இத்தாலியில் மூடப்பட்ட வனவிலங்கு காப்பகத்தில் வைக்கபட்டிருந்த 3 புலிகள், உணவு அளிக்க வந்த ஊழியரை கடித்து குதறின. இதனால் பலத்த காயமடைந்த அந்த ஊழியர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இத்தாலியில் உள்ள பினெரோலோ வனவிலங்கு காப்பகம் இயங்கி வந்தது. பொருளாதார நெருக்கடியால் இந்த காப்பகம் கடந்த 2009 ஆம் ஆண்டு மூடப்பட்டது. எனினும், காப்பகத்தில் இருந்த 9 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை அதே இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த 5 ஆண்டுகளில் இங்குள்ள புலிகள் குட்டிகளை ஈன்று பல்கிப் பெருகியுள்ளன.
இந்நிலையில், இந்த காப்பகத்தில் பல வருடங்களாக பணியாற்றிய 72 வயது நபர் புலியின் கூண்டை திறந்து அதற்கு உணவு அளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கூண்டிலிருந்த 3 புலிகள் அவர் மீது பாய்ந்து கடித்து குதறின.
சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் அந்த முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். முறையான பாதுகாப்பின்றி புலிகள் பராமரிக்கப்படுவது குறித்து ஏற்கனவே அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment