Sunday, July 7, 2013

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க விரும்புகின்றேன்! (கோட்டாபய விசேட செவ்வி)

""பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, டெய்லிமிரருக்கு வழங்கிய விசேட செவ்வியின் பல முக்கிய தகவல்களின் முழு விபரமும் உள்ளே இணைக்கப் பட்டுள்ளது"".

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க விரும்புகின்றேன். அதுதான் முன்னேற்றத்திற்கு வழி. அதிகார பரவலாக்கலுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அது பயனுள்ளதாகவும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதைவிடுத்து, இனவாரியாக பிரதேசங்களை பிரித்துப் பார்க்கக் கூடாது' என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்களின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவுடன் பேசக்கூடாது. இது நமது பிரச்சினை. இராஜதந்திர உறவுகளையும் நமது பிரச்சினையையும் கலக்கக்கூடாது. இந்தியாவும் இலங்கையும் இரு வேறு நாடுகள். நமது பிரச்சினை நம் நாட்டுக்கு மட்டுமே உரியது. நாமே அதற்கு தீர்வு காண வேண்டும். நாம் இருக்கப்போவது சிறிய காலமே. நமது எதிர்கால சந்ததிக்கு அமைதியான சுதந்திர நாட்டைத்தான் நாம் அமைத்துக் கொடுக்க வேண்டும். வேறு எந்த நாட்டின் வற்புறுத்தலுக்கும் அடிபணியக் கூடாது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெய்லிமிரருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்களின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி செவ்வியின் முழு விபரம்

கேள்வி: ஓர் அரசியல் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வருகிறீர்கள். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தனா, ஆர்.பிரேமதாசா மற்றும் சந்திரிகா பண்டாநாயக்க இவர்களை பற்றி உங்கள் கருத்து

பதில்:ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் பிரேமதாசா ஆகியோரது காலத்தில் நான் இராணுவத்தில் இருந்தேன். அப்பொழுது என்னுடைய முழு கவனமும் தேசிய பாதுகாப்பு தொடர்பாகவே இருந்தது. என்னுடைய பார்வையில், அன்றிருந்த நிலைமையின் உண்மை நிலையை ஜே.ஆர்.ஜயவர்தனா, பிரேமதாச இருவருமே தெரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்களுடைய காலத்தில் இதுபோன்ற நிலமையை அனுபவித்தவர்கள் அல்லர். ஆனால் தலைமைத்துவம் என்பது எந்த சிக்கலையும் எதிர்கொள்வது என்பதேயாகும். தேசிய பாதுகாப்பை நன்குணர்ந்து, சரியான முடிவுகளை அவர்கள் எடுக்கவில்லை.

நான் பொருளாதாரம் பற்றி பேசவில்லை. ஆனால் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி ஜயவர்த்தன சரியான முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை. இந்தியாதான் போராளி குழுக்களை வளர்த்து விட்டது. பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியது. இந்திய புலனாய்வு அமைப்பான 'றோ' - புலிகளின் தலைவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்கியது. இதற்குக் காரணம் ஜானாதிபதி ஜயவர்தனாவுடன் இந்தியா நட்புறவு இல்லாதது தான். இந்திரா காந்தியுடன் அவருக்கு நெருக்கம் கிடையாது. அதன் விளைவுதான் போராளிகளின் வளர்ச்சி, விடுதலைப் புலிகள் மிகப்பெரிய இயக்கமாக உருவாக அவர்தான் காரணம். அவருடைய ஆலோசகர்கள் யாருக்குமே பின்விளைவுகளைப் பற்றிய அறிவு, யோசனை இல்லாமல் போய்விட்டது. இவரது தறுக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

