Friday, July 12, 2013

கடலுக்கு அடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை அமைக்க சீனா திட்டம்!

கடலுக்கு அடியில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவின் கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களை இணைக்கும் போகாய் ஜலசந்தி யில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் 10 பில்லியன் டொலர் செலவில் நிறைவேற்றப்படும் என்று கடந்த 1994ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இப்பணிகளை 2010ல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 20 ஆண்டுகள் ஆகியும், திட்டம் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. எனவே, 123 கிலோ மீட்டர் குகை பாதை அமைக்கும் இத்திட்டத்திற்கு புத்துயிர் அளித்து விரைவில் முடிக்க அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக 42 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வடக்கு பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான தலியானில் தொடங்கி, கிழக்கில் உள்ள யான்டாய் நகரில் இப்பாதை முடிவடைகிறது. இதன் பணிகள் எப்போது முடிவடையும் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து விட்டால் வரும் வருமானத்தைக் கொண்டு 12 ஆண்டுகளில் திட்டதிற்காக செலவிட்ட தொகையை ஈடுசெய்ய முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகின் மீக நீளமான கடல் சுரங்கப்பாதை ஜப்பானில் உள்ளது. 54 கி.மீ. நீளம் கொண்ட இந்த செய்கான் சுரங்கப்பாதை, ஹான்சூ-ஹாக்காய்டோ தீவுகளை இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று, 1988ல் இந்த பாதை பயன்பாட்டுக்கு வந்தது.

இதேபோல் இங்கிலாந்து-பிரான்ஸ் நாடுகளிடையே 51 கி.மீ. நீளத்திலும் கடல் சுரங்கப்பாதை உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment