Sunday, July 7, 2013

இரவில் விபத்தை தவிர்க்க உதவும் 'ஆடியின்' புதிய கார் ஹெட்லைட் செயல்படும் விதம்!

2014 மாடல் ஆடி ஏ8 செடான் காரில் மேட்ரிக்ஸ் என்ற ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட புதிய ஹெட்லைட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கார் மார்க்கெட்டில் இது புதிய தொழில்நுட்பமாக இருக்கும். பாதுகாப்பு வசதிகள் கொண்ட மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட் நிச்சயம் விபத்துக்களை தவிர்க்க உதவும் என கருதப்படுகிறது. இந்த ஹெட்லைட்டின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை காணலாம்.

இந்த ஹெட்லைட்டில் 'ஹை பீம்' ஒளிக்கற்றைகளை பாய்ச்சும் வல்லமை கொண்ட 25 எல்இடி விளக்குகள் இருக்கும். ஒவ்வொரு ரிஃப்லெக்டருக்கும் 5 எல்இடி வீதம் பொருத்தப்பட்டிருக்கும். தானியங்கி முறையில் வெளியில் இருக்கும் வெளிச்சத்திற்கு தகுந்தாற்போல் ஒளிரும் வசதி கொண்டது.

இந்த ஹெட்லைட் அதிக பிரகாசமான ஒளி வெள்ளத்தை சாலையில் பாய்ச்சும். பகல் நேரத்தில் இந்த ஹெட்லைட் பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் சேர்ந்து காருக்கு மேலும் கவர்ச்சியான தோற்றத்தை தரும் என்றும் ஆடி கூறியிருக்கிறது.

இந்த ஹெட்லைட்டுடன் கேமரா ஒன்றும் இணைந்து செயல்படும். இதன்மூலம், எதிரில் வரும் வாகனங்கள், பாதசாரிகள் குறித்து கேமரா மூலம் அறிந்து கட்டுப்பாட்டு கருவி மூலம் ஹெட்லைட் இயக்கப்படும். எதிரில் வாகனம் வரும் பகுதியில் அதிக ஒளியை பாய்ச்சாமல், ஒளியை குறைத்துவிடும். இதன்மூலம், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கூச்சம் ஏற்படாது என்பது இதன் விசேஷம். அந்த வாகனம் அல்லது பைக் ஓட்டிகள் சென்றவுடன் மீண்டும் ஹை பீம் இயல்பு நிலையில் ஒளியை பாய்ச்சும். இதனால், விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

அடுத்ததாக, எதிரில் பாதசாரிகள் அல்லது விலங்குகள் பாதையை கடப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட பொருட்களின் மீது குறிப்பிட்டு மூன்று முறை அதிக ஒளியை பாய்ச்சும். மேலும், அபாயகரமான தூரத்தில் இருந்தால் ஒலி எழுப்பி டிரைவரை எச்சரிக்கும். ஒருங்கிணைந்த வசதிகள் கொண்ட இந்த ஹெட்லைட் முதலில் 2014 ஏ8 செடான் காரில் வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பிற கார் மாடல்களிலும் இந்த ஹெட்லைட்டுடன் அறிமுகப்படுத்த ஆடி திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment