Wednesday, July 3, 2013

பௌதீக மற்றும் ஆளணிப் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்க! மூதூரில் பேரணி (படங்கள் இணைப்பு)

மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணிப் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்து நேற்று மூதூரில் பேரணியொன்று இடம்பெற்றது. ஆயிரத்திற்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்ட இப்பேரணி மூதூர் எரிபொருள் நிலைய சந்தியிலிருந்து ஆரம்பித்து தள வைத்தியசாலை வரை சென்றது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் வைத்திய சாலைக்குத் தேவையான ஆளணியினரை பெற்றுத்தருமாறும், போதிய கட்டிட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும், எழுதப்பட்ட வாசகங்களை தாங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர்.

மிகப்பழமையான இவ்வைத்தியசாலை 2006ஆம் ஆண்டு முதல் தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதும் போதிய வசதிகள் எதுவும் இல்லாத நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றது. பேரணியை ஏற்பாடு செய்த வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.எம்.தௌபீக் கருத்து தெரிவித்தபோது,

இவ்வைத்தியசாலையானது தள வைத்தியசாலையாக இருப்பதனால் மூதூர் பிரதேச மக்கள் மட்டுமன்றி ஈச்சிலம்பற்று, சேருவில பிரதேசங்களையும் உள்ளடக்கி சுமார் ஒரு இலட்சம் பேர்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், ஆனால் குறைந்தளவான ஆளணியினரும் பௌதீக வளப்பற்றாக்குறையும் மக்களுக்கு போதிய வைத்திய சேவையை வழங்குவதற்குத் பெரும் தடையாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

நாளொன்றுக்கு வெளி நோயாளர் பிரிவிற்கு மட்டும் 400 ற்கும் அதிகமான நோயாளர்கள் வருவதாகவும் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஓரிருவரே கடமையில் இருக்கின்றனர். இதனால் ஒரே நேரத்தில் பெருந்தொகையாக வந்து குவிகின்ற நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றர்.

சில காலமாக இயங்கி வந்த சத்திர சிகிச்சை கூடம் ஆளணி பற்றாக்குறையினால் இழுத்து மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவும் போதிய வசதிகள் இன்றியே இயங்கி வருகின்றது. கதிரியக்க கூடமும் முறையாக இயங்க முடியவில்லை. கிளினிக் வரும் நோயாளர்கள் அமர்ந்திருப்பதற்கு போதிய இடமில்லாது அங்குமிங்கும் குந்திக் கொண்டு இருக்கும் நிலையே இருக்கின்றது. வைத்தியர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் முறையான விடுதி வசதிகூட இவ்வைத்தியசாலையில் இல்லை. அவர்கள் பெரும் தியாகத்தோடுதான் இங்கு தங்கியிருந்து சேவையாற்றுகின்றனர்.

எனவே, இவ்வைத்தியசாலையில் வைத்திய விடுதிகள், நோயாளர் விடுதிகள், மருந்துக் களஞ்சியம், கதிர் இயக்க கூடம், இரத்த வங்கி, ஆய்வு கூடம் முதலானவை முறையாக அமைக்கப்பட வேண்டும். பற்றாக்குறையாக இருந்து வருகின்ற அத்தியவசிய உபகரணங்களும் போதிய ஆளணியினரும் வழங்கப்படவேண்டும்.அப்போதுதான் இவ்வைத்தியசாலையினால் சிறந்த சேவையை வழங்கமுடியும் என்றார்.

பேரணி முடிவின் போது ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கென மகஜர் ஒன்று மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். ஹரீஸ், மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

(யு.எம்.இஸ்ஹாக்)





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com