Friday, July 26, 2013

மருத்துவ குணங்கள் நிறைந்த மாம்பூ!

முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.
தொண்டை வலி குணமடையும்

தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்

உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு

மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து

மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.

மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்

மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்.

கொசுத்தொல்லை நீங்க

உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com