நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை நிறுத்த இலங்கை தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்று(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடலின் முடிவில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
இந்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு இன்று திங்கட்கிழமை பதிவுத் தபால் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய கட்சிகள் குறிப்பாக ஈபிஆர்எல்எப்,ரெலோ, புளொட் ஆகியன ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, சாதகமான முடிவொன்றை எடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பான தங்களது கருத்துக்களை ஏனைய கட்சியினரும் வெளிப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்தார்.
The voters have to decide the fate of the northern province
ReplyDelete