Monday, July 8, 2013

உளவுத்துறையின் எச்சரிக்கை பலித்தது! புத்தகயா மகாபோதிக்கருகில் குண்டுவெடிப்பு.

இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயா மாவட்டத்திலுள்ள மகாபோதி பௌத்த வழிபாட்டுத்தலம் அருகே வெவ்வேறு இடங்களில் 9 குண்டுகள் தொடராக வெடித்தன. கோயி லுக்குள் ஐந்து குண்டுகளும், கோயில் வளாகத்திற்குள் மூன்று குண்டுகளும் சுற்றுலா பயணிகளின் பஸ்ஸிற்கு அடியே ஒரு குண்டும் வெடித்துள்ளது. இதே நேரம் வெடிக்காத நிலையில் மீட்டெடுக்கப்பட்ட மேலும் இரு குண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.

இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 2 பிக்குகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்த இரு பிக்குகளும் திபெத், மியன்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள். நேற்று அதிகாலை 5.40 மணியளவில் முதலாவது குண்டு வெடித்துள்ளது. அடுத்து சில நிமிடங்களில் தொடர்ச்சியாக 4 குண்டுகள் வெடித்துச் சிதறின. வெடித்துச் சிதறிய குண்டுகளால் மகாபோதிக்கு சேதம் ஏற்படவில்லை. 9 குண்டுகளுமே வீரியம் குறைந்த குண்டுகளாக இருந்ததினால் சேதங்கள் ஏற்படவில்லையென அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த தலத்தின் மேற்கு பகுதியில் புனித போதி மரம் (அரச மரம்) உள்ளது. அந்த அரச மரத்தடியில் தியானம் செய்த போது கௌதம புத்தர் ஞானம் பெற்றார். துறவியாக நாடெங்கும் சுற்றித்திரிந்த அவருக்கு அந்த போதி மரத்தடியில்தான் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. இதையடுத்தே அந்த இடத்தில் மகாபோதி கோவில் கட்டப்பட்டுள்ளது. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 60 மைல் தொலையில் உள்ள இந்த இடம் உலகம் முழுவதும் வாழும் பௌத்த மதத்தவர்களுக்கும் முதன்மையான புனிதத் தலமாக திகழ்கிறது.

திபெத், இலங்கை, மியான்மர், ஜப்பான், சீனா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பௌத்த மதத்தினர் புத்த கயாவில் உள்ள மகா போதி கோவிலுக்கு புனித யாத்திரை சென்று வருவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இதனால் இந்த கோவிலில் எப்போதும் பௌத்தமத துறவிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் மகாபோதி தலத்துக்கு வரும் புத்த மதத்தினர் அங்கு தங்கி இருந்து வழிபாடு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப மகா போதி தலம் மிகப் பெரிய வளாகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

மகாபோதிக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. மகாபோதி கோவிலில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்களை கண்காணிக்க கூடுதல் இரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டன. என்றாலும், அதையெல்லாம் மீறி மகாபோதி கோவிலுக்குள் நாசவேலை நடந்துவிட்டது.

நேற்று அதிகாலை மகாபோதி கோவிலில் சிறப்பு வழிபாடுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது 5.40 மணியளவில் மகாபோதி தல வளாகத்துக்குள் ஒரு குண்டு வெடித்தது. இதனால் பக்தர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. அடுத்த நிமிடம் மகாபோதி கோவில் வளாகத்துக்குள் மேலும் 4 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறின. அதே சமயத்தில் தெரிகா துறவிகள் மடம் பகுதியிலும் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இதனால் பயந்துபோன பக்தர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓடினார்கள். அந்த சமயத்தில் 80 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ள புத்தர்சிலை அருகில் ஒரு குண்டு வெடித்து சிதறியது.

குண்டு வெடிப்புகளில் சிக்கி பௌத்த துறவிகள், பக்தர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடிடியாக மகத் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்கள் உடல் நலம் தேறி வருகிறது.மகாபோதி தலத்தில் வெடித்த 9 குண்டுகளும் மிக, சக்தி குறைந்தவை. இதனால் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். குண்டு வெடிப்பில் மகாபோதி தலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் உள்ள போதிமரம் குண்டு வெடிப்பில் இருந்து தப்பி பாதுகாப்பாக உள்ளது. அந்த மரத்துக்கு அருகில் 2 குண்டுகள் வெடித்த போதிலும், மரத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. கோவில் கருவறை பகுதி பாதுகாப்பாக உள்ளதாக டி. ஐ. ஜி. ஹஸ்னன்கான் தெரிவித்தார். குண்டுகள் வெடித்த இடங்களில் பொலிஸாரும் தடயவியல் நிபுணர்களும் முற்றுகையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 comments :

Anonymous ,  July 8, 2013 at 8:56 AM  

Wiping out terrorism is very essential,but terrorism being encouraged by some nations with a view of Hegemonic-power.so it is difficult to stop it.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com