Tuesday, July 2, 2013

டக்ளஸை கொலை செய்ய முயற்சித்தவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள தயார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்ய சதி தீட்டியமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரான செல்வகுமார் சத்யலீலா என்ற சந்தியா என்பவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள தயாராக இருப்பதாக சட்டத் தரணி லக்ஷ்மன் பெரேரா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டவரின் சார்பில் இதனை மேல் நீதிமன்ற நீதிபதி ஐரங்கனீ பெரேரா முன்னிலையில் தெரிவித்த சட்டத்தரணி பெரேரா சட்டமா அதிபருடன் பேசுவதற்கு நேரத்தை பெற்றுத் தருமாறும் கேட்டார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் 09 ஆண்டுகளாக கைதாகி உள்ளார். வழக்கு விசாரணையும் அரைவாசியே முடிந்துள்ள நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை மீண்டும் பரிசீலிக்குமாறு சட்டத் தரணி பெரேரா கோரிக்கை விடுத்தார்.

குற்றம் சுமத்தப்பட்டவர் சட்டமா அதிபருக்கு இதுபற்றி காரணங்களைத் தெரிவிக்க கால அவகாசம் பெற்றுக்கொடுப்பது பொருத்த மென அரச சட்டத்தரணி சேத்திய குணசேகர தெரிவித்தார். வழக்கை ஆகஸ்ட் 01 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அத்தினத்தன்று சட்டமா அதிபரின் தீர்மானத்தை அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

2004 மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஜுலை 24 ஆம் திகதி வரை கொள்ளுப்பிட்டியில் தற்போது மரணித்துள்ள தியாகராஜா ஜயரானி என்பருடன் அமைச்சரைக் கொலைசெய்ய சதி தீட்டியமை, பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஏக்கநாயக்க, சார்ஜன்ட் ஹெரல்ட் ஆட்டிகல, பந்து ஜயசிங்க ஆகியோருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை போன்றவை குற்றச்சாட்டுக்கள் ஆகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com