எமது வாழ்க்கை எதைப்போன்றது தெரியுமா!
மாற்றம் ஒன்றுதான் இங்கு மாறாதது என்றார் கார்ல் மாக்ஸ். எல்லாமே மாறும். மாறுவதன் ஊடாகவே நாம் வளர்ந்து வருகிறோம். இறுகிப்போய் மாறாமலிருக்கும் எதுவும் வளர்வதில்லை. நமது வாழ்நிலைகளில், உலகச் சூழ்நிலைமைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களோடு இசைவுபட நம் சிந்தையிலும் மாற்றத்திற்கு இடம் விடவேண்டும்.
குறிஞ்சியில் விலங்குகளை வேட்டையாடி, முல்லையில் விலங்குகளை வளர்த்துப் பழகிய காட்டுமிராண்டிகளின் பேரர்கள்தாம் நாங்கள். நேரே ஜீன்ஸ்சும் சேட்டும் சப்பாத்துக்களோடும் வந்து பிறந்துவிடவில்லை. காலத்தோடு சேர்ந்து நாம் நம்மையும் மாற்றிக்கொண்டுதான் வந்திருக்கிறோம்.
இன்றும் எல்லோரும் மாடுகட்டிச் சூடடித்துக்கொண்டிருந்தால், பெருகியுள்ள சனத்தொகைக்கு உணவுபோட முடியாது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறோம், வண்டில் கட்டிப் போய்க்கொண்டிருந்தால் வாழ்க்கை வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதையும் தெரிந்திருக்கிறோம். இது இயற்கை. மாற்றத்தின் அறிகுறி. காலத்தின் சின்னம்.
பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதனால் அவை மூடப்பழக்கங்கள் என்று நாம் எண்ணவில்லை. அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதனாலும், அப்போது அவர்களால் அவ்வளவுதான் முடிந்தது என்பதனாலும், இன்று நாம் மாறித்தான் ஆகவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறோம்.
சிக்கிமுக்கிக் கல்லால் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘எடிசன்’. பிறகு படிப்படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள், வாகனங்கள், குடுமிவைத்தல், வேட்டையாடுதல், ஆண் பெண் உறவு ஆகிய எண்ணங்களில் – பொருள்களில் எல்லாம் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம்.
பெரியம்மை என்ற நோய் வந்தால், சமீப காலம் வரை காட்டுமிராண்டிக்கால நம்பிக்கைகளையே வைத்திருந்த நாம், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இன்று மருத்துவ உதவிகளால் அந்த நோயை முற்றிலுமாக ஒழித்துவிடவில்லையா? அதேபோல் கொத்துக் கொத்தாய் உயிர்களைப் பறித்துக்கொண்டிருந்த கொலரா, இளம்பிள்ளைவாத நோய் போன்றவற்றையெல்லாம் மருத்துவ வளர்ச்சியால் வென்றிருக்கிறோம்.
மாடு வெட்டி, ஆடு வெட்டி, கோழி வெட்டி… ஏன், தன் தலையைத் தானே வெட்டி வழிபாடு செய்த அந்தக்கால சடங்குகளையெல்லாம் மெல்ல மெல்ல மறந்துவிட்டு, எலுமிச்சம்பழம் அறுக்கவும், தேங்காய் உடைக்கவுமாக வழிபாட்டுச் சடங்குகளையும் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. இன்றைய கால யதார்த்தத்திற்கு அமைவாக நம் சிந்தனையிலும் மாற்றம் வரவேண்டும். நம் கஷ்டங்களைத் துயர்களைத் தாண்ட முடியாமலிருப்பதற்கு நாம் கடந்தகாலத்து நினைப்புகளிலேயே தேங்கியிருப்பதும் காரணம். நகர்கிற நதியில்தான் அழுக்குகள் தங்காது@ தேங்கிய குட்டையில் புழுக்கள்தான் நெளியும்.
பகை வளர்ப்பதும், ஒரு நிலத்தில் இரு குழுக்கள் வாழமுடியாமல் இருந்ததும், மோதி ஒருவரை மற்றவர் வீழ்த்தி முடிவுகாண்பதும் குகைமனிதர் காலத்து முறைகள்.
பல்லின பல்கலாசாரங்களின் கூட்டிணைவும், பரஸ்பரம் பேச்சில் நம்பிக்கையும், இணக்கமும் வேறுபட்ட வண்ணங்களின் வானவில் சேர்க்கை அழகும் இன்றைய நம் வாழ்வின் முறைகள். எனவே எல்லோருமாய் வாழ்வதற்கென முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்வோம்!
...............................
1 comments :
Its really a wonderful article,hope the readers would read it and digest it.Live accordingly to the circumstances,Live accordingly to the atmosphere.Mostly the oldest traditions,ancientcustom,beliefs cannot suit the way of our revolutionary positive thinking.
Post a Comment