Thursday, July 4, 2013

போருக்கு பிந்திய கிளிநொச்சி கொழும்பை முந்துமா!

கிளிநொச்சி இன்று உலக ஊடகங்களில் அடிபடும் ஒரு பிரபலமான நகராக மாறி இருக்கின்றது. அதற்குக் காரணம் புலிகளுடனான இலங்கை அரச படைகளின் இறுதி யுத்தம் பெரும்பாலும் கிளிநொச்சிப் பிரதேசத்திலேயே நடைபெற்றமையாகும்.

1995 ஒக்ரோபரில் அரச படைகள் புலிகளை யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியேற்றிய பின்னர், 2009 மே மாதம் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இறுதிப்போரில் தோற்கடிக்கப்படும் வரை, சுமார் 14 வருடங்களாக புலிகள் கிளிநொச்சியையே தமது தலைநகராகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர். அதன் காரணமாகவோ என்னவோ, போர் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் கிளிநொச்சிப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மிக விரைவில் தமிழ்ப் பகுதிகளில் கிளிநொச்சி நகரம் முதல்தரமான நகரமாக மாறக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

போர் முடிவுற்ற பின்னர் கிளிநொச்சியின் நிலைமைகள் குறித்து சில தகவல்களைப் பார்ப்போம்.

கிளிநொச்சியின் தற்போதைய சனத்தொகை 135,605 ஆகும். போர் முடிவுற்ற பின்னர், கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த (பெரும்பாலும் புலிகள் புதைத்தவை) 77,363,408 சதுர மீற்றர் பிரதேசத்தில், 64,057,713 சதுர மீற்றர் (83 வீதம்) பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது. மீதி இருக்கும் இடங்களில் 8 வீதமான பிரதேசங்களில் தற்பொழுது கண்ணி வெடி அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுதவிர காடுகளில் உள்ள 9 வீதமான பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட வேண்டியிருக்கிறது.

இந்த கண்ணிவெடி அகற்றும் பணிகளில் இலங்கை இராணுவமும், ஐ.நா. கண்ணிவெடி அகற்றும் பிரிவும் ஈடுபட்டு வருகின்றன. யுத்தம் நடைபெற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில், இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணி வேகமாகவும், நல்ல முறையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

போர் முடிவுற்ற பின்னர் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும்தொகையான பல்வகை ஆயுதங்களையும் படையினர் மீட்டுள்ளனர்.

அபிவிருத்தி முயற்சிகள்

யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் தற்பொழுது பல்துறை சார்ந்த அபிவிருத்தி முயற்சிகளை செய்து வருகின்றது. குறிப்பாக நீர் விநியோகம், கல்வி அபிவிருத்தி, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் துறை, வர்த்தகம், சுகாதாரம், நீர்ப்பாசனத் திட்டங்கள், மீன்பிடித்துறை, மின் விநியோகம், தொலைத் தொடர்பு, வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி ஆகிய துறைகளில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வீதி அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் ஏ-9, ஏ-32, ஏ-34, ஏ-35, பி-269, பி-357 ஆகிய வீதிகள் உள்ளடங்கிய 176 கிலோ மீற்றர் நீளமான வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 15,096 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அரசாங்கத்தினதும், சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் முயற்சியால் வன்னிப் பிரதேசத்தில் 42,480 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதுன் மீள் குடியேற்றத்திற்கு இராணுவமும் பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளது.

உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் தகவல்ப்படி பூநகரியில் 22,023 பேரும், கரைச்சியில் 65,723 பேரும், கண்டாவளையில் 23,366 பேரும், புதுக்குடியிருப்பில் 3,978 பேரும், மாந்தை மேற்கில் 1874 பேரும், துணுக்காயில் 9,742 பேரும், ஒட்டிசுட்டானில் 5,285 பேரும், மாந்தை கிழக்கில் 3,614 பேரும் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியேறிய மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக அரசாங்கம் 70,445.96 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மக்களைப் பொறுத்த வரையில் பெரும்பாலான மக்களின் தொழில் விவசாயமும் மீன்பிடியும்தான். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியளிப்புடன், இலங்கை மீன்பிடி அமைச்சின் உதவியுடன் பூநகரி மீனவர் கூட்டுறவுச் சங்கம் பூநகரியில் படகு கட்டும் தொழிற்சாலையொன்றை அமைத்துள்ளது. இதில் 8 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் கண்ணாடி இழைப் படகுகள் உள்ளூர் மீனவர்களுக்கு 5 இலட்சம் ரூபா விலைக்கு வழங்கப்படுகின்றன.

விவசாயிகளைப் பொறுத்தவரை நிலமில்லாத பிரச்சினையும், இருக்கும் நிலங்களுக்கு போதிய நீர் இல்லாத பிரச்சினையும் இங்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. 1950ஆம் ஆண்டுகளிலும், 1960 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் இங்கு அரசாங்கம் குடியேற்றத் திட்டங்களை உருவாக்கிய பின்னர் புதிதாக குடியேற்றத் திட்டங்கள் எதையும் உருவாக்கவில்லை.

அந்தக்காலப்பகுதியில் குடியேற்றப்பட்ட பழைய குடியேற்றவாசிகளின் பிள்ளைகளும், அவர்களது பிள்ளைகளும் வளர்ந்து குடும்பஸ்தர்களாகிவிட்டதால், அரசாங்கம் முன்னர் வழங்கிய 2 ஏக்கர் வீட்டுக் காணியும், 3 ஏக்கர் வயல் காணியும் பல தடவைகள் பிள்ளைகளுக்குப் பிரித்து வழங்கப்பட்டுவிட்டதால், இப்பொழுது அவர்கள் அரை ஏக்கர் 1 ஏக்கருடன் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். இது அவர்கள் விவசாயம் செய்து வாழப் போதாதாக காணப்படுகிறது.

