பாரத லக்ஷ்மன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு துமிந்த சில்வா தனக்குத் தானே சுட்டார் - சாட்சி
பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு துமிந்த சில்வா, தனக்குத் தானே சுட்டுக்கொண்டார் என பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் சுரங்க குமார சாட்சிய மளித்துள்ளார்.
"துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகில் கூடியிருந் தவர்கள் இவ்வாறு தெரிவிப்பதை தான் செவிமடுத்ததாக" அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை வழக்கு, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 பேருக்கு எதிராக நடைபெற்றுவரும் நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாரத லக்ஷ்மன் தரப்பினர் சார்பில் மன்றில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேகநபரான துமிந்த சில்வாவினால் மன்றில் ஆஜராகி பதிலளிக்க முடியுமா என்று கேட்டறியுமாறு' நீதவானிடம் குறிப்பிட்டார். இருப்பினும், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்ட நிலையில், சாட்சியாளர் அழைக்கப்பட்டார்.
இதன்போது, சாட்சியாளராக மன்றில் ஆஜரான பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் சுரங்க குமார, தான் கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி முல்லேரியா ராஹல வித்தியாலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் கைத்துப்பாக்கிகள் மற்றும் ரீ – 56 ரக துப்பாக்கிகள் போன்றன பலரதும் கைகளில் இருந்தன. என தெரிவித்தார்.
தொடர்ந்து சாட்சியமளித்த அவர், அப்போது, அப்பகுதிக்கு டிபென்டர் ரக வாகனமொன்று வந்தது. அதில் துமிந்த சில்வாவும் இருந்தார். அப்போது, அப்பகுதியிலிருந்த பெண்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டதுஎன தெரிவித்தார்.
பாரத மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட துமிந்த சில்வா, தன்னைத் தானேயும் சுட்டுக்கொண்டார் என்று அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டதை நான் செவிமடுத்தேன் என தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட நீதவான், டிபென்டர் ரக வாகனத்தில் இருந்தவர்கள் தற்போது நீதிமன்றத்தில் உள்ளனரா? என்று வினவினார். அதற்கு பதிலளித்த சாட்சியாளர், "இல்லை" என தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment