Monday, July 15, 2013

பால் பால் 50% க்கு 50% .. சீ சீ வடக்கு முதலமைச்சர் 50% க்கு 50%

என்னடா பால் 50 க்கு 50 வீதம் என்றால் நீங்கள் நினைக்கக்கூடாது இந்தப்பால்காரன் கொண்டுவார பால் கலப்புப்பால் 50 வீதம் தண்ணி 50 வீதம் பால் என்று... என்ர பால் கலப்படமில்லாத சுத்தமான பால் கண்டயளே..

இனி விசியத்துக்கு வருவம் என்ன.. நேற்றைக்கு பாருங்க நான் என்ர பால் றூட்ட வவுனியாப் பக்கமா புடிச்சன்.. முதலாவது பெல்லை எங்க அடிச்ச நான் தெரியுமே? நாலு ஐச்சு வருடத்துக்கு முன்னால இடுப்பில பிஸ்தோலைக் கட்டிக்கொண்டு நின்று இப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்போட நிக்கிற ஐயா ஒருவர்ர வீட்டிலதான்..

ஐயா இப்ப நேரத்துக்கு காலத்துக்கு ஏற்ற மாதிரித்தான் உடுப்பும் உடுக்கிறது நீட்டுக்காச்சட்டையும் போடுவார் வேணுமென்றால் வேட்டியும் கட்டுவார்.. இப்படி ஐயாட காலம் போகுது.. மனிசனுக்கு வயதும் போட்டுது, தாடி மீசை மண்டையிலையும் கொஞ்சம் நரையும் தெரியுது.. ஆனா இண்டைக்கு மனிசன் டை எல்லாம் அடிச்சுக்கிடிச்சு டிப்டொப்பாத்தான் நின்டாரு.. எனக்கு விளங்கிட்டு.. ஆனால் கொஞ்சம் அமத்தி வாசித்தன்..

ஐயா எத்தின போத்தல் என்றன்.. ஊத்து ஊத்து ரெண்டு போத்தல் ஊத்து என்ற மனிசன் சட புட என்று காசை எடுத்து தந்திட்டு மாறுறத்துக்கு ஆயுத்தம்..

தெரியும்தானே எனக்கு விடிஞ்செழும்பி மாட்டிலை கறந்து கறந்து மனிசரை கண்டாலும் கறக்கத்தான் சொல்லும்..

ஐயா ஏதோ முக்கியமான கலியாண வீடு கீடு போல தெரியிது.. அந்த மாதிரி வெளிக்கிட்டு நிக்கிறயள் என்டு ஒரு போடு போட்டன்.. இல்லடா பால் நான் கொழும்புக்கு வெளிக்கிடுறன் என்டிச்சு மனிசன்.. சும்மா விடுவனா? அது சரி பெரியவீட்டு கலியாணமா இருக்கும் என்டன்.. இல்லடாப்பா நாளைக்கு காலையில  நம்மட அவசரக் கூட்டம் எண்டார்.. ஓம் ஓம் ஐயா இதுதானே இப்ப சனத்திர வாய் முழுக்க .. என்ன ஐயா நடக்கும் .. யாரஐயா சீப் மினிஸ்டர் கண்டிடேட் என்டன்..

அதுதான்டாப்பா பெரிய பிரச்சினையாகக் கிடக்கு நாளைய கூட்டத்திலை ஒரு தீர்மானம் ஒன்று கொண்டுவர இருக்காங்கள்.. 50 க்கு 50 என்றார். (உண்மையா விளங்கெல்லை) என்ன ஐயா அரசாங்கத்தோடை ஏதாவது ஒப்பந்தமே என்றன்.. விசரா அரசாங்கத்தோட ஒப்பந்தமே.. நாங்கள் இந்த அரசாங்கத்தோடை இனியும் ஒப்பந்தத்துக்கு போவமே.. எங்களை பொடியள் சுட்டுத்தள்ளேக்க எங்கட ஆயுதங்களை பறித்துப்போட்டு நடுத்தெருவிலை விட்டவயளோடை இனியும் ஒப்பந்தமே.. என்றார் மனிசன்

அப்ப என்ன ஐயா யாரோடை ஒப்பந்தம் என்றேன்.. இல்லடாப்பா சீப் மினிஸ்ரர் 50 க்கு 50 , ரெண்டரை வருஷம் மாவை அண்ணை மற்ற ரெண்டரை வருஷம் விக்கினேஷ்வரன் ஐயா இது தான் ஒப்பந்தம் இதிலை யார் முன்னுக்கு யார் பின்னுக்கு என்ற விசயம் எல்லாம் கதைக்க கிடக்கெல்லே.. என்று சொல்லிக்கொண்டு மனிசன் போட்டுது...

ஆனால் பாருங்க இவங்களெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில செல்லாக்காசிகள் பாருங்க.. நம்மட சம்பந்தன் நினைத்தால் அது நடந்தே தீரும். இது இந்த பால்காரன் கண்ட உண்மை. என்ன நடக்குமோ நடக்காதோ.. விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளரா வாறது மட்டும் நடக்கும் கண்டயளே..

இதுதான் பாருங்க கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்கிறது.. நம்மளுக்கும் 50 க்கு 50 வீதத்துக்கும் நெருங்கின நெருக்கம் ஒன்று இருக்கென்று உங்களுக்கு தெரியும்தானே.. ஒருகாலத்திலை இந்தாடாப்பா வைச்சுக்கொள்ளு என்று எதையோ சிங்களவன் கொடுக்க நம்மடையாக்கள் உதெல்லாம் சரிவராது நாங்கள் 30 வீதம் தான் இருக்கிறம் ஆனாலும் எங்களுக்கு முழு இலங்கையிலையும் 50 க்கு 50 வேணும் என்று அடம்பிடிச்சவையள்.. அதுக்குப்பொறகு படாத பாடெல்லாம் பட்டு இந்தியாக்காரன் வந்து 13 ஐ தந்தால் இந்தப்பதின்மூன்று எங்களுக்கு சரிவராது எங்களுக்கு வேற சாமான் வேணும் என்று கொண்டு நின்றவையள் இன்றைக்கு 13 தந்த சீப் மினிஸ்டருக்கு 50 க்கு 50 போடுகினம். கழுதை எந்த மட்டுக்கு தேய்ந்து போட்டுதென்று விளங்குதெல்லே..

இதுக்கு மேலை நான் கதைச்சனோ பால் விக்க முடியாமல் போயிடும் பொத்துறன் மேலையும் கீழையும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com