உதாரணமாக குட்டிமணி, பிரபாகரன் ஆகியோரை இந்தியா கைது செய்து, இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தியவுடன், இலங்கை அரசு கீழ்மட்ட அதிகாரிகள் இருவரையே இந்தியாவுக்கு அனுப்பியது. இதனால் இந்தியா எந்த அக்கறையும் காட்டவில்லை. இங்கிருந்து சென்ற அதிகாரிகளை அவர்கள் உரியமுறையில் நடத்தவில்லை. கைதானவர்களை பார்ப்பதற்கும் அனுமதிக்கவில்லை. அவர்களின் புகைப்படத்தினை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். அதன்பின்னர் குட்டிமணி, பிரபாகரன் இருவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனாலும் விடுதலைப் புலிகள் அந்த நேரத்தில் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. 1983ஆம் ஆண்டு கலவரத்திற்கு பின்னரே அவர்கள் பலம் பொருந்திய இயக்கமாக வளர்ந்தார்கள். புலிகளின் தலைவர்களை கைதுசெய்த இந்தியாவுடன் உயர்மட்ட அதிகாரிகள் அல்லது அமைச்சர்களை தொடர்புகொள்ள வைத்திருந்தால் இன்று இந்த யுத்தத்திற்கு வரலாறே இல்லாமல் அப்போதே அடியோடு அழிந்திருக்கும்.

இருந்தபோதிலும் இந்த உண்மையையும் ஏற்றுத்தான் ஆக வேண்ணும். 80 ஆம் ஆண்டு பகுதியில் வடக்கிலுள்ள தீவிரவாதத்தினை இல்லாதொழிப்பதற்காக ஜெனரல் திஸ்ஸ வீரதுங்கவை கட்டளை அதிகாரியாக ஜனாதிபதி ஜயவர்த்தன நியமித்தார். இது வரவேற்கத்தக்கது. ஆனாலும், அடுத்தபடியான நகர்வுகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். ஜெனரல் திஸ்ஸ வீரதுங்கவின் பல ஆலோசனைகளை அரசு நிராகரித்தது. இது பெரிய வரலாற்று துரோகம்.

1983ஆம் ஆண்டு கலவரத்திற்கு ஜயவர்தனாவே காரணமானவராவர். அவர் மூன்று நாட்கள் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தார். அதன் பின்னர் செய்த பெரிய தவறு கொழும்பிலிருந்த தமிழர்களை கப்பலேற்றி யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்ததுதான். இயக்கத்திற்கு ஆட்கள் இல்லாமல் தவித்து கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது. தங்களை நன்றாக பலப்படுத்திக்கொண்டார்கள். யாழ்ப்பாண நூலக எரிப்பு, அபிவிருத்தி சபை தேர்தல் தில்லுமுல்லு இவை அவர்களுக்கு இன்னும் சாதகமாக போயிற்று. அவர்கள் விட்ட தவறினால் ஏற்பட்ட பின்விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாக அமைந்தன.

அன்றைய தலைவர்களின் தூரநோக்கு இன்மையால்தான் இந்திய பாதுகாப்பு படை இலங்கைக்குள் கால் வைக்கவேண்டி ஏற்பட்டது. அதன்பின்னர் நடந்தவை மிகவும் கசப்பான அனுபவங்கள்.

கேள்வி: இந்திய அமைதி காக்கும் படையைப் பற்றி...?

பதில்: இலங்கை அரசின் தவறினாலேயே இந்திய அமைதி காக்கும் படை இங்கு வந்தது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் நண்பர்களாகத் தான் அவர்கள் இருந்தார்கள். ஆனால், பிரபாகரன், இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி ஆயுதங்களை கையளிக்க விரும்பவில்லை. அத்துடன், 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஏற்பட்ட மாகாண சபையை ஏற்கவில்லை.

இதனால் இந்திய அமைதிப்படைக்கு எதிராக பிரபாகரனுக்கு யுத்தம் புரிய நேரிட்டது. இழப்புகளை முதலில் சந்தித்தாலும், மிகுந்த அனுபவம், ஆற்றலுமிக்க இந்திய படை பிரபாகரனை இலகுவாக எதிர்கொண்டார்கள். இந்த நேரத்தில் தான் ஜனாதிபதி பிரேமதாச விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆயுதங்களும் பணமும் கொடுத்தார்.

இந்தியப் படைகள் வெளியேறாமல் அவர்களை வைத்திருந்து புலிகளை எதிர்த்திருந்தால் இன்றைக்கு நிலைமையே வேறு. இதுதான் பிரேமதாச செய்த பெரிய தவறாகும். இதைத்தொடந்து புலிகள் எமது இராணுவத்திற்கு எதிராக இரண்டாவது ஈழபோரை ஆரம்பித்தனர். இந்த இரு ஜனாதிபதிகளும் விட்ட தவறுகளே 30 ஆண்டு யுத்தத்திற்கு வழிகோலியது.

நான் பாதுகாப்பு செயலாளராக பதவி ஏற்ற காலத்தில் இந்த நாட்டில் இரண்டு அரசுகள் இருந்தன. ஒன்று மக்கள் தெரிவு செய்தது. மற்றது பிரபாரனுடையது. வடக்கிலும் கிழக்கிலும் அவரது ஆட்சி, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள், அஞ்சலகம் என்று ஒரு தேசத்திற்கான கட்டுக்கோப்பை உண்டாக்கி நடத்தினார்கள்.

எமது இராணுவமோ, பொலிஸோ அங்கு போகமுடியாது. அங்கிருந்த எமது அரச ஊழியர்கள் எங்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு அவர்கள் சொன்னதை கேட்டுத்தான் நடந்தார்கள். தேசிய பாதுகாப்பு கோணத்தில் பார்க்கும் போது இந்த இரு தலைவர்களுமே பெரிய தவறை இழைத்ததினால் நாடு பிளவுப்பட்டிருக்கிறது.

ஜெயவர்தனா ஆட்சியை பாரமெடுக்கும் போது நாடு மிகவும் அமைதியான நாடாக இருந்தது. படிப்படியாக ஆட்சித் தலைவர்கள் விட்ட பாரதூரமான தவறுகளினால் இந்த நிலை உண்டானது.

கேள்வி: உங்கள் சகோதரரும் அவருக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்களும் புலிகள் தோன்ற காரணமாக இருந்த தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் பற்றி நன்றாக அறிந்தவர்கள். அதை தீர்த்து வைப்பது அவசியம் என்று நீங்கள் கருதவில்லையா?

பதில்: இது அரசியல் பிரச்சினையே அல்ல. முன்னேற்றமடைந்த நாடுகள் பலவற்றிலும் இருக்கும் சிறுபான்மையினருக்கு சில கஷ்டங்கள் உண்டு. அதை தெரிந்து கொண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வழி வகைகளையே செய்யவேண்டும். இதை அரசியல் பிரச்சினையாக பார்க்கக்கூடாது. ஏன், பெரும்பான்மையினருக்கு கூட இப்படிப்பட்ட கஷ்டங்கள் உண்டு. நாம் சுதந்திரம் பெற்றபோது, பெரும்பான்மை மக்களும் சிக்கலான கஷ்டங்களை அனுபவித்தார்கள். அரசு அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்தது.

வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றிலும் இப்படிப்பட்ட சிறுபான்மை பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தகுந்த முறையில் தீர்த்து வைக்கவேண்டும். இதற்கு சிங்கப்பூர் நல்ல உதாரணமாகும். அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலனுக்காக இந்த பிரச்சினைகளில் தலையிட்டு குழப்புகின்றனர்.

தமிழர்களுக்கு என்று ஒரு பகுதியும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு பகுதியும் சில அதிகாரகங்களுடன் தருவது என்பது பிரச்சினைக்கு தீர்வு அல்ல. வடக்கில் தமிழர்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும் என்று சொல்வது தவறு. இன்று கொழும்பில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுக்கு வடக்கில் நிலம் வாங்க முடியாது. ஆனால் தமிழர்களுக்கு இங்கு நிலம் வாங்கலாம். எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம் என்ற நிலை உள்ளது.

இலங்கையர்கள் அனைவரும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வாழும் உரிமை இருக்க வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதை செய்வதற்கு நல்ல சூழ்நிலை இப்போது உள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த வாய்ப்புக்களை நாம் தவறவிட்டு விட்டோம். மற்ற நாடுகள் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கும்போது யுத்தம் செய்து கொண்டிருந்ததால் நமது முன்னேற்றம் மோசமான முறையில் பாழடைந்தது. ஒருநாளில் 22 விமானங்களை இழப்பதென்றால் எப்படிப்பட்ட நஷ்டம்? வெளிநாட்டு பயணிகள் வருகை, மீன்பிடிதொழில் என்று அனைத்திலும் நாம் நஷ்டமடைந்தோம். முதலீட்டாளர்கள் இங்கு வரவே அஞ்சினார்கள்.

இப்போது நாட்டில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவுகின்றது. இழந்தவற்றை கட்டியெழுப்ப நல்ல தருணம். தமிழர்களையோ முஸ்லிம்களையோ நாம் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கவில்லை. இப்போது யார் கொழும்பில் பெரிய வர்த்தகர்களாக இருக்கிறார்கள். தமிழர்களும் முஸ்லிம்களும்தான் மற்றவர்களுடன் சேர்ந்து முன்னிலையில் இருக்கின்றார்கள்.

ஒரு முஸ்லிமையோ, தமிழரையோ பல்கலைக்கழகம் செல்லாமல் தடுத்திருக்கிறோமா? வைத்தியத்துறையிலோ நீதித்துறையிலோ பொறியியல் கல்வித்துறைகளிலோ எவ்வளவு சிறுபான்மை சமூகத்தினர் முன்னிலை வகிக்கின்றார்கள். திறமை விருப்பம் இருந்தால் எவருக்கும் முன்னேற வாய்ப்பு உண்டு.

சிறுபான்மையினர் எல்லா இடங்களிலும் தடையின்றி பரந்து வாழக்கின்றனர். அப்படியிருக்கும்போது, தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு என்று தனித்தனி பகுதிகள் கேட்பது எந்த வகையில் நியாயம்?

கேள்வி:- ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையினராக தமிழர்கள் இருக்கும்போது, தங்களை தாங்களே சுயாதீனமாக ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்து தவறா?

பதில்: அங்குதான் பிரச்சினையே இருக்கின்றது. இதற்கு காரணம் புலிகள் சிங்கள சமூகத்தினரை அங்கு இருக்க அனுமதிக்கவில்லை. அடித்து துரத்தினார்கள். 30 வருடங்களாக சிங்களவர்கள் அங்கு இருக்கவில்லை. அதனால் அவர்களது எண்ணிக்கையும் வளராமல் தடை செய்யப்பட்டது.

சகஜ நிலைமை இருந்திருந்தால் கூடிய எண்ணிக்கையான சிங்களவர்கள் அங்கு இருந்திருப்பார்கள். நான் யாழப்பாணத்தில் இரண்டாவது லெப்டினனாக கடமை புரிந்தபோது அதிக அளவில் அங்கு சிங்களவர்கள் வாழ்ந்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் சிங்கள மக்கள் பலர் வாழ்ந்தனர்.

இப்போது எங்கே அவர்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? புலிகள் அவர்களை விரட்டி விட்டார்கள். அவர்களது எண்ணிக்கை குறைந்தது மட்டுமன்றி மீண்டும் வரவேயில்லை. இது எந்தளவு நியாயம்? உதாரணமாக திருகோணமலையை எடுத்துக்கொள்ளுங்கள். 80ஆம் ஆண்டுக்கு முன்னர் திருகோணமலையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அங்கு சிங்கள மக்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இந்த நிலைமை யாரால் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் தந்திரத்தினால்தான் இந்நிலைமை ஏற்பட்டது. யுத்த சூழ்நிலை மட்டும் ஏற்படவில்லை என்றால் 78 வீதமாக இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினர் வடக்கிலும் கிழக்கிலும் அதே விகிதாசாரத்திலேயே இருந்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு வட, கிழக்கு நிலபரப்பில் தமிழர்கள் மட்டும் 98 வீதமாக இருப்பது என்ன நியாயம்?

கேள்வி: அப்படியானால் அதிகார பரவலாக்கலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பதில்:- இல்லை. நான் மேலே கூறிய காரணங்களே போதும். நிர்வாக நோக்கங்களுக்காக அதிகார பரவலாக்களை முன்னெடுக்கலாமே தவிர தேசிய பிரச்சினைக்கு அது தீர்வாகும் என எவராவது நம்பினால் அதனை நான் எதிர்க்கிறேன். உதாரணமாக பொலிஸ் அதிகாரத்தினை எடுத்துக்கொள்ளுங்கள். பொலிஸ் அதிகாரம் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றால் கிழக்கில் அது சாத்தியப்பட்டிருக்கிறதா?

கிழக்கில் தமிழர்கள் எப்போதும் முதலமைச்சராகியிருக்க முடியாது. ஜனாதிபதி விரும்பியதால் மட்டுமே கிழக்கில் பிள்ளையான் முதலமைச்சராக வரமுடிந்தது. அதனை முஸ்லிம்கள் அமைச்சர்கள் பலர் எதிர்த்தார்கள். இந்நிலையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரின் கீழ் தமிழர்களுக்கு இதே பிரச்சினை இருக்காது என்று எப்படி சொல்ல முடியும்?

இந்த வாதம் எதற்கு என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதிகாரப் பகிர்வின் மூலம் சிறுபான்மையினருக்கு தீர்வு கிடைக்கும் என்றால், மத்திய மாகாணத்தில் சிங்க முதலமைச்சரின் கீழுள்ள தமிழர்களுக்கு எப்படி தீர்வு கிடைக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதேபோல்தான் ஊவா, சப்ரகமுவா மாகணங்களிலுள்ள தமிழர்களுக்கும் தீர்வுகள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழர்களின் எண்ணிக்கை கிளிநொச்சியிலுள்ள தமிழர்களின் எண்ணிக்கையிலும் உயர்வாகும். அவர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? இதிலிருந்து நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும், பொலிஸ், காணி அதிகாரங்கள் கிடைத்தால்தான் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது உண்மையல்ல என்பதை.

கேள்வி: இந்தியாவுடன் இருந்த முரண்பாடுதான் விடுதலைப் புலிகள் தோன்ற காரணமாக இருந்தது என்று கூறினீர்கள். அப்படியானால் இந்தியாவினால் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்த சட்டத்தை ஒழித்தால் இந்தியாவுடன் பிரச்சினை உண்டாகாதா?

பதில்: அதனால்தான் இந்தியாவுடன் பேசக்கூடாது என்று சொன்னேன். இது நமது பிரச்சினை. இராஜதந்திர உறவுகள் வேறு. இரண்டையும் கலக்கக்கூடாது. இந்தியாவும் இலங்கையும் இரு வேறு நாடுகள். நமது பிரச்சினை நம் நாட்டுக்கு மட்டுமே உரியது. நாமே தீர்வு காண வேண்டும். இராஜதந்திர உறவுகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற பல நாடுகளுடனும் நமக்கு இருக்கிறது. அதனை சரியாக நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்தியாவும் இலங்கையும் இருவேறு நாடுகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இப்பிரச்சினை இந்தியாவின் கீழுள்ள நாடாகவோ அல்லது அதன் பிரதேசமாகவோ இருந்தால் நாம் செய்வது தவறாக இருக்கலாம். ஆனால் இருவேறு நாடுகளுக்கிடையில் எவரும் தலையிட முடியாது. எமது பிரச்சினைக்கு தீர்வை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். புதிய இந்திய உயர்ஸ்தானிகருடனும் இன்னும் பல உயரதிகாரிகளுடனும் இவ்விடயம் தொடர்பாக நான் கலந்துரையாடினேன். அவர்கள் எவரும் 13ஆம் திருத்தச் சட்டத்தினால் தமக்குள் பிரச்சினை வரும் என்று கூறவில்லை. அவர்கள் இவ்விடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள்.

