சுவிஸில் இடம்பெற்ற “புளொட்” அமைப்பின் 24வது வீரமக்கள் தினம்! - (படங்கள் இணைப்பு)
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (06.07) 24வது வீர மக்கள் தின நினைவு சுவிஸ் சூரிச் மாநிலத்தில் விமரிசையாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வானது ஈபிஆர்எல்எப் (நாபா) சுவிஸ் கிளைத் தோழர்களான செந்தா, பாஸ்கரன், புளொட் ஜேர்மன் கிளைத் தோழர் யூட் புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களான சித்தா, கந்தசாமி ஆகியோரின் நினைவுச்சுடர் விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
தமிழீழக் கல்விக் கழகத்தினரால் வருடாந்தம் நாடத்தப்பட்டு வந்த சகல கலை நிகழ்சிகள் , போட்டிப் பரீட்சைகளில் சளைக்காது கலந்து சிறப்பித்து வந்தவர்களான, அண்மையில் இலங்கைக்கு விடுமுறையில் சென்றிருந்த போது அங்கு கோர விபத்தொன்றுக்கு உள்ளாகி மரணத்தை தழுவிக் கொண்ட செல்வி ஜனனி ஜவீன், செல்வன் ஜனன் ஜவீன் ஆகியோருக்கு சிறப்பஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர்களுக்கான நினைவுச் சுடரினை புளொட் சுவிஸ் கிளைத் தோழர்களான ரஞ்சன் மற்றும் மனோ ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து பொது மக்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஆதரவாளர்களின் மலர் அஞ்சலி மற்றும் அக வணக்கத்துடன் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இலங்கையில் விபத்தில் மரணித்த செல்வி ஜனனி, செல்வன் ஜனன் ஆகியோருக்கான நினைவுரையை திருமதி. தவச்செல்வி கருணாகரன் வழங்கினார்.
முதலாவது அரங்க நிகழ்வாக புளொட் சுவிஸ் கிளைத் தோழர் ரஞ்சனால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இவர் தனது உரையில், “நாம் இங்கு எமது விடுதலைப் போராட்டத்தில் இழந்தவர்களை நினைவு கூர கூடியிருக்கின்ற போது, எம்மால் ஈடு செய்ய முடியாததும், இடைவெளியை நிரப்ப முடியாததுமான அண்மையில் இடம்பெற்ற ஒர் இழப்பின் துயரிலிருந்து மீளாதவர்களாகவே நிகழ்வினை நடாத்துகின்றோம். தமிழீழ கல்விக்கழகத்தின் சகல நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்து வந்த செல்வி ஜனனி ஜவீன் மற்றும் ஜனன் ஜவீன் ஆகியோரின் ஆத்ம சாந்திக்காக இங்கு மீண்டுமொருமுறை பிரார்த்திக்கின்றேன்” என்றார்.
கலை நிகழ்சிகளின் வரிசையில் வினோத உடை, வயலின் இசை, வாய்ப்பாட்டு, பின்னணி இசைக்கு ஆடுதல், மற்றும் தனி நடனம், குழு நடனம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. நாட்டிய நடன நிகழ்வுகளை நடன ஆசிரியை திருமதி குகராஜசர்மா ஜெயவாணி அவர்கள் நெறியாள்கை செய்து தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா) சுவிஸ் கிளைத் தோழர் பெர்னாண்டோ, புளொட் ஜேர்மன் கிளைத் தோழர் அப்பன், புளொட் சுவிஸ் கிளைத் தோழர் சுவிஸ்ரஞ்சன், திரு.இரட்ணகுமார் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட உரைகளில் தமிழீழ விடுதலைப் போராட்ட வராலாறுகள் நினைவு கூரப்பட்டு அங்கு இடம்பெற்ற தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டதுடன் சமகால அரசியல் நிலவரம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னேற்றப் பாதையில் செல்ல மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் விரிவாக பேசப்பட்டது. மேலும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அவர்களின் சுவிஸ் வீர மக்கள் தின உரையை புளொட் சுவிஸ் கிளைத் தோழர் மனோ அவர்களால் வாசிக்கப்பட்டது.
நிகழ்வுகளின் நிறைவாக தமிழீழ கல்விக் கழகத்தினால் கடந்த மாதம் நடைபெற்ற சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான பரீட்சைப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.
மேற்படி பரிசில்களை திரு.பற்றிக், திருமதி.புனிதமலர் இரட்ணகுமார், திருமதி.ஸ்ரீதேவி ரஞ்சன், திருமதி.குகராஜசர்மா ஜெயவாணி, ஈ.பி.ஆர்.எல்.எப். (நாபா) சுவிஸ் கிளைத் தோழர் செந்தா, தோழர் பெர்னாண்டோ, புளொட் ஜேர்மன் கிளைத் தோழர் யூட், புளொட் சுவிஸ் கிளைத் தோழர் மனோ ஆகியோரினால் வழங்கப்பட்டது. இப்பரிசளிப்பு நிகழ்வு ஒழுங்குக்கு இவர்களுடன் திருமதி.நந்தினி சிவானந்தசோதி, திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், திருமதி.சுகந்தி சசிதரன் ஆகியோரும் உதவி நல்கினர்.
மேற்படி மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்புடன் குறிப்பாக நடன ஆசிரியை திருமதி. குகராஜசர்மா ஜெயவாணி உட்பட கலை நிகழ்ச்சிகளை வழங்கியோருக்குமான பரிசில்களும், ஒலி, ஒளிப் பதிவில் உதவி புரிந்த செல்வன். மகேஸ்வரன் யாபேஸ், தோழர் வரதன் ஆகியோரும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக புளொட் சுவிஸ் கிளைத் தோழர் ரஞ்சன் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. சுவிஸ் கிளைத் தோழர் சிவா அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்.
நிகழ்விற்கு ஒத்தாசை வழங்கிய அனைவருக்கும் தோழமையுடனான நன்றிகள்..
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
சுவிஸ் கிளை.
–தகவல் புகைப்படங்கள் புளொட் சுவிஸ் கிளை.
0 comments :
Post a Comment