Tuesday, July 16, 2013

பழங்கள் எனும் பாணியில் டின்னிலடைத்து போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டுவந்த பாக்கிஸ்தானி கைது.

டின்னில் அடைக்கப்பட்டு சூட்சுமமாக இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முயன்ற பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் போதை பொருள் ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டின்னில் அடைக்கப்பட்ட பழங்கள் எனும் போர்வையில் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட குறித்த ஹெரோயின் போதைபொருள் விற்பனைக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த ஹெரோயின் வர்த்தகத்தின் முக்கிய சந்தேக நபராக இனங்காணப்பட்டவர் இதற்கு முன்னர் பல்வேறு நாடுகளில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் என தெரிய வந்துள்ளது.

இவரிடமிருந்து சில போலி அடையாள அட்டைகளும், ஐ.நா அமைப்பு வழங்கிய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றும் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் 5 சிம் அட்டைகளும், கையடக்க தொலைபேசிகள் நான்கும், கைப்பற்றப்பட்டன. போதை பொருள் ஒழிப்பு பிரிவின் கலால் திணைக்கள பிரிவு அதிகாரிகள் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.


இதேநேரம் மாதிவல பொலிஸ் நிலையத்தின் மோசடி ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாதிவல பிரதேசத்திலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் இயங்கி வந்த ஹெரோயின் வர்த்தகர்களை; கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது ஹெரோயினை பக்கட்டுக்களில் அடைத்து கொண்டிருந்த இரு ஆண்களும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் 40 ஆயிரம் மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளும் அவற்றை பொதியிடுவதற்காக தயார் நிலையிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கட்டுக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொரலெஸ்கமுவ பொலிஸின் மோசடி ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் முதித கல்பதாது தெரிவித்தார்.


இவ்வர்த்தகத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment