மட்டு செயலமர்வில் பௌத்த பிக்கு அடாவடித்தனம்!
மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் நடத்தப்பட்ட செயலமர்வின்போது ஏற்பட்ட கைகலப்பினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணிப் பிரச்சினை மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான பரிந்துரைகள் குறித்து தெளிவுப்படுத்துவதற்கான செலமர்வொன்று தேசிய சமாதான பேரவையினால் நடத்தப்பட்டது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் , சிவில் சமூகத்தினர், மீள்குடியேறிய பகுதியிலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
திடீரென அந்தச் செயலமர்விற்கு வருகை தந்த மட்டக்களப்பு மங்கலராம விகாராதிபதி அம்பிட்டிய சமரத்ன தேரர் தானும் இந்த செயலமர்வில் உரையாற்றவேண்டுமென கேட்டுள்ளார். அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அந்த செயலமர்வில் உரையாற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இடமளித்துள்ளனர்.
அவரது உரை செயலமர்வின் தொனிப்பொருளுக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கின்றமை குறித்து ஏற்பாட்டாளர்கள் விகாராதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோதே அவர் ஏற்பாட்டார்களை தாக்கியதாகவும், இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை கேள்வியுற்று அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், இருதரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.
அத்துடன், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோரும் அவ்விடத்திற்கு வருகைதந்து நிலைமையை கேட்டறிந்துக்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment