Tuesday, July 16, 2013

சரணடைந்வர்களை விடுவிக்குமாறு வவுனியாவில் கவனயீர்ப்பு

அரசாங்கத்தின் உத்தரவாதத்தை ஏற்று இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்தவர்களைக்காட்ட வேண்டும் என்றும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிதாக்கல் செய்யப்பட்டிருந்த ஐந்து ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் வவுனியா மேல் நீதி மன்றத்தில் நேற்றையதினம் நடைபெற்றன.

இதன்போது, காணாமற் போயுள்ள உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தினர் வவுனியா நீதிமன்றத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமற்போயுள்ள தமது பிள்ளைகளையும் கணவன்மாரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தங்களுக்கு நீதிமன்றமே தஞ்சம் என்றும் கூறும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் காணாமற்போனோரின் உறவினர்கள் ஊர்வலமாக வந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு எதிரில் பிரதான வீதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

கொழும்பில் இருந்து செயற்படுகின்ற, காணாமற்போன உறவுகளைத் தேடும் சங்கத்தின் முக்கியஸ்தர்களான பிரிட்டோ, அருட்தந்தை சரத் இதமல்கொட ஆகியோருடன் மன்னார் பிரஜைகள் குழுவினரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோரும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பாக அவர்களது குடும்ப உறவினர்கள் இந்த ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததுடன் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இதன் போது வாதிட்ட எதிர்த்தரப்பினர் தமது விளக்கத்தைத் தருவதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்றும் கோரினர். அதேநேரம் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைளில் ஆஜராவதற்கு விசேட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த தவணை முதல் அவரே இந்த வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அரச தரப்பினர் தமது விளக்கங்களை தெரிவிப்பதற்கு அடுத்த தவணையே இறுதிச் சந்தர்ப்பம் என்று கூறியுள்ள நீதிபதி, வழக்கு விசாரணகளை எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com