சவூதி அரேபியாவில் வேலை செய்யும் பிற நாட்டவர்கள் தொடர்பிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வருவது நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற பல நாட்டவர்கள் நடவடிக்கை களை எடுத்து வருகிறார்கள். இதற்கிணங்க இலங்கை யர்களில் 16,000 க்கும் அதிகமானவர்கள் சவூதியிலிருந்து வெளியேற தற்காலிக அனுமதி பத்திரத்தை கோரியுள் ளார்கள் என சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தமது நாட்டில் பணி புரிபவர்கள் முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும். சவூதி அரேபிய குடிமக்களுக்கு வேலைகளில் முன்னுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் நிதாகத் எனும் புதிய சட்டத்தை அந்நாடு அறிமுகப் படுத்தியது.
இதன் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதை யடுத்து பல நாடுகள் சவூதி அரேபிய அரசிடம் முறையிட்டன. இந்தியா உட்பட பல நாடுகள் இராஜதந்திர ரீதியில் அழுத்தங்களையும் பிரயோகிக்க ஆரம்பித்தன. சர்வதேச வேண்டுகோள்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நேற்று முன்தினம் நடைமுறைக்கு வரவிருந்த சட்டத்தை நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக சவூதி மன்னர் அறிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களில் ஆயிரக் கணக்கானவர்கள் தம்மீதான நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு நாட்டைவிட்டு வெளியேற தற்காலிக அனுமதி பத்திரங்களை கோரியுள்ளதாகவும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
No comments:
Post a Comment