Saturday, July 6, 2013

வட மாகாண சபைத் தேர்தல் அபேட்சகர்களாக கே.பி - தமிழினி இல்லை.... தயா மாஸ்டர் மட்டுமே!!

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் ஆயுத மற்றும் அரசியல் பிரிவில் அங்கம் வகித்த முக்கிய தலைவர்களை வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்க சார்பில் அபேட்சகர்களாக நியமிக்கப் போவதில்லை என நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரனின் மறைவின் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவராகத்தெரிவுசெய்யப்பட்ட குமரன் பத்மநாதன் எனும் கே.பி, அரசியல் பிரிவின் தலைவி தமிழினி, முக்கிய ஆயுதப் பிரிவுகளின் தலைமைத்துவப் பதவி வகித்த கர்னல் நகுலன், கர்னல் ராம் ஆகியோரையும் அரசாங்க தரப்பில் அபேட்சகர்களாக நியமிக்க அரசாங்கம் எண்ணியிருப்பதாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிட்டன.

ஆயினும் அவ்வாறு பெயர் குறிப்பிட்ட எவரையும் அரசாங்கம் தமது கட்சி சார்பில் அபேட்சகர்களாக நியமிக்கப் போவதில்லை என அரச தரப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். அரச பாதுகாப்பில் உள்ள இன்னும் சில எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் மேலும் புனருத்தாபனம் பெற வேண்டியுள்ளதாகவும், அவர்களில் சிலரை அரசியல் சார் விடயங்களில் ஈடுபடுத்துவதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும் எனவும் அரச தரப்பிலுள்ள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதுபற்றி எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் ஊடகமொன்று வினவியபோது அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ‘நான் தேர்தலுக்கு ஒரு பகுதியினரை இணைத்துக் கொண்டு அரசாங்கம் சார்பாக போட்டியிட இருக்கின்ற போதும், எந்தவொரு புலி தலைவர்களும் இதில் இடம்பெறப் போவதில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது புனருத்தாபனம் பெற்று வெளியேறியுள்ள புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவி தமிழினி, பெரும்பாலும் தயா மாஸ்டரின் வெற்றிக்காக யாழில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார் எனவும் செய்திகள் கசிகின்றன.

அவ்வாறே, கே.பியும் அரசாங்கத்தின் வெற்றிக்காக தம்மாலான பங்களிப்புக்களை யாழில் ஆற்றவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.



(கலைமகன் பைரூஸ்)

1 comment:

  1. Let the old with new faces and with different labels try their best in the midst of the people they think
    they are always flexible

    ReplyDelete