Friday, July 12, 2013

மஸ்ஜிதுல் அரபா மீது கல், பன்றி இறைச்சி வீசி தாக்குதல்! மஹியங்கனையில் சம்பவம்

மகியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா ஜும்ஆப் பள்ளிவாசல் மீது நேற்றிரவு தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசலினுள் பன்றியின் உடல் பாகங்களும் வீசப்பட்டுள்ளதாகவும் நிர்வாக சபைத் தலைவர் எஸ்.எம்.சீனி முகம்மத்தெரிவித்தார்.

இச் சம்பவத்தினால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும். அவர் குறிப்பிட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நேற்றிரவு 11.15 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அச் சமயம் 6 பேரளவில் பள்ளிவாசல் வளாகத்தினுள் வந்தார்கள். திடீரென என் மீது மிளகாய்ப் பொடி வீசப்பட்டது. நான் உடனடியாக எனது அறையினுள் சென்று கதவை மூடிக் கொண்டேன்.

பின்னர் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைக்கப்படும் சப்தங்கள் கேட்டன. 10 நிமிடங்களுக்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

உடனடியாக மஹியங்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் மாகாண சபை உறுப்பினர் அநுர விதானகமகேவுக்கும் இது தொடர்பில் அறிவித்தேன். அவர்கள் உடனடியாக பள்ளிவாசலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

பள்ளிவாசலினுள் சென்று பார்த்த போது பன்றி ஒன்று வெட்டப்பட்டு அதன் உடல் பாகங்கள் அனைத்தும் வீசப்பட்டடிருந்தன. நாம் உடனடியாக பள்ளிவாசலைக் கழுவி சுத்தப்படுத்தினோம்.

இன்று காலை வழமை போன்று சுபஹ் தொழுகை இடம்பெற்றது.

சம்பவம் நடைபெற்றது முதல் பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இரகசிய பொலிசாரும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் பள்ளிவாசலுக்கு வந்து வாக்குமூலங்களைப் பெற்றுச் சென்றனர்.

மஹியங்கன பிரதேச சிங்கள மக்கள் எம்முடன் நல்லுறவடனேயே வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிறு குழுவினர்தான் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.

மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா ஜும்ஆப் பள்ளிவாசல் 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment