Tuesday, July 2, 2013

கே.பி யை கொண்டுவந்து விசாரிக்க ஆணையிடுவீர்! முன்னாள் சிபிஐ இன்ஸ்பெக்ரர் இந்திய உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்புடையதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள புலிப்பயங்கரவாதிகளுக்கான ஆயுத விநியோகிஸ்தர் கே.பி இலங்கையில் சுதந்திரமாக உள்ளதாகவும் அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கோரி முன்னாள் சிபிஐ அதிகாரி ஒருவர் இந்தியாவின் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய செய்தி ஒன்று இவ்வாறு தெரிவிக்கின்றது :

சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ஜெ.மோகன்ராஜ். இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளராக இருக்கிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. விசாரணை குழுவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.

ராஜீவ்காந்தி கொலை சம்பவம் குறித்து ஜெயின் கமிஷன் விசாரித்தது. அதன் இறுதி அறிக்கையில் சந்திரசாமி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் கே.பி.என்ற குமரன் பத்மநாபன் உள்பட பலருக்கு ராஜீவ்காந்தி கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கிய பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை கண்காணிக்கவும், கைது செய்யுவும் சி.பி.ஐ.யில் பன்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு குழுமம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த குமரன் பத்மநாபனை 2009-ம் ஆண்டு இலங்கை அரசு கைது செய்தது. பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் இலங்கை அரசு வாபஸ் பெற்றது. தற்போது இலங்கையில் குமரன் பத்மநாபன் சுதந்திரமாக உள்ளார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு குமரன் பத்மநாபன் அனுப்பி வைத்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அவரை கைது செய்ய சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து மத்திய அரசுக்கு 3.5.2013 அன்று மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குமரன் பத்மநாபனை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரிடம் விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து வருகிற ஆகஸ்டு 5-ந் தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

1 comment: