தொலைபேசியில் பேசிய படி போனால்
நம் தெருக்களில் வாகன நெரிசல் அதிகரித்துக் கொண்டே போவதில் பயம்தான் உண்டாகிறது. வேகமும் விபத்துக்களும் ஒருபுறம் என்றால் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே காரையோ மோட்டார் சைக்கிளையோ ஓட்டிக்கொண்டு போகிறவர்களைப் பார்த்தால் பயப்படாமல் இருக்க முடியவில்லை.
அவர்கள் பேசிக் கொண்டிருப்பது கைத்தொலைபேசியில். காதில் தொலைபேசி இல்லாமல் தெருவில் யாரும் நடந்து போவதையோ வாகனங்களில் செல்வதையோ காணமுடியாமல் இருக்கிறது. 1960 ஆம் ஆண்டுகளில் இன்றைய செல்போனின் தாத்தாவைக் கண்டுபிடித்த மார்ட்டின் கூப்பரிடம் அன்றே தீர்க்கதரிசனமாக ஒரு கேள்வி கேட்டார்கள். இந்தக் கம்பியில்லாத கைத்தொலைபேசியில் அபாயம் ஏதாவது இருக்கிறதா?
ஆமாம் என்று ஒத்துக்கொண்டார் கூப்பர். கார் ஓட்டுபவர்களின் கவனம் சாலையில் இல்லாமல் போன் பேசுவதிலேயே இருப்பதால் விபத்து நடக்கலாம், இது நடக்கக் கூடியதுதான் என்று அப்போதே சொல்லியிருக்கிறார். இப்போதைய கணக்குப்படி செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டுபவர்களால் அமெரிக்காவில் மட்டும் வருடத்துக்கு 2600 பேர் உயிரிழக்கின்றனர்.
அந்தக்கால கம்பியில்லாத் தொழினுட்பத்தைக் கொண்டு முதல் நடமாடும் தொலைபேசியைக் கண்டுபிடித்துச்செய்த வருடம் 1946. நீண்ட தூரத்திற்கு லொறி ஓட்டிச் செல்பவர்கள் தலைமையகத்துடன் தொடர்பு கொள்வதற்காக இது முதலில் பயன்படுத்தப்பட்டது. அதாவது இதன் உருவாக்கமே வாகன ஓட்டுனர்களை மனதில் வைத்துச் செய்யப்பட்டதுதான்.
ஊரெங்கும் தொலைத்தொடர்புக் கோபுரங்களை எழுப்பும்போதே பயணங்களையும் வாகன ஓட்டுனர்களையுமே முக்கியமாக கவனத்தில் கொள்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் செல்போன் கம்பனிகளுக்கான முக்கால்வாசி லாபமும் வாகன ஓட்டுனர்களிடமிருந்தே கிடைப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது.
1960 ஆம் ஆண்டுகளில் எல்லாம் உலகில் கைத்தொலைபேசி என்பது ஒரு விலையுயர்ந்த விளையாட்டுப்பொருளாக இருந்தது அவ்வளவுதான். ஆனால் தொழினுட்பம் வளர்ந்து, மிகக்குறைந்த விலைகளில் தொலைபேசி உபகரணமும் பேசும் கட்டணமும் வந்தபிறகு வீதிவிபத்துக்கள் மிக அதிகரித்து விட்டன.
2007 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் செய்த ஆய்வில் 11 சதவீத வாகன ஓட்டுனர்கள் தொலைபேசிக் கொண்டுதான் ஓட்டுகிறார்கள் என்பது வெளிவந்தது. வீதிவிபத்துக்கள் ஐந்தரை லட்சம். 2600 மரணங்கள். கடந்த பத்து வருடத்தில் இதைப்பற்றி எவ்வளவோ ஆராய்ச்சிகள் வெளிவந்துவிட்டன.
அவற்றின் சாரம் என்னவென்றால், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டும்போது விபத்துக்கான வாய்ப்பு 400 சதவீதம் அதிகரிக்கிறது என்பதுதான். ஆனால் இந்த ஆபத்து பற்றி எத்தனை எச்சரிக்கைகள் வந்தபோதும் விபத்துகள் குறையவில்லை சாரதிகள் பேசிக்கொண்டே ஓட்டுவதையும் நிறுத்தவில்லை. ப்ளுடூத், இயர்போன் பயன்படுத்துவதால் கைகள் ஸ்டியரிங்கை கவனமாகப் பிடித்திருக்கிறது என்று சமாதானம் சொல்ல முடியாது. வாகன ஓட்டுதலில் கை அல்ல முக்கியம் மனம் அதில் குவிந்திருப்பதே முக்கியம்.
மேலும் ஒரு பல்கலைக்கழக ஆய்வின்படி, குடித்துவிட்டுக் கார் ஓட்டுவதை விட செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுவதில்தான் விபத்துக்களும் ஆபத்துக்களும் அதிகம் நிகழ்கின்றன என்று தெரிவிக்கிறது. இன்றைய தொழினுட்ப வேகம், பேசுவதற்கு மட்டுமல்லாது ஜி.பி.ஆர்.எஸ்., டிஜிட்டல் வரைபடம், வண்டி ஓட்ட வழி சொல்லித் தருதல், செய்திகள் தருதல், மின்னஞ்சல், இணையவசதி என்று எதையெதையோ புதிது புதிதாகத் தந்துகொண்டே இருக்கிறது.
மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளுக்குத் தொழினுட்பத்தை நம்ப முடியாது. தன்னைத் திருத்திக் கொள்வதற்கான தனது அறிவைத்தான் அவன் நம்ப வேண்டும்.
0 comments :
Post a Comment