இதுதவிர இன்னொரு பிரச்சினையும் உருவாகியுள்ளது. போருக்கு முந்திய காலங்களில் 50 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரை காணிகளை வைத்திருந்த பெரும் நிலச் சொந்தக்காரர்களின் காணிகளை பின்னர் புலிகள் யைகப்படுத்தி வைத்திருந்தனர். சில காணிகளை தமக்கு வேண்டியவர்களுக்கு பங்கிட்டளித்திருந்தனர். தற்போது போர் முடிவுற்றதும் அந்தக் காணிகளின் வாரிசுகள் (பெரும்பாலும் வெளிநாட்டில் வாழ்பவர்கள்) தமது காணி உறுதிகளுடன் வந்து அந்தக் காணிகளை மீட்டுத் தரும்படி கிராமசேவை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். அந்தக் காணிகளை திரும்பவும் மீட்பதற்காக அரச அதிகாரிகளுக்கு இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். அப்படியானவர்கள் இந்தக் காணிகளில் வந்து விவசாயம் செய்யப் போவதில்லை. அவர்கள் இப்பொழுது இந்தக் காணிகளில் பயிர் செய்பவர்களை வெளியேற்றிவிட்டு, அந்தக் காணிகளை வசதியுள்ளவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்கே முயல்கின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவது அவசியம். தேவையானால் விசேட காணிச் சுவீகரிப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, வெளிநாடுகளில் சகல வசதிகளுடனும் வாழும் இந்தப் பெரும்காணிச் சொந்தக்காரர்களின் காணிகளைச் சுவீகரித்து, தற்பொழுது அந்தக் காணிகளில் உழுது பயிரிடும் ஏழை விவசாயிகளுக்கு அவற்றை வழங்க வேண்டும்.

விவசாயிகள் எதிர்நோக்கும் இன்னொரு முக்கியமான பிரச்சினை நீர்ப் பிரச்சினையாகும். இது ஆண்டாண்டு காலமாக கிளிநொச்சிப் பிரதேசத்தில் இருந்து வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு செல்வாக்குடைய தமிழ் அரசியற் தலைவர்களாகவும் பின்னர் யாழ்ப்பாணம் கச்சேரியில் அரசாங்க அதிபர்களாகவும், உதவி அரசாங்க அதிபர்களாகவும் இருந்த பலருக்கும் கிளிநொச்சியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் வயல்கள் இருந்ததால், அவர்கள் நீர் விநியோகத்தில் ஏழைக் குடியேற்ற விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் ஓரவஞ்சகமாக சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டனர்.

கிளிநொச்சியின் மிகப்பெரிய நீர்த் தேக்கமான இரணைமடு குளத்தைக் கட்டும் போதே, ஏழை விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டுக் கட்டினர். குளத்தின் வலது வாய்க்காலால் தண்ணீர் பாயும் சாதாரண விவசாயிகளுக்குத் தண்ணீர் பாய்வதை நிறுத்திய பின்னரும், தாம் தொடர்ந்து தண்ணீர் பெறும் வகையில் தமது காணிகளுக்கு நீர் பாயும் வகையில் இடது வாய்க்காலை 6 அடிகள் பதித்து வைத்துக் கட்டிக் கொண்டனர். அத்துடன் சிறுபோக தண்ணீர் பங்கீட்டின்போது, வைத்திருக்கும் காணிகளில் மூன்றிலொரு பங்கு காணிக்குத் தண்ணீர் என்ற கபடத்தனமான திட்டமொன்றை வகுத்து, தாம் வைத்திருக்கும் 300 ஏக்கர் காணியில் 100 ஏக்கர் காணிக்கு தண்ணீரும், குடியேற்ற விவசாயி வைத்திருக்கும் 3 ஏக்கர் காணியில் 1 ஏக்கர் காணிக்கு மட்டும் நீரைப் பங்கிட்டுக் கொண்டனர்.

இந்த நிலை இன்றும் தொடர்கின்றது. விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு போதிய நீரற்ற இந்த நிலைமையில், அரசாங்கம் இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப் போவதாக வேறு கூறி வருகின்றது. இன்று கிளிநொச்சி மக்களில் கணிசமான ஒரு தொகையினர் குடும்பத் தலைவர்கள் இல்லாத விதவைகளாக இருக்கின்றனர். கடந்தகால போர் விளைவித்த ஒரு கோர நிகழ்வு இது.

கிளிநொச்சியின் 4 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் மொத்தமாக 6,170 குடும்பங்கள் குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பங்களாக இருக்கின்றனர். இவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவும், புலிகளிடம் பறி கொடுத்ததுபோக மீதியாகவுள்ள தமது பிள்ளைகளைக் காப்பாற்றி வளர்க்கவும் வழி தெரியாது திண்டாடுகின்றனர்.

இவ்வாறு தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு இருந்த போதிலும், கடுமையான உழைப்பாளிகளான இந்த மக்கள் தமது சொந்த முயற்சிகளால், தமது வீடுகளை திருத்தியும் புதிதாகக் கட்டியும் வாழுவதுடன், தமது தொழில் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர். அவர்களைப் பொறுத்த வரையில் இன்றைய காலகட்டத்தில் அரச அதிகாரிகளினதும், அரசியல் கட்சிகளினதும் ஆதரவு நிச்சயமாகத் தேவை. அந்த வகையில் அவர்களது நலன்களுக்காக அரசியல் உள் நோக்கமோ அல்லது சுயநலமோ இன்றி செயற்படும் நன்நோக்கு மனப்பாங்குடைய சமூகப் பொறுப்புக் கூறும் அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே இன்று அவர்களுக்குத் தேவைப்படுகின்றனர்.

-வானவில் -

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com