Monday, June 3, 2013

பயங்கரவாதத்தின்மீதான போரும் அமெரிக்க ஜனநாயகத்தின் தலைவிதியும். Joseph Kishore

கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி பாரக் ஒபாமா நிகழ்த்திய உரை, ஒபாமா நிர்வாகத்திற்குள் உள்ள நெருக்கடியையும், அரச உயரடுக்குகளில் கடுமையான மோதல்கள் பெருகுவதையும் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இன்னும் ஆழ்ந்த முறையில் வர்க்க ஆட்சியின் வரலாற்று நெருக்கடியையும் புலப்படுத்தியது.

ஒபாமாவின் உரை அசாதாரண அரசியல் முக்கியத்துவம் கொண்டது. அமெரிக்க ஜனநாயகம், இரண்டாம் உலகப் போருக்குப்பின் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் “ஒரு இராணுவ-தொழில்துறை பிணைப்பினால்” அச்சறுத்தப்படுகிறது என்று ஐசனோவர் எச்சரித்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஒபாமா கிட்டத்தட்ட அமெரிக்க ஜனநாயகம் ஒரு உடையும் நிலையை அணுகுகிறது என்பதை ஒப்புக் கொண்டார்.

“பயங்கரவாதத்தின் மீதான போர்” தொடங்கி ஒரு தசாப்தத்திற்குப்பின், “அமெரிக்கா எதிரெதிர் திசைகளை நோக்கி நிற்கிறது” என்று ஒபாமா எச்சரித்தார். “இப்போராட்டத்தின் தன்மை மற்றும் பரப்பை நாம் வரையறுக்க வேண்டும் அல்லது அது நம்மை வரையறுத்துவிடும். ஜேம்ஸ் மாடிசனின் எச்சரிக்கையான, எந்த ஒரு நாடும் தொடர்ச்சியான போரை நடத்துவதின் மத்தியில் அதன் சுதந்திரத்தை காப்பாற்ற முடியாது என்னும் கூற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்து செப்டம்பர் 11 முதல் தற்போதைய நிர்வாகம் உட்பட அமெரிக்க ஆளும் வர்க்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கூறப்படும் போலிக்காரணமான “பயங்கரவாதிகளிடம்” இருந்து வரவில்லை, மாறாக அரசுக்குள்ளேயே இருந்துதான் வருகிறது.

ஒபாமாவின் உரை, எக்கட்சிக்காக அவர் வாதிடுகிறார் என்பதைக் குறிக்கும் விவாதத்தில் ஈடுபடாமல் அரச அமைப்புகளுக்குள் இருக்கும் கடுமையான மோதல்களில் இருந்து வெளிவந்துள்ளது என்பது தெளிவு. சில நேரங்களில் அவர் விடையிறுப்பை எதிர்பார்ப்பது போல் பேச்சை நிறுத்திக் கொள்ளுவார். தன்னுடைய நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து, ஏதோ சம்பவங்கள் வெளிப்புறத்தில், தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கும் சக்திகளால் இயக்கப்படுவது என்பதைப் போல் கிட்டத்தட்ட ஏதும் இயலாத மனப்பாங்குடன் உரையாற்றினார்.

இது ஒரு நம்பிக்கை மிகுந்த தலைமைப் பிரதிநிதியின் உரை அல்ல. உள் முரண்பாடுகளால் சிதைந்து கொண்டு வரும் முற்றுகையில் இருக்கும் ஒரு நிர்வாகத்தின் பிரதிநிதியுடைய உரை, இதில் அரசாங்கத்தின் மீது அவருடைய கட்டுப்பாடு முற்றிலும் கேள்விக்குரியதாக இருக்கிறது.
ஜனாதிபதி பலமுறையும் சட்டவிரோத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்துக் குறிப்பிட்டார். அமெரிக்க அரசாங்கம் “எமது அடிப்படை மதிப்புக்களை சமரசத்திற்கு உட்படுத்திவிட்டது—நம் விரோதிகளை விசாரிக்கையில், தனிநபர்களை சட்டத்தின் ஆட்சிக்கு விரோதமாக காவலில் வைத்து சித்திரவதையை பயன்படுத்தியது” என்று ஒப்புக் கொண்டார்.

“சட்டத்தின் ஆட்சிக்கு எதிராக” என அவற்றை குறிப்பிட்டதின் மூலம், இவருடைய நிர்வாகத்திலும் தொடரும் அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை, குற்றத்தன்மை உடையவை, அரசியலமைப்பிற்கு முரணானவை என்பதை ஒபாமா நடைமுறையில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இந்த நடவடிக்கைகளை ஒபாமா பாதுகாக்கையில்; தான் அரசியலமைப்பை மீறியதில் நேரடிப் பொறுப்பு கொண்டிருப்பதாகவும், அதற்கு அவர் பொறுப்பு கூறவைக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டிய வகையில் வெளிப்படையாக அவருடைய பதட்டத்தையும் புலப்படுத்தியுள்ளார்.

ஒபாமா, இந்த முடிவுகளை எடுப்பதில் பலரும் தொடர்புபட்டுள்ளனர் என மீண்டும் மீண்டும் தன் பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தினார். “பலத்தை பயன்படுத்த காங்கிரஸ் ஒப்புதல் கொடுத்துள்ளது மட்டுமின்றி, அமெரிக்கா நடத்தும் ஒவ்வொரு தாக்குதல் குறித்தும் அதனிடம் கூறப்படுகிறது, ஒவ்வொரு தாக்குதல் குறித்தும்” என அவர் வலியுறுத்தினார். “இவற்றில் நாம் ஒரு அமெரிக்க குடிமகனை இலக்கு கொண்டதும் அடங்கும்.”
அமெரிக்க மக்களிடம் இருந்து மறைக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சி வகைகளில் இருந்து ஒரு வெளிப்படையான உடைவிற்கு தயாரிப்புக்கள் முன்னேறி உள்ளன. “பயங்கரவாதத்தின் மீதான” போர் என்னும் வடிவமைப்பில், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஜனநாயகத்தை முடிவு நிலைக்கு அருகே கொண்டுவந்து விட்டது. முதலில் புஷ், பின்னர் ஒபாமாவின் கீழ், நிர்வாகத்துறை போர் நடத்த, அமெரிக்க மக்களின் மீது ஒற்றுவேலை பார்க்க, சித்திரவதை செய்ய, காலவரையற்று குற்றச்சாட்டு இல்லாமல் கைதிகளை காவலில் வைக்க, அவர்களை இராணுவக் குழுக்கள் மூலம் விசாரிக்க, அமெரிக்க குடிமக்கள் உட்பட எவரையும் எங்கேயும் கொல்ல, முறையான வழிவகைகள் இன்றி நடைபெறுகின்றன.

ஒரு மாதத்திற்கு சற்று கூடுதலான காலத்தில், போஸ்டன் நெடுந்தூர ஓட்டத்தின்போது விளக்கப்படாத குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து நகரம் முழுவதும் கிட்டத்தட்ட இராணுவ ஆட்சியின்கீழ் பூட்டிவைக்கப்பட்டது போல் இருந்தது. அப்பொழுது WSWS குறிப்பிட்டது: “போஸ்டன் நிகழ்வுகள், அமெரிக்காவில் சர்வாதிகார ஆட்சி வழிவகைகள் நிறுவப்படுவதற்கான முறைகள் அப்பட்டமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.” மீண்டும் செப்டம்பர் 11 தாக்குதல் போல், இது “பயங்கரவாதத்தின் மீதான போரை தோற்றுவித்துள்ளது. குண்டு வைத்தவர்கள் அரச எந்திரத்தின் ஒரு பிரிவினரால் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டன, நிகழ்வுகள் புதிய, முன்னோடியில்லாத வகையில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை நடத்த பற்றி எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஜனநாயகத்தின் நிலைமுறிவு என்பது இராணுவம், உளவுத்துறைக் அமைப்பின் வலிமை பாரியளவில் பெருகியிருப்பதுடன் இணைந்துள்ளது. இந்த நிறுவனங்கள் கிட்டத்தட்ட தாமே சட்டங்கள்போல் செயல்படுகின்றன.

குடிமக்கள்-இராணுவ உறவுகள் பிரச்சினைகள் ஆழ்ந்த முறையில் ஆளும் வர்க்கத்தால் விவாதிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்திய வகையில் நியூயோர் டைம்ஸில் திங்களன்று ஒரு கட்டுரை முன்னாள் ஆப்கானிஸ்தானிய இராணுவப் படைகளின் தலைவரும் ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினென்ட் ஜெனரலுமான கார்ல் ஐகென்பெர்ரி, மற்றும் வரலாற்றாளர் டேவிட் கென்னடி ஆகியோரால் எழுதப்பட்டது வெளியிடப்பட்டது. “அமெரிக்கர்களும் அவர்களுடைய இராணுவத்தினரும் பிரிகின்றனர்” என்ற தலைப்பில், இரு ஆசிரியர்களும் இராணுவத்தின் விரிவாக்கம் “குறைந்தப்பட்ச குடிமக்கள் ஈடுபாடு, புரிந்துகொள்ளுதல்” என்னும் நிலைமையின்கீழ் நடக்கிறது என்று கவலை கொண்டுள்ளனர்.

இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் ஒருவகையில் கட்டாய இராணுவ சேவை தேவை என அழைப்பு விடுகின்றனர்; “ஆயுதப் படைகள் வருங்காலத்திற்கு கருவியாக இருக்கையில், குடிமக்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. இராணுவ அதிகாரத்தைப் பற்றி ஆடம்ஸ் குறிப்பிட்டுள்ளது போல், “ஒரு புத்திசாலித்தனமான, நிதானமான மக்கள் அதன்மீது எப்பொழுதும் கவனமான, விழிப்புணர்வுகொண்ட பார்வையை கொண்டிருப்பர்.” என்று முடித்துள்ளனர்.

முடிவில்லாத போர் சூழ்நிலையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சியின் முன்னேறிய நிலை, ஆளும் வர்க்கத்தின் பல பிரிவுகளிடையே ஆழ்ந்த மோதல்களை தோற்றுவித்துள்ளது. இராணுவம், CIA, FBI இவற்றிற்கு இடையேயும், உள்ளேயும், தொடர்ந்த கன்னை மோதல்கள் உள்ளன, ஆளும் வர்க்கத்தின் மோதல்கள் அமெரிக்க மக்களின் முதுகுக்கு பின்னே நடாத்துப்படுகின்றன.

ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் ஒரு வெளிப்படையான இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுக்கையில், முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் சட்ட நெறி இவற்றுடனான முறிவு பெரும் ஆபத்துக்களை கொண்டுள்ளன. அமெரிக்க அரசியல் அமைப்பு முறையின் சட்டபூர்வமான தன்மை அரசியலமைப்பின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஆளும் வர்க்கம் அதன் ஆட்சி அடித்தளமாகக் கொண்டிருக்கும் அரசியல் அஸ்திவாரங்களையே அழித்துக் கொண்டிருக்கிறது. அவர்களே பெரும் சட்டத்தை உடைப்பவர்களாக இருக்கையில், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசுக்கு வரும் சவால்களை சந்திக்கையில் அவர்கள் சட்ட நெறியை ஆதரவிற்கு எதிர்பார்க்க முடியாது. அரசியலமைப்பு சட்டபூர்வத்தன்மையை அவை அதிகம் அகற்றும் நிலையில், அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் ஆளும் உயரடுக்கு இன்னும் சட்டபூர்வமற்றதாகத்தான் மக்கள்முன் காட்சியளிக்கும்.

ஆயினும், இக்கவலைகள் இருந்தபோதிலும், ஒபாமாவோ ஆளும் வர்க்கத்தின் எப்பிரிவுகளுமோ எதையும் வழங்கத் தயாராகவில்லை. இது ஒபாமாவின் உரையில் இருக்கும் விந்தையான முரண்பாட்டுத் தன்மையை விளக்குகிறது.

அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை பற்றிக் தனது கவலையை தெரிவிக்கையில், ஒபாமாவின் கருத்துக்களின் மத்திய நோக்கத்தில் ஒன்று அமெரிக்கக் குடிமக்களை ஒழுங்கான வழக்குவிசாரணையற்று படுகொலை செய்தல் என்ற இதுவரை எடுக்கப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளை மோசமான முறையில் மீறப்பட்டுள்ளதை பாதுகாத்தலாகும். நிர்வாகத்தின் முடிவினை அங்கீகரிக்கும் ஏதோ ஒருவகை வழமைக்குமாறான நீதிவிசாரணை முறைகள் மூலமான ஒரு போலியான சட்டபூர்வ மூடிமறைப்புடன் இச்செயற்பாடுகள் தொடரும் என அவர் கூறினார்,

இராணுவ வாதத்தை பொறுத்தவரை, “பயங்கரவாதத்தின் மீதான முடிவிலா போரை”முடிக்க வேண்டும் என வலியுறுத்திய ஒபாமா, உலகம் முழுவதும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினார். சிரியாவில் “எழுச்சியாளர்களுக்கு” ஆயுதம் வழங்குவது முடுக்கிவிடப் பட வேண்டும் என்று அவர் கூறினார். அவர்களுள் பலரும் அல்குவேடாவுடன் பிணைந்துள்ளவர்கள்; இது ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும். அதே நேரத்தில் அமெரிக்கா ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் ஆசியாவை நோக்கி நகர்வதற்கு, சீனாவுடன் இன்னும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கு மத்திய கிழக்கில் இருக்கும் தங்கள் படைகளில் சிலவற்றைப் பிரித்தெடுக்க விரும்புகின்றன.

இறுதியாக, ஒபாமாவின் பகிரங்கப் பேச்சில் சொந்த சந்தேக வெளிப்பாடுகள் எப்படி இருந்தபோதிலும், எதையும் மாற்ற அவருக்குத் திறனோ விருப்பமோ கிடையாது. ஜனநாயகக் கட்சிக்கு வக்காலத்து வாங்குபவர்களின் முயற்சி, நியூ யோர்க் டைம்ஸ், நேஷன் உட்பட, ஒபாமாவின் உரையை மாறுதல் கொடுக்கும் இணைந்த நிகழ்வு, இதில் சுயதிருப்தி, ஏமாற்றுத்தனம், நம்பிக்கை ஆகியவை உள்ளன என அளிக்க முற்பட்டுள்ளன. இந்த உண்மையை உறுதிப்படுத்துவதுபோல், ஒபாமா நேற்று நினைவு தினத்தன்று நாடு “இன்னமும் போரில்தான் உள்ளது.” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முதலாளித்துவம் மற்றும் இராணுவம்/உளவுத்துறையின் மிகச்சக்தி வாய்ந்த பிரிவுகள் ஒபாமா உலக மேலாதிக்கத்திட்டத்தை கைவிட பரிசீலிக்கிறார் என ஒரு கணம் கருதினால், அவருடைய நிர்வாகம் ஒரு மிருகத்தனமான மற்றும் விரைவான முடிவிற்கு வந்துவிடும்.
முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி என்பது, எதிர்வரவிருக்கும் எழுச்சியின் தவிர்க்க முடியாத முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக பழையமுறையில் வாழமுடியாத நிலையில் மட்டுமல்லாது அத்துடன் ஆளும் வர்க்கங்களும் பழைய முறையிலேயே ஆட்சி நடத்த முடியாதாலும் புரட்சிகள் எழுகின்றன என்பதே பொதுவான அரசியல் விதி என்பதை வரலாறு ஆதாரம் காட்டுகிறது.

வர்க்க ஆட்சியின் நெருக்கடி மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் சரிவு ஆகியவை ஒரு புறம் வெளிநாடுகளில் முடிவில்லாப் போரிலும், மறுபுறம் கட்டுப்படுத்தமுடியாத, வரலாற்றளவில் முன்னோடியில்லாத சமூக சமத்துவமின்மையிலும் வேர்களைக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வுகள் தொழிலாள வர்க்கத்திற்கு தீவிர ஆபத்துக்களை முன்வைக்கின்றன. அமெரிக்காவில் சர்வாதிகாரம் வெளிப்படுவது இயலாததல்ல என்பது மட்டுமல்ல, அது ஏற்கனவே வெளிப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.

ஜனநாயக உரிமைகளைக் பாதுகாத்தல் என்பது ஒரு வர்க்கப் பிரச்சினையைவிடக் கூடுதலானது ஆகும். முதலாளித்துவ, ஏகாதிபத்திய இராணுவ வாத அடிப்படையில் ஜனநாயகம் என்பது சாத்தியமற்றது. அதன் நலன்களை பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அரச எந்திரத்தின் எந்தப் பிரிவையோ அல்லது அதன் துணை அமைப்புக்களையோ நம்ப முடியாது.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வு, மிக உயர்ந்த அவசர தேவையாக உள்ளது. இதன் பொருள், எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச சமத்துவ கட்சியை கட்டமைப்பது ஆகும்.

1 comments :

Anonymous ,  June 4, 2013 at 10:55 AM  

Egoism and sense of superiority complex cannot be a good example in our human lives.Sublime example for poverty and humility promoting an international frienship would an example to any country to have a peaceful world.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com