தேர்தல் நடைபெறும் மாகாணங்களில் 165 விசேட பொலிஸ் பிரிவுகள்!
தேர்தல்கள் நடைபெறவுள்ள வடக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களிலும் தேர்தல் காலத்தில் நடைபெறும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களை தவிர்க்கும் வகையிலேயே சுமார் 165 விசேட பொலிஸ் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.
இதற்கமைய மூன்று மாகாணங்களிலும் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பிரிவுகளிலுமே இந்த பொலிஸ் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேர்தலை முன்னிட்டு இடம்பெறும் வன்முறைகளை தவிர்த்தல் மற்றும் அது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த விசேட பொலிஸ் பிரிவுகளை நிறுவ தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளது.
இதன்படி வடகிழக்கிலுள்ள 40 பொலிஸ் நிலையங்களிலும் 07 பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளிலும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் காரியாலயங்கள் மூன்றிலும் மத்திய மாகாணத்திலுள்ள 58 பொலிஸ் நிலையங்களிலும், 05 பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளிலும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் அலுவலகங்கள் இரண்டிலும், வட மேல் மாகாணத்திலுள்ள 43 பொலிஸ் நிலையங்களிலும், பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகள் ஐந்திலும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள் இரண்டு என்ற அடிப்படையிலேயே 165 பொலிஸ் தேர்தல் கண்காணிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கண்காணிக்கும் பொலிஸ் தேர்தல் பிரதான செயலகம் பொலிஸ் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன் பொலிஸ் தலைமையகத்திலுள்ள பிரதான செயலகம் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின் நேரடி கண்காணிப்பில் செயற்பட்டு வருவதாக பொலிஸ் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
0 comments :
Post a Comment