Saturday, July 6, 2013

உம்மாவைக் கைவிடலாமா? முஸ்லிம் கட்சிகளிடம் வினா தொடுக்கிறார் எழுத்தாளர் அஷ்ரப் ஷிஹாப்தீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்ட பின்னர் சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து அவை அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றன.

இக்கட்சிகளில் உள்ள நமது சகோதரர்கள் சகோதர முஸ்லிம் கட்சிகளைத் தவிர ஏனைய கட்சிகளுடன், பிறநாட்டுத் தூதுவர்களுடன், பிற அரசியல்வாதிகளுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னளவிலான முயற்சி என்பதை இந்நடவடிக்கை கள் காட்டுகின்றனவே தவிர, அனைவரதும் நோக்கு சமூக நன்மை சார்ந்ததாகவே இருக்கிறது.

இன்று சமூகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை மனதில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன ஒரு பொதுச் சந்திப்பை நடாத்த வேண்டுமென மேற்படி கட்சிகளின் தலைவர்களிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்.

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்து பெரும்பான்மை முஸ்லிம் பொதுஜனம் மிக அதிருப்திக்குள்ளாகியிருக்கிறது. இதை நமது அரசியல் தலைவர்கள் எந்த அளவில் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு கட்சி அல்லது அரசியல்வாதியின் அரசியல் செயற்பாடுகளை அக்கட்சி அல்லது அரசியல்வாதி எதை எப்படிச் செய்தாலும் ஆதரிப்பவர்கள் வெகுசிலரேயாவார். கட்சி அல்லது அரசியல்வாதி கூட்டம் போட்டால் முன்னணியில் நிற்போரும் அவர்களேயாவர். ஆனால் அவர்களது வாக்குகள் மட்டும் கட்சிக்கும் அரசியல்வாதிக்கும் போதுமானவையல்ல.

எப்போதும் நிதானமாகச் சிந்திக்கும் பொது ஜனம் தூரத்தில் நின்று அல்லது விலகி நின்று இவற்றை அவதானித்து விட்டு ஒரு முடிவுக்கு வரும். அந்தப் பொது ஜனத்தின் வாக்குகளே வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கின்றன.

ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் வெவ்வேறு கட்சிகளைச் சோர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளாள் மீது வசை பாடுவதை, குற்றம் சுமத்துவதை நான் குறிப்பிடும் இந்தப் பொது ஜனம் விரும்புவதேயில்லை. அடிப்படையில் “நாம் முஸ்லிம்கள். நமது தனிப்பட்ட அரசியல் நலன்களை முன்னிட்டு சமூகத்தின் பெயரால் பொதுத் தளத்தில் மோதிக் கொள்ளக் கூடாது” என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.

இந்தப் பொதுஜனம் இன்றைய சூழ்நிலையில் தன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இன்னமும் புரியாமல் நமது அரசியல் தலைமைகள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனவோ என்ற ஒரு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.

அடுத்த தேர்தலில் அதன் விளைவுகள் என்ன என்பதை நாம் மிகத் தெளிவாகக் கண்டு கொள்ள முடியும்.

அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் முஸ்லிம் பொது ஜனத்தின் மனக்குமுறலைத் தணிக்கும் வகையில் நமது முஸ்லிம் கட்சிகள் ஒரு மேசையில் அமர்ந்து பேச வேண்டும். கட்சிகள் தனியே இருக்கட்டும். ஆனால் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைப் பொறுத்த வரை எல்லோரும் ஒரே கருத்துடன்தான் இருக்கிறோம் என்பதும் உண்மை.

ஒரு தாய்க் கட்சியிலிருந்து நீங்கள் பிரிந்து சென்றிருந்தீர்கள். பிரிந்தபடியே இருங்கள். ஆனால் அரசியலை இப்போதைக்கு ஒன்று சேர்ந்து நடத்துங்கள். அதைத்தான் இன்று முஸ்லிம் பொது ஜனம் விரும்புகிறது. இந்தச் சந்திப்பை ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது நடத்துங்கள்.

சமூகத்தின் பெயரால் நீங்கள் ஒன்று சேரவில்லை என்றால் வழமையாகத் தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படும் எல்லாச் சூக்குமங்களும் பலற்றுப் போகும் நிலையையே நான் பார்க்கிறேன்.

மற்றைய கட்சிகளுடன் பிரச்சிகைளைக் கலந்துரையாடும் உங்களுக்கு ஒரே தாயின் பிள்ளைகளான உங்கள் சகோதரர்களுடன் உட்கார்ந்து பேசுவதில் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.

மாறாக அது நன்மையையே கொண்டு வந்து தரும் சகோதரர்கள் தனித்தனி வீடுகளில் வாழலாம். ஆனால் “உம்மா”வைக் கைவிடலாமா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com