Friday, June 21, 2013

கிறிஸ்தவ மத போதகரின் வயிற்றுப் பகுதியை பலமாகத் தாக்கினாராம் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர்!

பொதுபலசேனா அமைப்பின் செயலாளரான கலகொட அத்தேஞானசார தேரர் தான் தேவாலயத்தினுள் வீழ்ந்து கிடந்த போது, அங்கு வந்து ஏதோ அசாதாரண வார்த்தைகளால் திட்டிவிட்டிக் கொண்டே தனது வயிற்றுப் பகுதியை தாக்கினார் என தேவாலயம் ஒன்று தாக்கப்பட்ட வழக்கின் பிரதான சாட்சியான கிறிஸ்தவ மதபோதகரான சிட்னி ரோஷான் நீதிமன்றில் நேற்று சாட்சியமளித்தார்.

மாலபே, தலாஹேன பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி பௌத்த மத தேரரர்கள் உள்ளடங்கிய குழுவினரால் தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அரச தரப்பு சாட்சியான போதகர் சிட்னி ரோஷான் என்டீஷன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச தரப்பால் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கின் முதல் நாளான நேற்று சாட்சியின் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கையும் சாட்சி மீதான குறுக்கு விசாரணையும் இடம்பெற்றது. அரச தரப்பு பிரதான சாட்சியான போதகர் சிட்னி ரோஷான் என்டீஷன், குறித்த தேவாலயம் மீதான தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தார் அன்றைய தினம் குறித்த தேவாலயத்துக்கு முன்னால் கூடியவர்கள் தேவாலயத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தியதாகவும் அங்கு பல பௌத்த தேரர்கள் திரண்டிருந்ததாகவும் பிரதான சாட்சியான போதகர் விபரித்தார்.

அத்துடன் தேவாலயத்தில் ஆராதனைகளுக்காக கூடிய மக்கள் சம்பவத்தின் போது அச்சமடைந்த நிலையில் தேவாலயத்தினுள் முடங்கியிருந்ததாகவும், பொலிஸாரின் தலையீட்டுடன் அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் தானும் தனது சகோதரன் உள்ளிட்ட சிலரும் தேவாலயத்தில் இருந்த போதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மூடப்பட்டிருந்த தேவாலயக் கதவினை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் தன்னை தாக்கியதாகவும், இதனால் தனது முகம், தலை பகுதிகள் பாதிக்கப்பட்டதாகவும் அதற்காக தான் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும் பிரதான சாட்சியான போதகர் தெரிவித்தார்.

இதனையடுத்து பிரதிவாதி ஞானசாரதேரர் தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நிஹால் குணசிங்க சாட்சியை குறுக்கு விசாரணை செய்ததுடன் தமது கட்சிக்காரரான ஞானசார தேரர் அவ்விடத்துக்கு சமாதானத்தை ஏற்படுத்தவே சென்றதாக வாதிட்டார். அத்துடன் சம்பவம் தொடர்பில் பிரதான சாட்சி பொலிஸ் நிலையத்தில் அளித்த வாக்கு மூலத்தில் தனது வயிற்றுப்பகுதியில் தாக்கப்பட்டமை தொடர்பிலோ அல்லது ஞானசாரதேரர் தொடர்பிலோ எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த அவர் தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என வாதிட்டார்.

பிரதிவாதிகள் தரப்பில் சட்டத்தரணி நிஹால் குணசிங்க, ரொஷான் புத்திககமகே உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அரச தரப்பு சாட்சிகளுக்காக ஹரிஸ் சமரநாயக்க தலைமையிலான சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகளுக்கு எதிராக கலகம் விளைவித்தமை, தாக்குதல் நடத்தியமை, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் அரச தரப்பால் 15 சாட்சியங்களின் பெயர்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கருத்திற்கொண்டே நீதவான் இவ்வழக்கினை எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

1 comments :

Anonymous ,  June 21, 2013 at 11:39 AM  

Religious freedom is very essential in a democratic country.Why not the
Buddhist spiritual monks play an important role in preaching the values of Buddhism.Buddhism spreaded in Srilanka during the period of King Deva Nambiya Tissa and his wife.
queen Anula became a female Buddhist female monk too.They served the people.They touched the heart of the people by doing excellent things.This is very essential for monks to do that.You cannot achieve anything by force,afterall that`s just bullshit Bullying cannot bring any changes,it may be a cause for the downfall of Buddhism

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com