மருத்துவ அறிக்கையில் குழப்பம்! இளவரசன் மரணச்சடங்கில் கலந்து கொள்ள திருமாவளனுக்கு அனுமதி மறுப்பு!
தர்மபுரியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளவரசன் கடந்த 4 ஆம் திகதி மர்மமான முறையில் ரயில் தண்ட வாளம் அருகே இறந்து கிடந்தார். இதனையடுத்து அம்மா வட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. ஏற்கனவே நடந்தது போன்று மீண்டும் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளவரசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி அளிக்க கோரி, விடுதலை சிறுத்தை இயக்க தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், திருமாவளவனுக்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், திருமாவளவன் தர்மபுரியில் நுழைய தடை விதித்து கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொது அமைதிக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் இளவரசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க திருமாவளவனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் திருமாவளவனுக்கு அனுமதி வழங்க முடியாது. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
இதேவேளை தனது மகனின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என இளவரசனின் தந்தை இளங்கோ உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதுகுறித்த வழக்கில், நீதிமன்றம் நியமித்த 2 வைத்தியர்களும் இளவரசன் உடலை ஆய்வு செய்து தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
குறித்த இரு வைத்தியர்களினதும் மருத்துவ அறிக்கை ஒத்துப்போகாததால் இளவரசன் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வைத்தியர்கள் மறு பிரேதப் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டுமென நிதிமன்றம் உத்தரவிட்டது அதன்படி, டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் பரத்வாஜ், மில்லோடர்பின், சுதிர் குப்தா ஆகியோர் விமானத்தில் இன்று காலை 9.25க்கு பெங்களூர் வந்தனர். அவர்களை தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ராமர் மற்றும் தர்மபுரி காவல்துறையினர் நேரில் சென்று அழைத்து வந்தனர்.
இன்று பிற்பகல் 3 மணி அளவில் இளவரசனின் உடலை டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் மறு பிரேதப் பரிசோதனை செய்வார்கள் என்று அரசு வைத்தியர்கள் தெரிவித்தனர். அதன்பின், இளவரசனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment