வியட்நாமில் போரில் அமெரிக்க இராணுவத்தின் திடீர் தாக்குதலால் தனது கையை பறிகொடுத்த வீரர் ஒருவருக்கு சுமார் 47 வருடங்கள் கழித்து, அவரது கை எலும்புகளை அமெரிக்க மருத்துவர் ஒருவர் திருப்பிகொடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
1966 ஆம் ஆண்டு அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையே போர் நடந்த போது அமெரிக்க இராணுவத்தின் திடீர் தாக்குதலால் வியட்நாம் வீரர் ஒருவரின் வலது கையில் குண்டு பாய்ந்தது. பின்னர் அப்பகுதிக்கு வந்த அமெரிக்க ராணுவத்தினர், அந்த வீரரை மீட்டு அமெரிக்க ராணுவ மருத்துவர் சாம் ஆக்சல்ராட்டிடம் கொண்டு விட்டனர். அவர் வியட்நாம் வீரரின் கையை துண்டித்து சிகிச்சை அளித்தார்.
சிகிச்சைக்கு பின் எஞ்சிய கை எலும்புகளை சாம் டெக்சாஸுக்கு கொண்டு சென்றார். இந்நிலையில், வியட்நாமைச் சேர்ந்த வீரர் ஹங் அமெரிக்க படையினரால் சுடப்பட்டு கை துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்தும், அவர் உயிருடன் இருப்பதாகவும் கடந்த ஆண்டு பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது.
இதனை படித்த மருத்துவர் சாம் சுமார் 47 வருடங்களாக தான் பாதுகாத்து வைத்திருக்கும் ஹங்கின் கை எலும்பை கொடுக்க விரும்பினார். அதன்படி மருத்துவர் சாம் ஆக்சல்ராட், குவாங் ஹங்கின் கை எலும்பை எடுத்துக்கொண்டு வியட்நாம் தலைநகர் ஹனாய் வந்து சேர்ந்தார்.
பிறகு இன்று ஹங்கின் ஊருக்கு சென்ற மருத்துவர், 45 வருடங்களுக்கு மேலாக பாதுகாத்து வைத்திருந்த அந்த கை எலும்பை ஹங்கிடம் ஒப்படைத்தார். இது குறித்து தெரிவித்த ஹங், சுமார் 47 வருடங்களுக்கு பின்னர் எனது உடலில் இருந்து ஒரு பாகம் எனக்கு திரும்ப கிடைத்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது, போரின் போது இளமையாக இருந்த நாங்கள் இப்போது எங்களின் பேரக்குழந்தைகளை நலம் விசாரித்து கொள்வது பழைய ஞாபகங்களை நினைவூட்டுகிறது எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment