Tuesday, July 16, 2013

அபிவிருத்திக்கு தடைபோடும் பிரதேச சபையின் நடவடிக்கையை எதிர்த்து கிளிநொச்சியில் கடையடைப்பு!

கிளிநொச்சி பொதுச் சந்தையில் வர்த்தக விதி முறைக்கு மாறாக இரு கடைத்தொகுதிகள் அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியைக் கண்டித்து நேற்றைய தினம் கடையடைப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள புடைவை மற்றும் அழகுசாதனப் பொருள் வர்த்தகர்களும் சிறு பொருள் வாணிபம் செய்யும் வர்த்தகர்களும் இந்தக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள புடைவை மற்றும் அழகுசாதனப் பொருள்விற்பனை நிலையங்களுக்கு இடையில் புதிதாக கடைத்தொகுதி அமைப்பதற்கு கரைச்சி பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளது. இது ஏற்கனவே வர்த்தக நடவடிக்கையில் முறைப்படி இயங்கிவரும் வர்த்தகர்களின் நலனைப் பாதிக்கும் நடவடிக்கையாகும். இதனைக் கண்டித்தே தாம் இந்தக் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டதாக கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மேலும், சந்தையின் கழிவை அகற்றுவதிலும் பிரதேச சபை அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது. இதுவும் கிளிநொச்சி பொதுச் சந்தையின் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதையும் தாம் கண்டிப்பதாகவும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு வருகை தந்த கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வை.குகராஜா, துணைத் தவிசாளர் வடிவேலு நகுலன், பிரதேச சபை உறுப்பினர் சேதுபதி, கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ந.கிருஷ்ணகுமார் ஆகியோர் வர்த்தகர்களுடன் கலந்துரையாடி கடையடைப்பு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினர்.

அத்துடன் ஏனைய வர்த்தகர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கடைத்தொகுதியின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், கழிவு அகற்றல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தகர்களிடம் இவர்கள் உறுதியளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள புடைவை மற்றும் அழகுசாதனப் பொருள் வர்த்தகர்கள் தங்களது கடையடைப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். இருப்பினும் கிளிநொச்சி பொதுச் சந்தையின் இன்னொரு தொகுதியில் முறையற்ற முறையில் வழங்கப்பட்ட கடை அமைப்பதற்கான அனுமதியை கண்டித்து சிறுபொருள் வாணிபம் செய்யும் வர்த்தகர்கள் தொடர்ச்சியாக கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையின் முழுமைப்படுத்தப்பட்ட நிர்மாணத்துக்கென 205 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டடத்தொகுதி அமைக்கப்பட்ட இடத்தில் கடைகள் அமைக்கப்பட்டதால், அந்த நிர்மாணப்பணிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான அடிக்கல்லினை கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment