின் கீழ் மட்டக்களப்பு வருவதை மட்டக்களப்புத் தமிழர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள். அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் இன்றும் தாண்டவமாடும் தீண்டாமைக் கொள்கையை மட்டக்களப்புத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவே மறுக்கின்றனர் என ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
விளையாட்டு மூலம் ஓர் ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென மஹிந்த சிந்தனை தெளிவாகக் கூறுகிறது அதனை நடைமுறைப்படுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் அனைத்து இன வாலிபர்களினதும் விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் என ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்
0 comments :
Post a Comment