Monday, July 8, 2013

விமோசனம் (குறுந்திரைப்படம்)

கல்முனை தமிழ் பிரிவில் பலவிதமான கலைப்படைப்புகள் வெளியானபோதும், முதன்முறையாக குறுந்திரைப்படமொன்றினை தயாரித்து வரலாற்றில் புதிய மையிற்கல்லில் கால்பதிக்கின்றது பாண்டிருப்பு அகரம் சமூக அமையம். சமூக சேவையில் ஒரு தசாப்தத்தினைக் கடந்து இலக்கிய வானிலும் மணிப்புறா எனும் சஞ்சிகை ஊடாக சிறகடித்துப்பறக்கும் அகரம் சமூக அமையம் தனது புதிய முயற்சியாகவும் குறுந்திரைப்பட வரலாற்றில் கல்முனை தமிழ் பிரிவின் முதற் குறும்படமாகவும் வெளிவர இருக்கின்றது.

கவிஞர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் இயக்கத்தில் உருவான விமோசனம் குறுந்திரைப்படம், இன்றைய காலகட்டத்தில் அதிகமான குடும்பங்கள் எதிர்நோக்கும் துர்ப்பாக்கியம் நிறைந்த வாழ்வினைக் குறித்திருக்கும். விமோசனத்தில் நடிகர்களாக அகரம் துஜியந்தன், இளம் எழுத்தாளர் புதுமைவாணன் எனும் க.டணிஸ்கரன், ம.கலாயினி, தே.சினேகா, யோ.யுகசன், கவிஞர் மருதமுனை விஜிலி, கலாநிதி செ.கணேஸ், ஓய்வுநிலை அதிபர் இ.இராஜரெட்ணம் மற்றும் கலாநிதி கண.வரதராஜன் என எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் எனப் பலர் இணைந்து இக்குறும்படத்தில் பாத்திரமேற்று நடித்துள்ளனர்.

விமோசனமானது இச்சமூகத்திலுள்ள பலருக்கும் விமோசனமளிக்கும் வகையில் கதை, திரைக்கதை வசனமென அழகுற பாவாணர் அக்கரைப்பாக்கியனால் ஆக்கம்பெற்றுள்ளது. அகரம் தயாரித்து வழங்கும் இக்குறும்படத்தினை ஆழ நுட்பத்துடன் ஒளி,ஒலிப்பதிவு செய்திருக்கின்றார் பாண்டிருப்பு சுகா ஒளிப்பதிவாளர் ரா.ரகு.

சாதாரண மக்கள் வாழும் பல்வேறு வகையான இயற்கைச் சூழல் நிறைந்த காட்சிகளோடு தயாரிக்கப்பட்டிருக்கும் விமோசனம் நிச்சயமாக பார்க்கும் பார்வையாளரைத் தன்பக்கம் கட்டி ஈற்றில் விமோசனம் அளிக்கும் என்பது உறுதி.

இக்குறும்பட வெளியீட்டு விழா எதிர்வரும் 13ம் திகதி சனிக்கிழமை பி.ப 3மணிக்கு பாண்டிருப்பில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த புகழ்பூத்த கலைஞர்கள், கவிஞர்களெனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com