Tuesday, July 9, 2013

பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பம்.

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாமை படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது புதல்வரையும் கைது செய்வதற்கான விசார ணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாமின் படுகொலை தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவீந்து குணவர்தனவை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இரகசிய பொலிஸார் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்ட போது, சந்தேக நபரான ரவீந்து குணவர்தனவை கைது செய்வதற்கு 3 தடவைகள் அவரது வீட்டுக்கு சென்ற போதிலும், அவரது தாயார் தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

வாஸ் குணவர்தன பேரில் ஆஜரான சட்டத்தரணி அங்கு கருத்து தெரிவிக்கையில், ரவீந்து குணவர்தன விசாரணைக்கு தேவைப்பட்டால் அவரை உரிய முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தாம் தயார் என தெரிவித்தார். இந்த விசாரணை பயங்கரவாத தடுப்பு சட்டம் உட்பட குற்றவியல் ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் நடத்தப்படுவது சர்ச்சைக்குரியதாகுமென சட்டத்தரணி அங்கு தெரிவித்தார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அதுவரை சந்தேக நபரான பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன் உத்தரவிட்டார்.

அத்துடன் அன்றைய தினத்தில் எந்த சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று நீதிமன்றத்தை அறிவுறுத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதே நேரம் வாஸ் குணவர்தனவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்காக அழைத்து சென்ற போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் காரணமாக நீதிமன்ற வளவில் அமைதியின்மை ஏற்பட்டது.

தனது புதல்வரின் புகைப்படம் ஒன்றை எடுத்து வந்த பெண்னொருவர் வாஸ் குணவர்தனவிடம் சமர்ப்பித்து தனது புதல்வரின் படுகொலைக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு குரல் எழுப்பினார். அந்த சந்தர்ப்பத்தில் வாஸ் குணவர்தனவின் ஆதரவாளர்கள் குறித்த பெண்ணை துரத்துவதற்கு முயற்சித்த போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com