மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை
இலங்கை மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையில் இடம்பெற்ற முக்கிய போட்டியில் இலங்கை அணி டக்கேவர்த் லூயிஸ் முறையில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிறன்று இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான போட்டி ட்ரினிடாட்டில் நடைபெற்றது.
இந்நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் மஹேல ஜயவர்தனவும், உபுல் தரங்கவும் தலா 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் இலங்கை அணியினர் 19 ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்கள் எடுத்திருந்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இதில் சங்கக்கார மிகச்சிறப்பாக விளையாடி 90 ஓட்டங்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மழையின் காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்கள் நீடித்த இந்த ஆட்டம் 41 ஓவராக குறைக்கப்பட்டது. இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 219 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து 41 ஓவர்களில் 220 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் சார்லஸ் இருவரும் தலா 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். பிராவோ 70 ஓட்டங்களுடனும் சிம்மன்ஸ் 67 ஓட்டங்களுடனும் எடுத்து சிறப்பாக விளையாடினர். பின்னர் விளையாடிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 41 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை மட்டும் எடுத்தது. இதனையடுத்து டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
மிகச்சிறப்பாக விளையாடி 90 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்த சங்கக்கார ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை சந்திக்கிறது. இப் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகும்.
0 comments :
Post a Comment