நாம் இருக்கப்போவது சிறிய காலமே. நமது எதிர்கால சந்ததிக்கு அமைதியான சுதந்திர நாட்டைத்தான் நாம் அமைத்துக் கொடுக்க வேண்டும். வேறு எந்த நாட்டின் வற்புறுத்தலுக்கும் அடிபணியக் கூடாது. முன்னர் செய்த தவறுகளால்தான் ஏனைய நாடுகள் எமது பிரச்சினைக்குள் தலை போடுகிறார்கள். அதே தவறினை நாமும் செய்யக்கூடாது.

கேள்வி: 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?

பதில்: ஆம். அதுதான் முன்னேற்றத்திற்கு வழி. அதிகார பரவாக்கலுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அது பயனுள்ளதாகவும் நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இனவாரியாக பிரதேசங்களை பிரித்து பார்க்கக் கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடு.

கேள்வி: 2009இற்கு பின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் இன ரீதியான முறுகல்கள் ஏன் இப்போது தோன்றுகின்றன?

பதில்: இதை நான் சிறுபான்மையினரின் செயற்பாடாகவே பார்க்கிறேன். பெரும்பான்மை சமூகம் 78 சதவீதமாக இருக்கும்போது 8 அல்லது 10 சதவீதமான சிறுபான்மையினர் சிறுசிறு பிரச்சினைகளை தூக்கிப்பிடிப்பதால் பெரும்பான்மையினரிடையே சந்தேகம் ஏற்பட காரணமாகிறது. அதனால் பெரும்பான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் சமாதானம் குலைய காரணமாகின்றன. இங்குதான் இனப்பிரச்சினை தலை தூக்குகின்றது. இந்த பிரச்சினைகளை தமிழ், முஸ்லிம், சிங்கள பிரச்சினைகளாக பார்க்கக் கூடாது. பொதுவான பிரச்சினையாக பார்க்க வேண்டும். அப்படி பார்ப்பார்களேயானால் சுமூகமாக பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்.

அண்மையில் ஒரு பத்திரிகையில் பார்த்தேன், கல்முனையிலுள்ள தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளில் சிலவற்றை பொதுபல சேனா தீர்த்து வைக்க வேண்டுமென கேட்டிருக்கிறார்கள். அந்த தமிழ் மக்கள் - முஸ்லிம் மக்களுடன் வாழ்பவர்கள். இதனை சற்று உற்றுப் பாருங்கள். இந்தப் பிரச்சினைக்கு முடிவு எப்படி இருக்கும்? இந்த யதார்த்த நிலையினை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டும்.

கேள்வி: அப்படியானால் இது போன்ற தீவிரவாதப் போக்குடைய அமைப்புக்களையோ அல்லது குழுக்களையோ நீங்கள் எதிர்க்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக. அதுதான் புத்தரின் நடுநிலைமை போதனை. எத்தகைய தீவிரவாதமும் எனக்கு உடன்பாடானதல்ல.

கேள்வி: ஆனால், நீங்கள்தான் அப்படியான குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதாக சொல்லப்படுகின்றதே?

பதில்: இப்படித்தான் அரசியல்வாதிகள் இலாபம் காண முயல்கின்றார்கள். சேறு பூசுவது என்பது இதுதான். இதே குழுக்களோடு நான் சம்பந்தப்பட்டது உண்மை. அதனால்தான் பல பிரச்சினைகளை என்னால் தவிர்க்க முடிந்தது. பொதுபல சேனாவை ஜம்மியத்துல் உலமாவுடன் பேச வைத்தேன். அதனால் நிறைய விடயங்கள் பேசி தீர்த்துக்கொள்ளப்பட்டன. மோதலும் தவிர்க்கப்பட்டது. இல்லாவிடில் பெரிய குழப்பங்களுக்கு இது வழிவகுத்திருக்கும்.

நாட்டினுடைய பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. அதனால் எந்த குழுக்களை வேண்டுமானாலும் அழைத்து பேச முடியும். பல புத்த பிக்குமார்களை நான் நன்கு அறிவேன். ஆனால் அரசியல்வாதிகள் இதனாலேயே நான் இந்த முறுகல் நிலைக்கு காரணம் என்று பொய்யான பிரசாரம் செய்கிறார்கள்.

பொதுபல சேனாவின் மத குருமார்களை எனக்கு மட்டுமல்ல ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் உட்பட பல அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும். குழுக்களோடு சம்பந்தப்பட்டவர்களை தெரிந்து வைத்திருப்பதால் அவர்களை நாங்கள்தான் இயக்குகிறோம் என்று அர்த்தப்படுத்த முடியாது. பிரச்சினை என்று வந்தால் அது எந்த அமைப்பானாலும் அழைத்து பேசி தீர்க்க முயற்சிப்பேன். இவர்கள் தீவிரவாத அமைப்புக்களல்ல. ஆகையினால் அவர்களுக்குள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்க முயற்சிப்பது எனது கடமை.

இதனை அரசியல் லாபத்திற்காக பார்க்காமல் யதார்த்த ரீதியில் பார்க்க வேண்டும். நான் ஒரு சிங்கள பௌத்தன். எனக்கு எந்த விகாரைக்கும் செல்ல முடியும், எந்த பௌத்த மத குருவினையும் சந்திக்க முடியும். இதனை அரசியலாக்க வேண்டாம்.

கேள்வி: ஆனால், இந்த குழுக்களினால் கலவர சம்பவங்கள் நடைபெற்றபோது சட்ட ஒழுங்குகள் பாதுகாக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகின்றதே?

பதில்: இல்லை. அது தவறு. என்னால் நிறைய விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. நான் பொதுபல சேனாவிற்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் எல்லா சம்பவங்களிலும் அவர்கள் தொடர்புபட்டிருக்கவில்லை. அவர்களுடைய பெயரை சிலர் பாவித்துக்கொண்டார்கள். ஏராளமான பிரச்சினைகளில் பொலிஸ் தலையிட்டு தீர்த்து வைத்திருக்கிறது. சில சம்பவங்களில் முழு இரவையும் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நான் செலவிட்டிருக்கிறேன். ஆகையினால் பிரச்சினைகளின் முழு வடிவத்தினையும் அலசி ஆராய்ந்துவிட்டு இறுதித் தீர்மானத்திற்கு வருவதே சிறந்தது.

கேள்வி: எந்தக் குழுவினாலும் வன்முறை தோன்றாதிருக்கும் என உங்களால் உறுதி கூற முடியுமா?

பதில்: நிச்சயமாக முடியும். பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையுமே எமது முன்னுரிமை. அதனை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும். ஜனாதிபதியும் இதனை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

இது ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சிந்திக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அனைவரும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும் என நினைக்க முடியாது. அதனை எவராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. ஆகையினால் எந்த பிரச்சினையானாலும் பேசித் தீர்ப்பதே சிறந்தது.

கேள்வி: பிரதி பொலிஸ் மா அதிபர் கைதுக்குப் பின் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் உங்கள் பார்வையின் கீழேயே நடந்தன என்று குற்றம் சாட்டப்படுகின்றதே. மீண்டும் அது மாதிரி நடக்காதிருக்க நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

பதில்: இத்தகைய சம்பவங்கள் இலங்கையில் மட்டுமே நடைபெறுவதில்லை. உலகத்தின் எல்லா இடங்களிலும் இப்படியான சம்பவங்கள் நிகழ்கின்றன. மேலும், முன்னரே இப்படிப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவற்றிற்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதைத்தான் நீங்கள் உணர வேண்டும். நான் குற்றச்செயல்களுக்கு துணை போவதில்லை. ஒழுக்கமும் கட்டுப்பாடும் உடைய பொலிஸ் சேவையே முக்கியமானது.

கேள்வி: இந்த சம்பவங்களை வைத்து, சட்டவிரோத தண்டனை சம்பவங்களின் பின் புலமாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனரே?

பதில்: இது புதிதல்ல. அரசியல்வாதிகளுக்கு மற்றவர்கள் மீது சேறு பூசுவதே வழக்கமாகிவிட்டது. ஏன், நான் கொழும்பில் நிலம் வாங்கி போட்டிருக்கின்றேன் என்றும் குற்றம் சாட்டினார்களே. யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்த போது, காணாமல் போனவர்கள் வெள்ளைவானில் கடத்தப்பட்டார்கள் என்று பலவித பொய்களையும் சொன்னார்கள். இப்போது அது முடியாது. அதனால் இதை கையில் எடுத்திருக்கின்றார்கள்.

என்னுடைய நோக்கமும், செயல்பாடும் குற்றச்செயல்களைத் தடுப்பதேயாகும். அதனால் கடுமையான வழிமுறைகளை நான் கையாண்டிருக்கலாம். நாட்டினதும், மக்களினதும் நன்மைக்காகவே அப்படி செய்வேன். தீவிரமான குற்றவாளிகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த சம்பவங்கள் எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்த ஏழு ஆண்டு காலத்திற்கு முன்பிருந்தே நடைபெற்று வருகின்றன. ரணில் விக்ரமசிங்க வெளியிடும் அறிக்கைகளையிட்டு நான் ஆச்சரியப்படுகின்றேன். அவருடைய கடந்த காலம் எப்படிப்பட்டது? பட்டலந்த எப்படி நிகழ்ந்தது? மக்களுக்கு உண்மை தெரியும்.

கேள்வி: உங்கள் மீது மாத்தளை மனித புதைகுழி சம்பந்தமாகவும் குற்றம் சொல்கிறார்களே?

பதில்: அது பற்றி ஒளிவு மறைவில்லாத பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணை அவசியம். இதுபற்றி, விசாரணையொன்று நடைபெற்றுக்கொண்டிருப்பதால். நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: உங்களுடைய கைதொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக நீங்கள் கூறிய குற்றச்சாட்டைபற்றி?

பதில்: அப்படிப்பட்ட தொழில்நுட்பம் உடையவர்களால் மட்டும் அதை செய்யமுடியும். நான் தொலைபேசியை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் கேட்கும் ஒலியில் மாறுபாடும் வித்தியாசங்களை கவனித்திருக்கின்றேன். சில வேளைகளில் அலைவரிசையில் தடங்கல் ஏற்படும். இந்த தொழில்நுட்பம் சில தூதராலயங்களுக்கும், உயர்ஸ்தானீகராலயங்களுக்கும் தெரியும் என்று நம்புகின்றேன்.

கேள்வி: இறுதியாக, உங்களுடைய உளவுப்பிரிவு எதிர்க்கட்சிகளினதும், ஊடகவியலாளர்களினதும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றதே?

பதில்: இலங்கையில் அப்படி நடக்கவில்லை என்று என்னால் திட்டவட்டமாக கூறமுடியும். மக்களின் சமூக உரிமைகளை மீறும் எந்த செயல்களிலும் நாங்கள் நாங்கள் ஈடுபடுவதில்லை என்றார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com