'பறக்கும் மீன்கள்' திரைப்படத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் இனப்பிரச்சினை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட 'பியம்பனா மாலுவோ' (பறக்கும் மீன்கள்) என்ற திரைப்படம் இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதனால் திரைப்பிடத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக கொழும்பில் இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்படவிருந்த நிலையிலேயே இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த திரைப்படத்தை தயாரித்த சஞ்ஜீவ புஷ்பகுமாரவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த திரைப்படமானது பொதுமக்களுக்கு காண்பிப்பதற்கு உகந்தது என்று தணிக்கை சபை அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச விருது பெற்ற இந்த திரைப்படத்தை தயாரித்த நிறுவன அதிகாரிகளிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு எதிராக கொழும்பு நகர மண்டபத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பான்ஸ் பிளேஸிலுள்ள பிரான்ஸ் தூதுவராயலயம் வரையிலும் சென்றதுடன் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அங்கவீனமுற்ற இராணுவத்தினரும் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment