பிக்குகளின் போர்வையிலிலேயே பயங்கரவாதிகள் விகாரைக்குள் நுழைந்தனர்!
புத்தகயா மகா போதி தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 6 சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசார ணைகளை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
புத்தகயா மகா போதி விகாரை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மகாராஸ்டி மற்றும் ஆந்திர பிரதேச மக்கள் விசாரணைக்கு உதவி வருகின்றனர். கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் 6 சந்தேக நபர்கள் பிக்குகளின் போர்வையில் விகாரைக்குள் பிரவேசித்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அணிந்து வந்த 3 காவி உடைகள் அவர்கள் பயன்படுத்திய சிம்காட் மற்றும் பயணப்பையொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தகயாவில் பொருத்தப்பட்டிருந்த 22 பாதுகாப்பு கமராக்களில் 16 கமராக்களில் இச்சந்தேக நபர்களின் காட்சிகள் பதிவாகியுள்ளன. குறித்த கையடக்க தொலை பேசியிலிருந்து புதுடில்லிக்கும் மும்மைக்கும் தொடர்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
புத்தகயாவிலுள்ள புத்தர் சிலையை தகர்த்துவதற்காக அச்சிலையின் அருகில் பொருத்தப்பட்ட குண்டு அதிலுள்ள கடிகாரம் சரியாக இயங்காததன் காரணமாக வெடிக்கவில்லை. வெடித்த குண்டுகள் ஏற்படுத்திய அதிர்வுகளினால் இக்குண்டில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரம் செயலிழந்தது. விகாரைகளில் 13 குண்டுகள் பொருத்தப்பட்டிருந்ததுடன் வெடிக்காத ஏனைய குண்டுகளை இந்திய பாதுகாப்பு தரப்பினர் செயலிழக்க செய்தனர்.
தற்போது புத்தகயா பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் 50 நாடுகளை சேர்ந்த பிக்குகள் பங்குபற்றிய விசேட வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றன.
இந்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திற்கு விஜயம் செய்தனர். அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்திருந்தனர். தற்போது புத்தகயா வளவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புத்தகயா வளாகத்தில் 3 கட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புத்தகயா விகாரையின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான டி.பாலமுருகன் இந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இன்று பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதோடு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புனித பூமி பிரதேசத்திற்கு கையடக்க தொலைபேசிகள், கமரக்கள், பயணப்பைகள் என்பன வற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிக்குகளுக்கு விசேட அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளதுடன் விகாரையின் பின்பகுதியில் பாதுகாப்பு சுவர் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நீதிபதி பாலமுருகன் இந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment