Tuesday, July 23, 2013

ஜும்ஆத் தொழுகைக்கு அமைச்சர் இடைஞ்சலாக இருந்ததும் பள்ளியில் முடிவெட்டிய செயலும் அடிப்படைவாத செயல்களாகும்! – முஸம்மில் (ஒலிவடிவம் இணைப்பு)

எந்த இடத்திலிருந்து வெளிவந்திருந்தாலும் அனைத்துவித மத அடிப்படைவாதங்களும் மேற்கத்தேய ஏகாதிபத்தியவாதிகளின் சூட்சுமங்களே எனச் சுட்டிக் காட்டுகிறார் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஹமட் முஸம்மில்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மத அடிப்படைவாதச் செயல்கள் இரண்டையும் வன்மையாகக் கண்டித்து தேசிய சுதந்திர முன்னணியினர் இன்று (23) செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முஹமட் முஸம்மில் இவ்வாறு சுட்டிக் காட்டினார்.

‘சென்ற வெள்ளிக்கிழமை மகியங்கனை அறபா ஜும்ஆப் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்படுவதற்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் இடைஞ்சலாக நின்றார். அவ்வாறே சென்ற சில வாரங்களுக்கு முன்னர் பிறமத இளைஞன் ஒருவனுடன் காதல் தொடர்பு கொண்டமைக்காக முஸ்லிம் யுவதியொருத்தி, கல்கமுவ அல்ஹஸ்னா பள்ளிவாசலுக்கு இழுத்துவரப்பட்டு துன்புறுத்தப்பட்டு அவளது முடி தரிக்கப்பட்டது. முதலில் இந்த இரு விடயங்களையும் தேசிய சுதந்திர முன்னணியினராகிய நாங்கள் வன்மையாக்க் கண்டிக்கிறோம்.

இன்று ஜூலை 23 ஆம் திகதி. மிகவும் துன்பமயமான நினைவுகள் இழையோடுகின்ற நாள். கறுப்பு ஜூலை என்றழைக்கப்படுகின்ற அந்த கொடூரம் நிகழ்ந்து இன்றோடு 30 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட கறுப்பு ஜூலை பற்றியெரியும் கடும் குரோதம் மட்டுமே மீதமானது. இன்று அந்தக் குரோதத்திற்குப் பதிலாக இன்றைய அரசு தமிழ் மக்களுக்கு கைகொடுத்துள்ளது. 30 ஆண்டுகால பிரிவினைவாத யுத்த்த்தின் பின்னர் இன்று வடக்கில் மக்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல சுமூகநிலையை நோக்கி நகர்கின்றது. புலிப் பயங்கரவாதிகளின் இன்னல்களில் சிக்கித் தவித்த தமிழர்கள் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார்கள். இன்று அவர்களுடைய விவசாய அறுவடைகள் தலைநகரை நோக்கி வருகின்றன. வீதி அபிவிருத்தி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அவர்களுக்கு கிடைக்கின்றன. அகதிகளாக நின்றோர் இன்று அவர்களுடைய இடங்களில் வீடுகளை அமைத்து அன்றுபோல் இன்று சந்தோசமாக வாழ்கிறார்கள்.

தங்களது கூலிப்படையாகிய புலிப் பயங்கரவாதிகளை அனுப்பி இந்நாட்டை பிளவுபடுத்தி, பிரிப்பதற்கு முடியாது போனமையால் தற்போது மீண்டும் மதங்களிடையே அல்லது இனங்களிடையே காணப்படுகின்ற வித்தியாசங்களை கண்டறிந்து பிரச்சினைகளை இலங்கை நாட்டினுள்ளே ஏற்படுத்த மேற்கத்தேய ஏகாதிபத்தியவாதிகள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்று இவ்வாறு முயற்சி மேற்கொண்டு மத அடிப்படைவாதத்தை உருவாக்கி இந்நாட்டிலே மீண்டுமொரு பிரச்சினையை ஏற்படுத்துவதற்கே. அனைத்து மத அடிப்படைவாதிகளும் மேற்கத்தேயத்தின் அடிவருடிகளே. அவர்கள் நாட்டைப் பிரித்துக் கூறுபோடுவதற்கே முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மனதிற் கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையானது முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமான கடமையாகும். அதற்கு இடைஞ்சலாக இருப்பதென்பது இந்நாட்டு வரலாற்றுக்கு களங்கம் விளைவிப்பதாகும். அதேபோல, முஸ்லிம் பள்ளிவாசலினுள் யுவதியொருத்தியின் முடியைத் தரித்து அவளுக்கு அமானுஷ்ய முறையில் தண்டித்த செயலும் இந்நாட்டு சட்டத்திற்கு அபகீர்த்தி சேர்ப்பதாகும். அது தலிபான்களின் செயலை ஒத்த செயலாகும். பெரும்பான்மை முஸ்லிம்கள் இதனை வன்மையாகக் கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் வடமேல், மத்திய, வட மாகாணங்களில் தனித்து நின்று போட்டியிட முன்வந்திருப்பது குறித்தும் சற்றுச் சொல்ல வேண்டியிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமைத்துவம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இரகசிய ஒருமைப்பாட்டுக்குள் வந்திருப்பதை நாங்கள் தொடர்ந்து கண்டு வருகின்றோம். தற்போது அவர்கள் தனித்து நின்று போட்டியிட்டு அவர்கள் செய்ய முற்படுவது என்னவென்றால், புலிகள் அமைப்பின் அரசியல் முன்னணியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்ற முஸ்லிம்களின் வாக்குகளை பல குவியல்களாகப் பிரித்து வடக்கிலுள்ள சாதாரண முஸ்லிம் மக்களிடையே உள்ள புலி ஆதரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதிருக்கின்ற விரோதத்தை உடைப்பதற்கேயாகும்.’

இங்கு ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த வினாவுக்குப் பதிலளிக்கும்போது முஹமட் முஸம்மில் கீழ்வருமாறு தெரிவித்தார்.

‘தேசிய சுதந்திர முன்னணி வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டாது. வட மாகாண சபைத் தேர்தலுக்காக பெயர் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளும் கடைசித் திகதிக்கு முன்னர் 13 திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட மாட்டாது என்பதை அறிந்துகொண்டதனாலேயே நாங்கள் அந்த முடிவுக்கு வந்தோம். என்றாலும் எதிர்காலத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரிவினைவாத அதிகாரங்களை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன் நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து கருமமாற்றுவோம்’

அதேபோல இம்முறை வடமேல், மத்திய மாகாணங்களுக்காக தேசிய சுதந்திர முன்னணியின் அபேட்சகர்கள் சுதந்திர ஐக்கிய மக்கள் முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்கள். அதற்கேற்ப, மத்திய மாகாண சபைக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ, கண்டி மாவட்டத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பிரேமவன்ச, மாத்தளை மாவட்டத்திலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சரத் விஜேநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளனர். அதேபோல, வடமேல் மாகாணத்திற்கு குருணாகலை மாவட்டத்திலிருந்து முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சேனாரத்ன த சில்வாவும் புத்தளம் மாவட்டத்திலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன்சிரி ஹேரத் ஆகியோர் போட்டியிடுவர்’

தமிழில்: கலைமகன் பைரூஸ்


Online recording software >>

2 comments :

ஈய ஈழ தேசியம் ,  July 23, 2013 at 8:45 PM  

தெளிவான கருத்து.

Vani RAM ,  July 23, 2013 at 9:47 PM  

மலேஷியாவின் சுங்கை பூலோவுக்கு அருகில் இருக்கும் தொடக்கப் பள்ளி ஒன்றில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ரமலான் நோன்பு மாதத்தின்போது குளியலறையை ஒட்டிய பகுதியில் சாப்பிடும்படி நிர்பந்திக்கப்பட்டதைக் காட்டுவதாக கூறப்படும் படங்கள் சில இணையதளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த புகைப்படங்களை தமது முகநூலில் வெளியிட்டவர் அந்த பள்ளியில் படிக்கும் பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் படங்களில் அந்தப் பள்ளிக்கூடத்தின் குளியலறையை ஒட்டிய உடை மாற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள மேசைகளைச் சுற்றிலும் மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. இவற்றில் கணிசமானவர்கள் மலேஷிய இந்திய வம்சாவளியினரைப் போல தோன்றுகின்றனர்.


இது ரமதான் மாதம் என்பதால் பள்ளியின் சிற்றுண்டிச் சாலை மூடப்பட்டிருப்பதை காட்டும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளியின் சிற்றுண்டிச்சாலை ரமதான் மாதம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்றும் கருதப்படுகிறது.

பள்ளிக்கூட சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டிருப்பதால் பள்ளியின் கழிப்பறை/குளியலறைகளுக்கு அடுத்து உள்ள உடைமாற்றும் இடத்தில் மேஜைகள் போடப்பட்டு அங்கே பள்ளி மாணவர்களை சாப்பிடுமாறு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டதாக கூறப்படுவது சரியான தகவலல்ல என்கிறார் மலேஷிய அரசின் கல்வித் துணை அமைச்சர் பி கமலநாதன். அவருக்கு கிடைத்த தகவலின்படி, இந்த பள்ளிக்கூடத்தின் கேண்டீனில் மராமத்து பணிகள் நடப்பதால் அது கடந்த மார்ச் மாதமே மூடப்பட்டுவிட்டதாகவும், ரமலான் நோன்புக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பதே தமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல் என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கமலநாதன், அனாலும் தற்காலிகமாக குளியலறையை ஒட்டிய இடத்தில் பள்ளிக்கூட மாணவ மாணவிகளை சாப்பிடவைத்தது தவறு என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காக தாம் நேரடியாக அந்த பள்ளிக்கு நாளை செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com