Friday, July 5, 2013

யாழில் நன்னீரின் அளவு குறைந்து செல்வதை தடுப்பது எப்படி?

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 சதவீதமான நீரானது உப்புநீராக மாறியுள்ளது. இந்நிலையில், 4500 ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட விவசாய நிலமானது தற்போது உவர்த்தன்மையாக மாறியுள்ளதால் இந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாடானது 1000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு ஆறுகள் காணப்படாததால் ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி 1270 மி.மீற்றர் மழைவீழ்ச்சியிலேயே யாழ்ப்பாணக் குடாநாடு தங்கியுள்ளது. இந்த மழைவீழ்ச்சியானது ஒக்ரோபர் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் வடகீழ் பருவப்பெயர்ச்சியிலிருந்து பெறப்படும் 87 சதவீத மழைநீராகும்.

கடந்த காலத்தில், யாழ்குடாநாட்டில் வீட்டுத் தேவைகளுக்கான நீரானது கிணறுகளிலிருந்தும், விவசாயத்திற்கான நீரானது துலாமிதித்தல் மூலமும் பெறப்பட்டது. ஆனால் 1950 ஆம் ஆண்டுகளிலிருந்து கிணற்று நீரானது நீர்ப்பம்பிகள் மூலம் இறைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 100,000 வரையான கிணறுகள் காணப்படுகின்றன.

கடல் மட்டத்திலிருந்து உருவாகும் நீரூற்றானது சுண்ணாம்பு அடுக்குப் பாறைகளின் ஊடாக சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தக் கூடிய நன்னீராக மாற்றப்படும் போது, இவ்வாறு நீர்ப்பம்பிகள் ஊடாக மேலதிக நீர் வெளிப்பாய்ச்சப்படுவதால் யாழ்குடாநாட்டு நீர் உப்புநீராக மாறும் ஆபத்து தென்படுகிறது.

தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 சதவீதமான நீரானது உப்புநீராக மாறியுள்ளது. இந்நிலையில், 4500 ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட விவசாய நிலமானது தற்போது உவர்த்தன்மையாக மாறியுள்ளதாகவும், இதனால் இந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய வல்லுனர்களின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி கடல்நீரேரி, உப்பாறு கடல்நீரேரி ஆகிய இரு கடல்நீரேரிகள் காணப்படுகின்றன. இவை முறையே 77 மற்றும் 26 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்தக் கடல்நீரேரிகளில் தேங்கும் நீரானது கடலுக்கு வழிந்தோடுவதுடன், உவர்நீராகவும் காணப்பட்டன. ஆனால், வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை பெய்யும் போது கிடைக்கும் மழைநீர் இந்த இரு நீரேரிகளிலும் தேக்கி வைக்கப்படுகின்றன. இவ்விரு கடல்நீரேரிகளிலும் தேக்கி வைக்கப்படும் நீரானது யாழ் குடாநாடு பெறும் மழைநீரின் 50 சதவீதமாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப் பெறும் நன்னீரின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், நாங்கள் வேறு வழிகளை ஆராயவேண்டிய தேவையுள்ளது. குடாநாட்டின் தெற்கே உள்ள ஆனையிறவு கடல்நீரேரியானது 77 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையுடையது. இது வன்னிப் பெருநிலப்பரப்பின் 940 சதுரகிலோமீற்றர் பரப்புக்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது. பிரதானமாக கனகராயன் ஆறு மற்றும் ஏனைய மூன்று சிறிய ஆறுகளிலிருந்து நீரைப் பெறுகிறது. வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் இந்த ஆறுகளுக்கு கிடைக்கப்பெறும் மேலதிக மழைநீரானது ஆனையிறவுக் கடல்நீரேரியைச் சென்றடைந்து, பின்னர் இந்நன்னீரானது ஆனையிறவுக் கடல்நீரேரியின் கிழக்குப் புறத்தேயுள்ள சுண்டிக்குளம் மற்றும் மேற்கு முனையிலுள்ள ஆனையிறவுப் பாலம் ஆகியவற்றின் ஊடாக கடலை அடைவதால், நன்னீரானது விரயமாக்கப்படுகிறது.

1960ஆம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தில், ஆனையிறவுக் கடல்நீரேரியிலிருந்து விரயமாகும் பருவப்பெயர்ச்சி மூலம் கிடைக்கப் பெறும் நன்னீரானது யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக 1960ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விபரங்கள்

• ஆனையிறவு கடல்நீரேரிக்கு மேற்கு முனையில் உள்ள ஆனையிறவு படகுத்துறையில் காணப்பட்ட வீதிகள் மற்றும் தொடருந்துப் பாலங்கள் என்பவற்றின் ஊடாக நன்னீர் வெளியேறி கடலுக்குள் செல்வதைத் தடுப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தியாக்கப்பட்டது.

• இதேபோன்று ஆனையிறவின் கிழக்கு முனையில் உள்ள சுண்டிக்குளத்தில் அணை ஒன்று கட்டப்பட்டு நன்னீர் கடலுக்குள் வெளியேறுவது தடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டு ஆனையிறவு கடல்நீரேரியில் சில ஆண்டுகள் நன்னீர் தேக்கி வைக்கப்பட்டது. ஆனால் கெட்டவாய்ப்பாக, இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்குகள் காரணமாக அணைக்கட்டு உடைக்கப்பட்டு, நன்னீர் கடலுடன் கலக்க நேரிட்டது.

• ஆனையிறவு கடல்நீரேரியிலிருந்து நன்னீரை தென் முனையிலுள்ள வடமராட்சி கடல்நீரேரிக்கு கொண்டு செல்வதற்காக ஆனையிறவின் வடமுனையிலிருந்து ‘முள்ளியான் தொடர் கால்வாய்’ என்கின்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இது 12 மீற்றர் அகலமும் 4 கி.மீற்றர் நீளமும் உடையதாகும். இந்தக் கால்வாய் அமைக்கும் திட்டத்தின் 80 சதவீதம் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில், இதற்கான நிதி கிடைக்காததால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

• தொண்டமனாறு ஆற்றின் நீர்க் கொள்ளளவை அதிகரித்து அதன் ஊடாக வடமராட்சி கடல்நீரேரி நன்னீரைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு சில ஆண்டுகளின் பின்னர், மரத்தால் செய்யப்பட்ட அணைக்கட்டு உடைந்ததால், நன்னீர் கடலுடன் கலக்க வேண்டியேற்பட்டது.

• அரியாலைக் கடலுடன் கலக்கும் உப்பாறு கடல்நீரேரியில் வான்கதவுகளை உருவாக்குவதற்கான திட்டம் வரையப்பட்டது. இதன் மூலம், உப்பாறு கடல்நீரேரியில் நன்னீர் நீரேரி ஒன்றை உருவாக்க முடியும் எனக்கருதப்பட்டது. இந்நிலையில் வான்கதவுகள் உருவாக்கப்பட்ட போதிலும் இவற்றின் பலகைகள் அழிவடைந்ததால் உப்பாறு கடல்நீரேரியில் தேக்கி வைக்கப்பட்ட நன்னீர் மீண்டும் கடலுக்குள் கலந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணத் திட்டத்தை மேற்கொள்வதற்கு 1960களில் மேற்கூறப்பட்ட திட்டங்கள் பகுதியளவில் அமுல்படுத்தப்பட்டதை அறியமுடிகிறது. ஆனால் இத்திட்டத்தின் முக்கிய பகுதியான, ஆனையிறவுக் கடல்நீரேரியிலிருந்து வடமராட்சி நீரேரிக்கு நன்னீரை வழங்கக் கூடிய ‘முள்ளியான் தொடர் கால்வாய்த்’ திட்டம் முழுமையாகப் பூர்த்தியாக்கப்படவில்லை. குறுகிய ஆண்டுகள் மட்டும் வடமராட்சி மற்றும் உப்பாறு நீரேரிகள் நன்னீரைத் தேக்கிவைத்திருந்தன. இதன் மூலம் யாழ்குடாநாடு பல்வேறு நலன்களைப் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் பல உவர் நீர்க் கிணறுகளிலிருந்து நன்னீரைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.

யாழ்ப்பாணத் திட்டத்தைப் பூர்த்தியாக்குவதன் மூலம், 13,000 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் யாழ்ப்பாண விவசாயிகள் நெல் பயிரிட்டிருக்க முடியும். தற்போது இந்தப் பகுதியில் காணப்படும் உவர்மண் மற்றும் ஏனைய காரணங்களால் 8000 ஹெக்ரேயரில் மட்டும் நெல் பயிரிடப்படுகிறது. வன்னிப் பெருநிலப்பரப்பில் நீர்ப்பாசனக் கால்வாய்கள் ஊடாக நீரைப் பெற்று அறுவடை செய்வதைப் போலல்லாது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச் செய்கையானது முற்றிலும் மழைநீரை நம்பியே மேற்கொள்ளப்படுகிறது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஒரு ஏக்கர் பெறும் மழைநீரின் மூன்றின் ஒரு பகுதியை மட்டுமே யாழ்ப்பாணத்தில் ஒரு ஏக்கர் நிலம் பெறும் மழைநீராகும். வடமராட்சி மற்றும் உப்பாறு கடல்நீரேரிகள் நன்னீர் தேக்கி வைக்கும் நீரேரிகளாக மாற்றப்பட்டால், கிணறுகளின் நீர் மட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் மழைநீரில் தங்கியிராது யாழ்ப்பாண விவசாயிகள் நிலக்கீழ் நீரைப் பயன்படுத்தி நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியும்.

வடமராட்சி மற்றும் உப்பாறு கடல்நீரேரிகளை அண்டியுள்ள 4400 ஹெக்ரேயர் நிலப்பரப்பானது உவர்த்தன்மையாகக் காணப்படுவதால் தற்போது இங்கு பயிர் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இவ்வாறு நன்னீரைத் தேக்கி வைப்பதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் 30 சதவீதமான நீர்மட்டம் அதிகரிக்கும். இந்த நீரானது வீட்டுத் தேவைகளுக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்துவதற்கான சாதகம் காணப்படும்.

சுண்டிக்குளம் படகுத்துறை மற்றும் முள்ளியான் தொடர் கால்வாய் என்பனவற்றின் பணிகள் பூர்த்தியாக்கப்படுவது தொடர்பாக அரசாங்கம் இன்னமும் எவ்வித அறிவிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. யாழ்ப்பாண-கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரணைமடுக்குளத்திலிருந்து நீரைப் பெற்று யாழ்ப்பாணத்திற்கு வழங்குவதே இத்திட்டமாகும். இரணைமடுவிலிருந்து நீரைப் பெற்று யாழ்ப்பாணத்திற்கு வழங்குவதால் இரணைமடு நீரை நம்பியிருக்கும் விவசாயிகள் பாதிப்படைவர். இதனால் 10 மில்லியன் டொலர்கள் செலவில் இரணைமடு அணைக்கட்டை இரண்டு அடி உயரம் வரை உயர்த்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2009 மற்றும் 2012 போன்று தாழ்வான மழைவீழ்ச்சி பெறப்படும் போது, இரணைமடுக் குளத்தின் கொள்ளளவானது வழமையை விடக் குறைவாகக் காணப்படும்.

இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டை இரண்டு அடியால் உயர்த்தி யாழ்ப்பாணத்திற்கு நீரை வழங்குவதற்கு 10 மில்லியன் டொலர்களை செலவிடுவதை விட, முன்னர் குறிப்பிட்ட யாழ்ப்பாணத் திட்டத்தை முழுமையாகப் பூர்த்தி செய்வது நலன் பயக்கும்.

-The Sunday Leader-

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com