Tuesday, July 9, 2013

மனநிலை பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களை நாசம் செய்த சட்டத்தரணி கைது

ஹொரணை பிரதேசத்திலுள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் வைத்து மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதற்காக சட்டத்தரணியொருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

ஹொரணை பிரதேசத்திலுள்ள மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நிலையத்துள்ள சிறுமிகளில் இருவரையே குறித்த சட்டத்தரணி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப் படுகின்றது.

மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சபையின் தலைவரான சட்டத்தரணியையே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். அந்த மத்திய நிலையத்தில் பணிப்பாளர் மட்டுமல்ல ஆசிரியராக கடமையாற்றும் குறித்த சட்டத்தரணி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

இந்த மத்திய நிலையத்தில் 37 பெண் பிள்ளைகள் இருப்பதுடன் அவர்களில் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்த நிலைய த்தில் அழகுக்கலை பயிற்றுவிக்கும் பெண் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

அழகுக்கலை பயிற்றுவிக்கும் பெண்ணால் குறித்த மூன்று சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து ஏற்கனவே தெரியவந்துள்ளது. இதனையடுத்தே சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் விசாரணைகளை துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே நிலையத்தின் பணிப்பாளரான சட்டத்தரணி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையத்திலுள்ள முடிதிருத்தும் நிலையத்தில் வைத்தே சிறுமிகள் இருவரை பணிப்பாளர் பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சிறுமிகள் இருவரையும் சட்டத்தரணி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் போது அழகுகலை பயிற்றுவிக்கும் பெண் அதனை பார்த்துக்கொண்டிருப்பதனை வழக்கமாக கொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட அழகுகலை பயிற்றுவிக்கும் பெண், ஏற்கெனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளதுடன் பணிப்பாளரான சட்டத்தரணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com