Friday, July 5, 2013

எகிப்த்தில் இராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார் மஹ்மூத் மன்சூர்! முன்னாள் ஜனாதிபதி முர்சி வீட்டுக் காவலில்!

எகிப்த்து ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி விலக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இடைக் கால ஜனாதிபதியாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அட்லி மஹ்மூத் மன்சூர் நேற்று பதவியேற்றார் இராணுவ புரட்சி மூலம் பதவி விலக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய முர்சி தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் முர்சி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற தவறியதாக இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

எகிப்தில் புதிய தேர்தல் நடத்தப்படுவதே ஒரே இலக்கு என மன்சூர் குறிப்பிட்ட போதும் தேர்தலுக்கான காலம் குறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஜனாதிபதி முர்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்த நிலையிலேயே கடந்த புதன்கிழமை இரவு முர்சி இராணுவத்தால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார முர்சி தனது இஸ்லாமிய திட்டத்திற்கு அமைய செயற்பட்டதாகவும் பொருளாதார பிரச்சினையை தீர்க்க தவறியதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

நாட்டில் நிலவும் பதற்றத்தையொட்டி ஏற்பட்ட வான்முறைகளில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாகவும் பெரும்பாலானோர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பதற்றம் ஆரம்பமானது தொடக்கம் இதுவரையில் சுமார் 50 பேர் அளவில் கொல்லப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை அரசியலமைப்பு உச்ச நீதிமன்றத்தின் நீதியரசராக சத்தியபிரமாணம் செய்த மன்சூர், இடைக்கால அரசின் தலை வராகவும் பொறுப்பேற்றார். இதன்போது அவர், 'குடியரசின் ஒழுங்குகளை பாதுகாப்பதாகவும், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மதிப்பதாகவும், மக்கள் விருப்புகளின் பாதுகாவலராக இருப்பதாகவும்' சத்தியபிரமாணம் செய்தார்.

'மோசடிக்காரர்களுக்கு அன்றி நேர்மையான மக்களின் விருப்புக்கு அமைய தேர்தல் நடத்தப்படும். ஒரு சுதந்திரமான மற்றும் ஜனநாயகமான பிரகாசமான எதிர்காலத்திற்கு இதுவே ஒரே வழி' என்று மன்சூர் வலியுறுத்தினார். அரசியல் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர இராணுவம் விதித்திருந்த 48 மணி நேர கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு, இஸ்லாமியவாதிகளால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பை ரத்துச்செய்த இராணுவம் புதிய தேர்தலுக்கும் வாக்குறுதி அளித்தது.

இராணுவ அறிவிப்பை தொடர்ந்து தலைநகர் கெய்ரோ எங்கும் இராணுவத்தின் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. எனினும் இது ஒரு இராணுவப் புரட்சி என முர்சியின் பேஸ்புக் பக்கம் விமர்சித்தது. மக்கள் சட்ட ஒழுங்குக்கு அடிபணிந்து இராணுவ சதிக்கு முகம் கொடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment