Thursday, July 4, 2013

இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட பிரபாகரனை காப்பாற்றவே 13ஆவது திருத்தம் உருவானது! விளக்குகிறார் விஜிதமுனி

ஜெனரல் கொப்பேகடுவ தலைமையில் இடம் பெற்ற வடமராட்சி இராணுவ நடவடிக்கையின் போது, எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, பிரபாகரனை பாதுகாக்குமாறு அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடும் அழுத்தம் கொடுத்தார் எனவும், இந்த அழுத்தம் காரணமாகவே பிரபாகரனை பாதுகாப்பதற்காக 13ஆவது திருத்தம் ராஜீவினால் ஏற்படுத்தப்பட்டது என ரோஹண விஜிதமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரோஹன விஜித முனி இதனைத் தெரிவித்தார்.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சிங்கள மக்களின் வாக்குகளி னாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிக்கின்றார் எனவும், எனவே அதற்கு எதிராக செயற்பட முடியாதென்றும், 13 மூலம் இந்தியா எமது நாட்டை ஆக்கிரமித்தது இது தான் உண்மை. எனவே வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்று மாகாணசபை முறைமையை எதிர்த்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், இன்று தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். உறுப்பினர்களாக அமைச்சர்களாக பதவி வகிக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் இன்று சிங்கள முதலமைச்சர் இல்லை முஸ்லிம் காங்கிரஸுடன் ஒப்பந்தம் செய்து முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக இருக்கின்றார் எனவும், இதன் மூலம் சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளினாலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகிப்பதோடு அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை யையும் கிடைத்தது எனவும், எனவே இந்தியாவின் பேச்சைக் கேட்க அவசியமும் இல்லை எனவும், வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய தேவையும் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜே. ஆர் ஜயவர்த்தனவுக்கிடையே கைச்சாத்திடப்பட்ட பின்னர் ராஜீவுக்காக இடம்பெற்ற கடற்படை அணிவகுப்பு மரியாதையின்போது அவர் மீது தாக்குதல் நடத்தியவரே ரோஹண விஜிதமுனி என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment