30,000 கிலோ ரயிலை தள்ளி பெண்ணை உயிருடன் மீட்ட சக பயணிகள்
டோக்கியோவுக்கு அண்மையிலுள்ள சைதாமா நகர ரயில் நிலையத்தில் சுமார் 30,000 கிலோகிராம் நிறையுடைய ரயிலை பயணிகள் இணைந்து நகர்த்தி, அதன்கீழ் சிக்கியிருந்த பெண்ணொருவரை உயிருடன் மீட்ட சம்பவமொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
காலை சன நெரிசலில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ரயில் நிலையத்தை வந்தடைந்த ரயிலிலிருந்து 30 வயதுப்பெண்ணொருவர் தரிப்பு மேடைக்கும் ரயிலுக்குமிடையில் தவறி வீழ்ந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரயில் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பில் மக்களுக்கு அறிவித்து உதவும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கிருந்த சுமார் 40 பயணிகள் மற்றும் 12 ரயில் நிலைய அதிகாரிகள் இணைந்து 29030 கி.கி நிறையுடைய ரயிலை பக்கவாட்டில் தள்ளி அதன் கீழ் சிக்கியிருந்த பெண்ணை உயிருடன் மீட்டுள்ளனர்.
பெயர் வெளியிடப்படாத அப்பெண் தரிப்பு மேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான 8 அங்குலம் அளவிலான மிகச் சிறிய இடத்திலேயே சிக்கித் தவித்த பெண்மணியை சமயோசிதமாக செயற்பட்ட அதிகாரிகள் பயணிகளின் உதவியுடன் 8 நிமிடங்களில் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவத்தினால் ஜப்பான் ரயில் சேவை 8 நிமிடங்களால் தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment