Monday, July 29, 2013

முகாம்களுக்குள் இராணுவத்தை ஒருபோதும் முடக்க முடியாது!

வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் ஒருபோதும் ஈடுபடவுமில்லை இனிமேலும் ஈடுபடாதுமட்டுமன்றி வடக்கில் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கவேண்டிய தேவையும் இல்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே இராணுவம்தான் இதற்கமைய அந்தத் தேர்தல் நடவடிக்கைகள் சிவில் அதிகாரிகளாலும் சட்ட நடவடிக்கைகள் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் எனவே இங்கு இராணுவத்தின் தலையீடு ஒருபோதும் இல்லை. இவ்வாறான நிலையிலும் தமிழ்க் கூட்டமைப்பு எம் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பெரும் வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனத்திலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டி பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டிருந்த சம்பந்தன், இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தேர்தல் நடவடிக்கையில் இராணுவத்தின் தலையீடு தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கலாமே. ஆனால், பொலிஸில் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.

வடக்கில் சட்ட அமுலாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் பொலிஸார்தான் ஈடுபட்டு வருகின்றனர் எனக்குறிப்பிட்ட அவர் வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் மக்களுக்கான சேவையையும் பிரிவினைவாதிகள் உள்ளிட்ட வேறு குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபடுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் , இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எமக்குப் பெரும் வேதனையளிக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment